தேசிய கீதங்கள் மகாகவி பாரதியார் | பாரதியார் விடுதலை பாடல்கள் | பாரதியார் தேசபக்தி பாடல் வரிகள்
9. எங்கள் தாய்
(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.
யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயங்கள் தாய் – இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள்எங்கள் தாய்.
முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.
நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடை யாள் – தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்.
அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் – தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்.
பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும்
புண்ணிய நெஞ்சினள் தாய் – எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள் தாய்.
கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள்எங்கள் தாய் – கையில்
ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள்.
யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறி வாள் – உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடையாள்.
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய் – அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்தி டுவாள்.
வெண்மை வளரிம யாசலன் தந்த
விறன்மக ளாம்எங்கள் தாய் – அவன்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
சீருறு வாள்எங்கள் தாய்.
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

