திருக்குறள் துறவறவியல்
அருளுடைமை
குறள் 241:
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
குறள் 242:
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
குறள் 244:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
குறள் 245:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
குறள் 246:
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
குறள் 247:
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
குறள் 248:
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
குறள் 249:
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.
புலான்மறுத்தல்
குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?
குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
குறள் 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
குறள் 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
தவம்
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
குறள் 262:
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?
குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
குறள் 266:
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.
குறள் 267:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
குறள் 268:
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
குறள் 269:
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.
குறள் 270:
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
கூடாவொழுக்கம்
குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
குறள் 272:
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?
குறள் 273:
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
குறள் 274:
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
குறள் 275:
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
குறள் 276:
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
குறள் 277:
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.
புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.
குறள் 278:
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
குறள் 279:
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.
குறள் 280:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
கள்ளாமை
குறள் 281:
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
குறள் 282:
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
குறள் 283:
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
குறள் 284:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
குறள் 285:
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
குறள் 286:
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
குறள் 287:
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
குறள் 288:
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
குறள் 289:
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
குறள் 290:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
வாய்மை
குறள் 291:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
குறள் 292:
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
குறள் 293:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
குறள் 294:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
குறள் 295:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
குறள் 296:
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
குறள் 297:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
குறள் 298:
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
குறள் 299:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
குறள் 300:
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
வெகுளாமை
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா.
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?
குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
குறள் 304:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
குறள் 306:
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.
குறள் 308:
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
குறள் 309:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
குறள் 310:
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
இன்னாசெய்யாமை
குறள் 311:
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
குறள் 312:
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
குறள் 313:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
குறள் 315:
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
குறள் 316:
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
குறள் 318:
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ?
குறள் 319:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
குறள் 320:
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
கொல்லாமை
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
குறள் 322:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
குறள் 324:
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
குறள் 325:
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
குறள் 327:
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.
குறள் 328:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
குறள் 329:
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
குறள் 330:
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
நிலையாமை
குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
குறள் 332:
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
குறள் 333:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
குறள் 334:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.
குறள் 335:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
குறள் 336:
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
குறள் 337:
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.
குறள் 338:
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
குறள் 339:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
குறள் 340:
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
துறவு
குறள் 341:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
குறள் 342:
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.
குறள் 343:
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
குறள் 344:
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
குறள் 345:
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?
குறள் 346:
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
குறள் 347:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
குறள் 348:
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
குறள் 349:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
குறள் 350:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
மெய்யுணர்தல்
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.
குறள் 353:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
குறள் 354:
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
குறள் 355:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.
குறள் 356:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
குறள் 357:
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
குறள் 358:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
குறள் 359:
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
குறள் 360:
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
அவாவறுத்தல்
குறள் 361:
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
குறள் 362:
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
குறள் 363:
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
குறள் 364:
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
குறள் 365:
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
குறள் 366:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.
குறள் 367:
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.
குறள் 368:
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
குறள் 369:
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.
குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Read More:
- திருக்குறள் குடியியல்
- ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள்
- குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil
- சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil
- பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்