Skip to content
Home » பொதுத் தமிழ் தகவல்கள் » திருக்குறள் – பாயிரவியல்

திருக்குறள் – பாயிரவியல்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் – அறத்துப்பால் – பாயிரவியல்

கடவுள் வாழ்த்து

குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

குறள் 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

குறள் 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

குறள் 4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

குறள் 6

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

குறள் 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

குறள் 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.

குறள் 9

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

குறள் 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

வான் சிறப்பு

குறள் 11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.

குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

குறள் 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

குறள் 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.

குறள் 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

குறள் 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

குறள் 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

குறள் 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

குறள் 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.

குறள் 20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

நீத்தார் பெருமை

குறள் 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

குறள் 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

குறள் 23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

குறள் 24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

குறள் 25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

குறள் 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

குறள் 27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

குறள் 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

குறள் 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

குறள் 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

அறன்வலியுறுத்தல்

குறள் 31

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?

குறள் 32

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.

குறள் 33

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

குறள் 34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

குறள் 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

குறள் 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

குறள் 37

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

குறள் 38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

குறள் 39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

குறள் 40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.

2 thoughts on “திருக்குறள் – பாயிரவியல்”

Comments are closed.