Skip to content
Home » பொதுத் தமிழ் தகவல்கள் » அறன் வலியுறுத்தல்

அறன் வலியுறுத்தல்

இந்த பதிவில் நாலடியார் பாடல்கள் விளக்கம் என்கிற தலைப்பில், அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தில் உள்ள 10 பாடல்கள் மற்றும் விளக்கங்கள் பற்றி பார்ப்போம்.(நாலடியார் பாடல்கள் தொகுப்பு வீடியோ)

நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 1

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.

பாடலின் பொருள்

முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாக, இப்பிறவியில், நல்லறிவு உடையவர்களாக பிறந்து, இளமையிலே அனைத்து வளங்களும் பெற்று, அறநெறிகளுக்கு உட்பட்டு உறுதியுடன் வாழ்வார்கள். அது போல அல்லாமல், தாமும் தவம் செய்வோம் என்று எண்ணி, உள்ளத்தில் உறுதி இல்லாமல் போலியாக முயற்சி செய்பவர்கள், அதனை செய்ய முடியாமல், துன்பமுற்று முயற்சியினை கைவிடுவார்கள்.

அதாவது, பெரிய மாளிகையை அண்ணாந்து பார்த்து, இங்கு வாழ்பவர்களே உண்மையாக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நினைத்து, அவர்களிடம் சென்று உதவி கேட்க முயன்று, உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியில் நின்று பார்த்து, தன் நிலையை எண்ணி வருந்துவது போன்றதாகும். என்கிறார்கள் சான்றோர்கள்.

நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 2

ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து
போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே – ஓவாது
தின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்
சென்றன செய் துரை.

பாடலின் பொருள்

நாம் இவ்வளவு விரைவில் இறந்துபோக மாட்டோம் என்று எண்ணாமல், அறத்தை மறந்து பொருளை விரும்பி முயன்று, நாம் மேலும்மேலும் பெருஞ் செல்வராவோம் என்று எண்ணி பொருளை சேர்க்க காரணமாயிருந்த தாழ்ந்த தன்மையுடைய நெஞ்சமே!. இடைவிடாமல் தொழிலில் நிலையாயிருந்து முயன்று நீ நினைத்தபடியே வாழ்ந்தாலும், இதோ என் ஆயுள் நாட்கள் கழிந்துவிட்டன. இனி மறுமைக்காக நான் என்ன செய்வேன் என்று புலம்புவதாக உள்ளது. ஆதலால், பொருள் சேர்ப்பதுதான், அறவழியில் நற்காரியங்களை செய்து பழகுக.

நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 3

வினைப் பயன் வந்தக்கால், வெய்ய உயிரா,
மனத்தின் அழியுமாம், பேதை; நினைத்து, அதனைத்
தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்து ஒருவுவார்.

பாடலின் பொருள்

முன் தீவினையின் பயனாக துன்பங்கள், இப்போது வந்து தாக்கினால், உடனே கடுமையாகப் பெருமூச்சு விட்டு, மனதால் வருந்தி சந்தோசத்தை இழப்பார். அறிவுடையார், அதனையே நினைத்து தொல்லையது என்று எண்ணாமல், அத்துன்பத்தை பழைய வினையினால் வந்ததென்று என்று உணர்ந்து, அதற்கேற்ப வாழ்க்கை நெறிகளை அறிந்து வாழ்வார். கடைசியில், அத்துன்பத்தின் எல்லையைக் கடந்து அப்பால் நீங்குவர்.

நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 4

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; – கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.

பாடலின் பொருள்

அருமையான உடலை பெற்றதன் பயனாக, உயிருக்கு பெரும் பயனாக விளங்கும் தரும காரியங்களை மிகுதியாக செய்து கொள்ள வேண்டும். கரும்பானது, தன்னை ஆலையில் இட்டு நசுக்கியவர்களுக்கு, தன்னிடம் உள்ள சாற்றை கொடுத்து, இன்புறுத்துவது போல, தருமங்கள் உடலை வருத்தி, மறுமையில் பேரின்பத்தை தரும். என்கிறார்கள் சான்றோர்கள்.

இங்கு மறுமை என்பதை பிற்காலத்தில் அல்லது தக்க சமயத்தில் அல்லது அடுத்த பிறவியில் என்று எடுத்து கொள்ளலாம்.

நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 5

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.

பாடலின் பொருள்

கரும்பை ஆலையில் நசுக்கி, வெல்லக்கட்டியினை எடுத்து கொண்டு, சக்கையை நெருப்பிலே போடும்போது, அதனைக் கண்டு கொஞ்சமும் வருத்தப்பட மாட்டார்கள். அது போலவே, உடம்பினை இச்சைகளுக்கு ஆட்படுத்தாமல், உண்மை பயனான அறநெறிகளை கடை பிடித்தவர்கள், எமன் வந்து உயிரை பறிப்பார் என்ற அச்சம் கொஞ்சமும் இருக்காது.

நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 6

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.

பாடலின் பொருள்

இன்றைக்கோ, அன்றைக்கோ, என்றைக்கோ, எப்போது வேணாலும் எமன் நம் உயிரை பறிக்கலாம், இந்த உண்மையை நினைத்து, தீய செயல்களில் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். சான்றோர்கள் கடைபிடித்த தரும செயல்களை உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யுங்கள்.

நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 7

மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் – தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.

பாடலின் பொருள்

மனிதனாக உடலெடுத்து பிறந்ததன் பெருமையை ஆராயும் பொது, செய்வதற்கு பல உண்டு. வெறும், நரம்பு , தசை முதலியவை சேர்ந்த உடலின் நன்மைக்கு என்று மட்டும் பாராமல், மேல் உலகத்தில் அனுபவிக்கும் பேரின்பத்தை கருத்தில் கொண்டு, அதனை தருகின்ற அறவழிகளிலே அனைவரு செயல்பட வேண்டும்.

அதாவது உடல் இச்சைகளிலே மனம் செலுத்தாமல், அடுத்த பிறவியில் நற்கதி அடைய, மறுமைக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். என்கிறார்கள் சான்றோர்கள்.

நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 8

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் – கறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

பாடலின் பொருள்

மிக சிறிய அளவில் இருக்கும் ஆலம் விதையானது, முளைத்து, பெரிய கிளைகளை கொண்டு, பெரிய மரமாக வளர்ந்து, மக்களுக்கு நிழல் தருவது போல, தக்க சமயத்தில் நாம் செய்யும் சிறிய நற்காரியங்களும், அறச்செயல்களும், இந்த வானகமும் சிறிதாகும் அளவில் உயர்ந்து, நற்காரியங்கள் செய்தவருக்கு தக்க சமயத்தில், மிகுந்த சிறப்பை தரும்.

நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 9

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

பாடலின் பொருள்

நாள்தோறும் கடந்து போகும் ஆயுள் குறைவின் உண்மையை அறியாதவர்கள், நாள்தோறும், நாட்கழிவு தவறாமல் நடந்து கொண்டிருப்பது கண்டும், அதனுடைய உண்மையான இயல்பினை உணரவும் மாட்டார்கள். கழிந்து போகும் நாட்களை எண்ணாமல் இன்னும் நாட்கள் இருக்கின்றது என எண்ணி அறியாமையால், அற்பமான சந்தோஷம் அடைகிறார்கள்.

நாட்கள் கழிந்து போவதுடன் தம் வாழ்நாளும் கழிந்து போகின்றன என்றெண்ணி வாழும் காலங்களில், அறநெறிகளில் ஈடுபட்டு வாழ்க.

நாலடியார் – அறன் வலியுறுத்தல் பாடல் 10

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.

பாடலின் பொருள்

ஈனத்தனமான காரியங்களை செய்து இந்த உடலை போற்றி பேணி வந்தாலும், இந்த உடல் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் என்று கூறிவிட முடியாது. அவ்வாறு நீடித்திருக்குமானால், மானம் என்னும் அருமையான அணிகலனை இழந்து, இரப்பது அதாவது பிச்சை எடுப்பது என்று சொல்லும் தாழ்மையான செயலுக்கு உட்பட்டு வாழ நேரிடும்.

எவ்வளவு தான் பேணி வளர்த்தாலும், இந்த உடல் நிலையற்றது, அதனால், அதனை வளர்க்கும் பொருட்டு, மானங்கெட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என்கிறார்கள். சான்றோர்கள்.

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்