பாரதியார் பாடல்கள் முருகன்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

இந்த பதிவில் பாரதியார் பாடல்கள் முருகன் என்ற தலைப்பில் ‘முருகன் பாட்டு‘ மற்றும் ‘வள்ளி பாட்டு‘ மற்றும் முருகன் பற்றிய கவிதைகள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

பாரதியார் பாடல்கள் முருகன்
பாரதியார் பாடல்கள் முருகன்

முருகன் பாட்டு

ராகம் -நாட்டைக் குறிஞ்சி தாளம் – ஆதி

பல்லவி

முருகா! முருகா! முருகா!

சரணங்கள்

வருவாய் மயில் மீதினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)

அடியார் பலரிங் குளரே,
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)

சுருதிப் பொருளே, வருக!
துணிவே, கனலே, வருக!
சுருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)

அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்! சரணம்! சரணம்!
குமரா பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே சரணம்! (முருகா)

அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்! (முருகா)

குருவே! பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)

வேலன் பாட்டு – பாரதியார் பாடல்கள் முருகன்

ராகம் – புன்னாகவராளி தாளம் – திஸ்ர ஏகம்

வில்லினை யொத்த புருவம் வளர்த்தனை
வேலவா! – அங்கோ
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக் – கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன் – சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை – ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக்
கரந்தொட்ட வேலவா!

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை – உடல்வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்
செல்வத்தை – என்றும்
கேடற்ற வாழ்வினை, இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன் – பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்
மானைப்போல் – தினைத்
தோட்டத்தி லேயொரு பெண்ணை
மணங்கொண்ட வேலவா!

ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப
மாகுதே, – கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே.
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும் © இங்கு
நீங்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!

கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக் – கண்டு
கொக்கரித் தண்டங் குலுஙக
நகைத்திடுஞ் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள் – எங்கள்
வைரவி பெற்ற பெருங்கன
லே, வடி வேலவா!

கிளி விடு தூது – பாரதியார் பாடல்கள் முருகன்

பல்லவி

சொல்ல வல்லாயோ? – கிளியே!
சொல்ல நீ வல்லாயோ?

அனுபல்லவி

வல்ல வேல்முரு கன்தனை -இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)

சரணங்கள்

தில்லை யம்பலத்தே – நடனம்
செய்யும் அமரர்பிரான் -அவன்
செல்வத் திருமகனை – இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)

அல்லிக் குளத்தருகே – ஒருநாள்
அந்திப் பொழுதினிலே – அங்கோர்
முல்லைச் செடியதன்பாற் -செய்தவினை
முற்றும் மறந்திடக் கற்றதென்னேயன்று (சொல்ல)

பாலை வனத்திடையே – தனைக் கைப்
பற்றி நடக்கையிலே – தன் கை
வேலின் மிசையாணை – வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)

முருகன் பாட்டு

வீரத் திருவிழிப் பார்வையும் – வெற்றி
வேலும் மயிலும்என் முன்னின்றே – எந்த
நேரத் திலும்என்னைக் காக்குமே- அனை
நீலி பராசக்தி தண்ணருட் – கரை
ஓரத்திலே புணை கூடுதே! – கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே- மலை
வாரத் திலேவிளை யாடுவான் -என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான்.

வேடர் கனியை விரும்பியே- தவ
வேடம் புனைந்து திரிகுவான்- தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே -முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்- சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட – இருட்
பார மலைகளைச் சீறுவான்-மறை
யேடு தரித்த முதல்வனும் – குரு
வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.

தேவர் மகளை மணந்திடத் -தெற்குத்
தீவில சுரனை மாய்த்திட்டான், – மக்கள்
யாவருக் குந்தலை யாயினான், – மறை
அர்த்த முணர்ந்துநல் வாயினன், – தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான், – இந்தப்
பாரில் அறமழை பெய்குவான், -நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான், – நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.

தீவளர்த் தேபழ வேதியர் – நின்றன்
சேவகத் தின்புகழ் காட்டினார், – ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார், – நின்றன்
மேன்மையி னாலறம் நாட்டினார், – ஜய!
நீவள ருங்குரு வெற்பிலே – வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம் – வரம்
ஈவள் பராசக்தி யன்னை தான் – உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம் -நின்றன் (வீரத்)

எமக்கு வேலை – பாரதியார் பாடல்கள் முருகன்

தோகைமேல் உலவுங் கந்தன்
சுடர்க்கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவது எமக்கு வேலை.

வள்ளிப்பாட்டு – 1

பல்லவி

எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ
குறவள்ளீ, சிறு கள்ளி!

சரணங்கள்

(இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
யோரத்தி லேயுனைக் கூடி -நின்றன்
வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி – குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை
யோரத்திலே அன்பு சூடி – நெஞ்சம்
ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்
பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)

வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
விரிந்து மொழிவது கண்டாய் – ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பிணி லேயொன்று பட்டு – நின்றன்
பிள்ளைக் கிளிமென் குதலியி லேமனம்
பின்ன மறச் செல்லவிட்டு – அடி
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே! . நினைச்
சேர விரும்பினன் கண்டாய். (எந்த நேரமும்)

வட்டங்க ளிட்டுங் குளமக லாத
மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல – நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின்
மேனி தனைவிட லின்றி – அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
இரவியைப் போன்ற முகத்தாய்! – முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்த நேரமும்)

வள்ளிப் பாட்டு – 2

ராகம் -கரஹரப்ரியை தாளம்-ஆதி

பல்லவி

உனையே மயல் கொண்டேன் -வள்ளீ!
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்! (உனையே)

சரணம்

எனை யாள்வாய், வள்ளீ! வள்ளீ
இளமயி லே! என் இதயமலர் வாழ்வே!
கனியே! சுவையுறு தேனே
கலவியி லேஅமு தனையாய், – (கலவியிலே)
தனியே, ஞான விழியாய்! – நிலவினில்
நினமருவி, வள்ளீ, வள்ளீ!
நீயா கிடவே வந்தேன். (உனையே)

இறைவா! இறைவா!

பல்லவி

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (ஓ – எத்தனை)

சரணங்கள்

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

முக்தியென் றொருநிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்
பக்தியென் றொரு நிலை வகுத்தாய் – எங்கள
பரமா! பரமா! பரமா! (ஓ – எத்தனை)

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்