தெரிந்துவினையாடல்
குறள் 511:
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | ஜோதிட தகவல்கள் | Learn Basic Astrology | நாலடியார் பாடல்கள் மற்றும் விளக்கம் | கனவு பலன்கள்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
குறள் 512:
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும்.
குறள் 513:
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
குறள் 514:
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.
குறள் 515:
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
குறள் 516:
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
குறள் 517:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
குறள் 518:
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.
குறள் 519:
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.
மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
குறள் 520:
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
சுற்றந்தழால்
குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
குறள் 522:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
குறள் 523:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
குறள் 524:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.
குறள் 525:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.
குறள் 526:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
குறள் 527:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
குறள் 528:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால, அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
குறள் 529:
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.
குறள் 530:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித் திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்.
பொச்சாவாமை
குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
குறள் 532:
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
நாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்.
குறள் 533:
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.
குறள் 534:
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
குறள் 535:
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைந்து இரங்குவான்.
குறள் 536:
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
குறள் 537:
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
குறள் 538:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.
குறள் 539:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்கவேண்டும்.
குறள் 540:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
செங்கோன்மை
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலைபெறும்.
குறள் 545:
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒரு சேர ஏற்படுவனவாகும்.
குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்; அச்செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
குறள் 548:
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
எளிய செல்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன் தாழ்ந்த நிலையில் நின்று ( பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.
குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்துத், தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.
குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.
கொடுங்கோன்மை
குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.
குறள் 552:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் ‘கொடு’ என்று கேட்பதைப் போன்றது.
குறள் 553:
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
நாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான்.
குறள் 554:
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
( ஆட்சிமுறை கெட்டுக் ) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
குறள் 555:
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ?
குறள் 556:
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
அரசர்க்குக் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும். அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும்.
குறள் 557:
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
குறள் 558:
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
குறள் 559:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
குறள் 560:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
வெருவந்தசெய்யாமை
குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.
குறள் 562:
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.
குறள் 563:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.
குறள் 564:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
‘நம் அரசன் கடுமையானவன்’ என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.
குறள் 565:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.
குறள் 566:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
குறள் 567:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.
குறள் 568:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.
குறள் 569:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
குறள் 570:
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச் சுமை வேறு இல்லை.
கண்ணோட்டம்
குறள் 571:
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.
குறள் 572:
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருந்தால் நிலத்திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை.
குறள் 573:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?
குறள் 574:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்?
குறள் 575:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.
குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர்.
குறள் 577:
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர். கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தலும் இல்லை.
குறள் 578:
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.
குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து, (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
குறள் 580:
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.
ஒற்றாடல்
குறள் 581:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய வேண்டும்.
குறள் 582:
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும்(ஒற்றரைக்கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
குறள் 583:
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை.
குறள் 584:
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.
குறள் 585:
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன்.
குறள் 586:
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவார்.
குறள் 587:
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
மறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியவல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.
குறள் 588:
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்த செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்று கொள்ள வேண்டும்.
குறள் 589:
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆளவேண்டும்; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.
குறள் 590:
சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால் மறைப்பொருளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.
ஊக்கமுடைமை
குறள் 591:
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?
குறள் 592:
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்; மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
குறள் 593:
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார்.
குறள் 594:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
குறள் 595:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும்; மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
குறள் 596:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
குறள் 597:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார்.
குறள் 598:
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
ஊக்கம் இல்லாதவர், ‘இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் ‘ என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார்.
குறள் 599:
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.
குறள் 600:
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே; (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.
மடியின்மை
குறள் 601:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
ஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.
குறள் 602:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும்.
குறள் 603:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்துவிடும்.
குறள் 604:
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
சோம்பலில் அகப்பட்டுச் சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்குக் குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
குறள் 606:
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
குறள் 607:
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.
குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
குறள் 609:
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றி விட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.
குறள் 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.
ஆள்வினையுடைமை
குறள் 611:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.
குறள் 612:
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.
குறள் 613:
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.
குறள் 614:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
முயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல், பேடி தன் கையால் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.
குறள் 615:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.
குறள் 616:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.
குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
குறள் 618:
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
குறள் 619:
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
குறள் 620:
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.
இடுக்கணழியாமை
குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
துன்பம் வரும்போதும் (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
குறள் 622:
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
குறள் 623:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.
குறள் 624:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
தடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.
குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும்.
குறள் 626:
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
செல்வம் வந்தபோது `இதைப் பெற்றோமே` என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது `இழந்தோமே` என்று அல்லல்படுவாரோ?
குறள் 627:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார்.
குறள் 628:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.
குறள் 629:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.
குறள் 630:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
- குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil
- சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil
- பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்