அழகின் சிரிப்பு கவிதை – பாரதிதாசன்

Digital Marketing Company in Trichy
BSR Solutions - Digital Marketing Company in Trichy

 

Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

புறாக்கள்

கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு

வீட்டுக்கு வெளிப் புறத்தில்
வேலன்வந் தேபு றாவின்
கூட்டினைத் திறக்கு முன்பு
“குடுகுடு” எனக்கு தித்தல்
கேட்டது காதில் ! கூட்டைத்
திறந்ததும் கீழ்ச் சரிந்த
கோட்டுப்பூப் போற்பு றாக்கள்
குதித்தன கூட்டி னின்றே !


புறாக்களின் பன்னிறம்

இருநிலா இணைந்து பாடி
இரையுண்ணும் ! செவ் விதழ்கள்
விரியாத தாமரை போல்
ஓர்இணை ! மெல்லி யர்கள்
கருங்கொண்டை ! கட்டி ஈயம்
காயாம்பூக் கொத்து ! மேலும்,
ஒருபக்கம் இருவா ழைப்பூ !
உயிருள்ள அழகின் மேய்ச்சல் !

புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு

இட்டதோர் தாமரைப் பூ
இதழ்விரிந் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும் ; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்து மில்லை;
வேறுவே றிருந்த ருந்தும்
கட்டில்லை ; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்க மில்லை.

நடை அழகு

அகன் றவாய்ச் சட்டி ஒன்றின்
விளிம்பினில் அடிபொருந்தப்
புகும்தலை ; நீர்வாய் மொண்டு
நிமிர்ந்திடும் ; பொன் இமைகள்
நகும்;மணிவிழிநாற் பாங்கும்
நாட்டிடும்; கீழ்இ றங்கி
மகிழ்ச்சியாய் உலவி, வைய
மன்னர்க்கு நடை கற்பிக்கும்!

புறாவின் ஒழுக்கம்

ஒருபெட்டை தன் ஆண் அன்றி
வேறொன்றுக் குடன் படாதாம்;
ஒருபெட்டை மத்தாப் பைப்போல்
ஒளிபுரிந் திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட்டால் தான்
ஒன்றுமற் றொன்றை நாடும்!

புறாக்களுக்கு மனிதர் பாடம்

அவள்தனி; ஒப்ப வில்லை;
அவன், அவள் வருந்தும் வண்ணம்
தவறிழைக் கின்றான். இந்தத்
தகாச்செயல் தன்னை, அன்பு
தவழ்கின்ற புறாக்கள் தம்மில்
ஒரு சில தருதலைகள்,
கவலைசேர் மக்க ளின்பால்
கற்றுக் கொண்டிருத்தல் கூடும்!

புறாக்கள் காதல்

தலைதாழ்த்திக் குடுகு டென்று
தனைச் சுற்றும் ஆண்புறாவைக்
கொலை பாய்ச்சும் கண்ணால், பெண்ணோ
குறுக்கிற் சென்றே திரும்பித்
தலநாட்டித், தரையைக் காட்டி,
“இங்குவா” என அழைக்கும்;
மலைகாட்டி அழைத்தா லுந்தான்
மறுப்பாரோ மையல் உற்றார்?

தாயன்பு தந்தையன்பு

தாய் இரை தின்ற பின்பு
தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும்; குஞ்சு
தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்;
தாய்அருந் தியதைக் கக்கித்
தன்குஞ்சின் குடல்நி ரப்பும்;
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்!
அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!

மயிற்புறா ஆடல்

மயில்புறா, படம் விரிக்கும்;
மார்பினை முன் உயர்த்தும்;
நயப்புறு கழுத்தை வாங்கி
நன்றாக நிமிர்ந்து, காலைப்
பயிற்றிடும் ஆடல் நு஡லின்
படி, து஡க்கி அடைவு போடும்;
மயிற்புறா வெண்சங் கொக்கும்;
வால் தந்த விசிறி ஒக்கும் !

அடைபடும் புறாக்கள்

கூட்டமாய்ப் பறந்து போகும்,
சுழற்றிய கூர்வாள் போலே!
கூட்டினில் அடையும் வந்தே
கொத்தடி மைகள் போலே!
கூட்டினை வேலன் வந்து
சாத்தினான், குழைத்து வண்ணம்
தீட்டிய ஒவியத்தைத்
திரையிட்டு மறைத்தல் போலே!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்