திருமணம் சுப முகூர்த்தம் குறிப்பது

திருமணம் பொருத்தம் என்பது இறைவனின் அருள், அப்படி இறைவன் அருளால் நடைபெறும் திருமணத்தை சரியான சுப முகூர்த்த நேரம் குறித்து நடத்த வேண்டும். ஆண் பெண் ஜாதகத்தில் கட்டங்கள் சரியாக இல்லையென்றாலும் முகூர்த்த நேரத்தில் கட்டும் தாலி பல பிரச்சனைகளை தள்ளிவைக்கும் வலிமை உண்டு. ஆதலால் நல்ல ஜோதிடரிடம் சென்று முகூர்த்தம் குறித்து திருமணம் நடத்துவது சிறந்தது.

திருமணம் சுப முகூர்த்தம்
திருமணம் சுப முகூர்த்தம்

திருமணம் முகூர்த்தம் குறிப்பது பற்றி தெரிந்துகொள்வோம்

காலெண்டடரில் உள்ள முகூர்த்த நாளில் திருமணம் தேதியை நீங்களே குறித்துக்கொள்ளாதீர்கள் நன்மை பயக்காது. மேலும் அது பொதுவானது. இருப்பினும் இந்த பதிவில் எப்படி முகூர்த்தம் குறிப்பது என்று ஓரளவுக்கு தெரிந்து கொள்வோம். என்னென்ன நாம் பார்க்க வேண்டும் என்று பார்ப்போம்.

இறைவன் அருளால் முன்னோர்கள் ஆசியுடன் சுற்றம் சூழ சாட்சியாகக் கொண்டு, மணமகன் மணமகளின் திருமாங்கல்ய சரடை மூன்று முடிச்சு கட்டும் நேரம் அமையவேண்டும். சுபமுகூர்த்தம் குறிப்பது பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

சுப முகூர்த்தம் குறிக்கும்போது நாம் கவனிக்க வேண்டியது

ஆண் பெண் இருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்து லக்கின பொருத்தம், பாவக ஆய்வு, நட்சத்திர பொருத்தம், தோஷங்கள் ஆய்வு பார்த்துதான் திருமண பொருத்தம் செய்ய வேண்டும்.

முகூர்த்தம் குறிக்க பெண்ணின் ஜாதகமே பிரதானம், இருப்பினும் சுபமுகூர்த்தம் என்ற நாழிகை குறிக்க, நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல திதி, நல்ல யோகம், தசா புத்திகள், கோட்சர நிலவரம், தாரா பலம் மற்றும் சந்திர பலம் எவ்வாறு இருக்கிறது என்று மணமக்கள் இருவரின் ஜாதகம் கொண்டும் ஆய்வு செய்து குறிக்க வேண்டும். (குறிப்பு: பெண்ணுடைய ஜாதகம் பிரதானம் ஆண் ஜாதகத்தில் சரியாக இல்லாமல் இருந்து பெண் ஜாதகத்தில் சில அமைப்புகள் நன்றாக உள்ளது என்றால் முகூர்த்தம் குறிக்கலாம்.)

ஆணின் ஜாதகத்தில் உள்ள தோஷத்தை விட பெண்ணுக்கு அதிகமாக தோஷம் உள்ளது என்றால் பொருத்தம் செய்ய கூடாது. சமமாக இருந்தால் திருமணம் செய்யலாம்.

முகூர்த்தம் குறிக்க பெண்ணின் நட்சத்திரத்தை கொண்டு தாரா பலம், சந்திர பலம் கணித்துப் பார்க்கவேண்டும்.

முகூர்த்த லக்னம் குறிக்க சுப லக்னங்களான ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மாசி மாதத்தில் வரும் கும்பம் லக்னம் உத்தமமாக இருக்கும்.

சூரிய உதயத்திற்கு முன், பின் அரை நாழிகைகளில் அமையும் கோதூளி லக்கினமும் சுபகாரியங்களுக்கு ஏற்றதாகும். எந்த லக்கினமாக இருந்தாலும் கோதூளி லக்கினத்தில் திருமணம் செய்யலாம்.

முகூர்த்த லக்னத்திற்க்கு 2,7,8ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.(சுப கிரகங்கள் கூட இருக்கக்கூடாது)

பவம், பாலவம், கௌலவம், தைத்துளை, கரசை, இந்த ஐந்து கரணங்களும் சுபமானதாகும்.

முகூர்த்தம் குறிக்க உகந்த நாட்கள் திங்கள், புதன், வியாழன், வெள்ளி மட்டுமே. ஞாயிற்றுக்கிழமை மத்திமம் பலன் மட்டுமே.

அஸ்வினி, ரோகினி, பூசம், ஹஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி முகூர்த்தம் குறிக்க உன்னத நட்சத்திரங்கள் ஆகும்.

சுக்கிரன், குரு அஸ்தமனம் ஆகாமல் இருக்க வேண்டும்.

திருமணம் சுப முகூர்த்தம் குறிக்க தவிர்க்க வேண்டியவை

ஆடி, மார்கழி மாதங்கள் மற்றும் மலமாதங்களில் திருமண முகூர்த்தம் குறிக்கக்கூடாது. மலமாதம் என்றால் ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமியோ அல்லது அமாவாசையோ வருவது.

தீதுறு நட்சத்திரங்களான பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம், உடைபட்ட நட்சத்திரம் முகூர்த்த நாட்களைத் தவிர்க்க வேண்டும்.

அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி திதிகள் மற்றும் கரிநாள், மரண யோகம் இவற்றையெல்லாம் தவிர்க்கலாம்.

ஆண் பெண் இருவருக்கும் ஜென்ம நட்சத்திர நாள், சந்திராஷ்டம நாட்களில் முகூர்த்தம் குறிக்கக்கூடாது.

சனி, செவ்வாய்க் கிழமைகளில் முகூர்த்தம் குறிப்பதைத் தவிர்க்கலாம்.

இருவரது ராசி/ லக்னமும் ஒருவருக்கொருவர் 6, 8, 12ஆம் வீடுகளில் மறையக்கூடாது.

முகூர்த்த நேரம் குறிக்கும்பொழுது ராகு காலம் எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் திருமணம் செய்யக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

முகூர்த்த லக்னத்திற்க்கு 2,7,8ம் இடத்தில்பாப கர்த்தாரி கூடாது.

பொதுவாக மேஷம், சிம்மம், விருச்சிக லக்னங்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு பல்வேறு அமைப்புகளில் திருமண முகூர்த்தம் குறிக்க வேண்டும். இன்னும் பல சூட்சமங்கள் அடங்கியுள்ள்ளன. ஓரளவுக்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பதிவிட்டுள்ளேன். இது உங்களுக்கு புரிந்தவரையில் தெரிந்துகொள்ளுங்கள் மேலும் தெளிவாக முகூர்த்தம் குறிக்க அருகில் உள்ள ஜோதிடரை அணுகி துல்லியமாக கணித்து அனைவரும் இன்புற்று வாழ வேண்டுகிறேன்!

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

Read More:-

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்