கந்தசஷ்டி விழா

Kanda Sasti Vizha in Tamil – இந்த பதிவில் திருச்செந்தூர் சூரஸம்ஹார நிகழ்வு, கந்தசஷ்டி விழா, கந்த சஷ்டி விரதம், சூரபதுமன் வதம், கந்தசஷ்டி விரத விதிமுறைகள் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா

கந்த சஷ்டி விரதம்

அறியாமை என்னும் இருளை நீக்கி, மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் கடைபிடிக்கப்படும் விரதங்களுள் தலையானது கந்தசஷ்டி விரதம்.
பல்வேறு வேண்டுதல்கள் இருந்தாலும் முக்கியமாக குழந்தைப்பேறு வேண்டி பெண்கள் விரதம் எடுப்பார்கள். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. கந்தசஷ்டியில் விரதமிருந்தால் “அகப்பையாகிய “கருப்பையில்” கரு உண்டாகும் என்பது பொருள்.

கந்தசஷ்டி விரதம் எடுக்கும் காலத்தில் பக்தர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி முருகப் பெருமானின் பெருமை பேசி, பாசுரங்களை பாடி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் நோக்கமாகும்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கும். அதிலிருந்து 6வது நாள் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும். சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சார்ந்த பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நடைபெறும். உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் திருச்செந்தூரில் 6 நாள் விரதம் எடுத்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். இவ்வாறு விரதம் எடுக்கும் பக்தர்களின் நினைத்த காரியம் சித்தி ஆகும்.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

கந்தசஷ்டி விழா – சூரபதுமன் வதம்

கந்தசஷ்டி விழா – சூரபதுமன் வதம் – காசிப முனிவரும் மாயை எனும் அரக்க குல பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், யானை முகத்துடன் கூடிய தாரகனும், ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணையும் பெற்றேடுத்தனர்.

சூரபதுமன் சிவனை நோக்கி கடுந் தவம் புரிந்து 108 யுகம் வாழவும், 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றிருந்தான். இவ்வரத்தினை பெற்ற சூரன் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

அசுரர்களின் இக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டு தனது நெற்றிக் கண்களையும் திறக்க சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்”(மனம்) என்ற ஆறாவது முகமும் தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயுபகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் சேர்த்தார்.

அந்த தீப்பொறிகள் ஆறும், ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்து வந்தனர். உலக நாயகி பார்வதி அம்மன் தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு, ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினார். ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவைப் பெற்றமையால் “ஆறுமுக சுவாமி” எனப் பெயர் பெற்றார்.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபரான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவ அக்னியில் தோன்றியவன். ஆதனால் “ஆறு முகமே சிவம்: சிவமே ஆறுமுகம்” எனப்படுகிறது.

கந்தசஷ்டி விரத விதிமுறைகள்

கந்தசஷ்டி விழா விரதம் எடுக்கும்பொழுது பக்குவமான மனதுடன் நாம் இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து வழிபடும் தவமே கந்தசஷ்டி விரதம் ஆகும்.

தினமும் நீராடி, உலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து கந்த பெருமானை நினைத்து தியானம் செய்ய வேண்டும். அதேபோல விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாமல் கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் இறை அன்போடு வழிபாடு செய்ய வேண்டும்.

நீர் மட்டும் பருகி விரதம் எடுக்கின்றனர். தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் மட்டும் அருந்தி விரதம் எடுக்கலாம். சிலர் பலகாரம் மட்டும் உண்டு விரதம் எடுக்கலாம். ஒரு வேலை மட்டும் உணவு உட்கொண்டும் விரதம் எடுக்கலாம். பால் மட்டும் அருந்தி விரதம் எடுக்கலாம். ஒருவருடைய வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டு விரதம் எடுப்பது சிறப்பாகும்.

குறிப்பு: விரதம் ஆரம்பிக்கும்போது இறைவனிடம் நல்மனதுடன் வேண்டி பின்பு தொடங்க வேண்டும்.

சஷ்டி விரதம் நன்மைகள்

ஒருவர் கந்தசஷ்டி விரதம் எடுத்து வர எண்ணிய எண்ணம் ஈடேறும். விரத தினங்களில் வீட்டில் கந்த சஷ்டி கவசம் ஒலிப்பதும், கந்தசஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அலங்காரம், வாசிப்பதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தீய சக்திகளை விரட்டி அடிக்கும். சுப காரியங்கள் கைகூடும். இதுவரை தெரியாதவர்கள் இனி இந்த விரதம் மேற்கொண்டு பயன்பெற்று முருகன் அருள் பெறலாம்.

கந்தசஷ்டி விழா வேறு புராண காரணங்கள்

கந்தசஷ்டி விழா கொண்டாடுவதற்கு சூரபத்மன் வதம் ஒரு காரணம், கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்திலும் கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் சிலர் உலகத்தின் நன்மைக்காக யாகம் வளர்த்தனர். ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் இருந்து எழுந்த நெருப்பில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் உருவாகின. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப்பெருமான அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

கந்தப்புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெற ஐப்பசி மாத அமாவாசையிலிருந்து வளர்பிறை வரை ஆறுநாட்கள் முருகணை எழுந்தருளச்செய்து நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இந்த நிகழ்வையே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது.

தெரிந்துகொள்க 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்