Skip to content
Home » பொதுத் தமிழ் தகவல்கள் » திருக்குறள் அரசியல் பகுதி 1

திருக்குறள் அரசியல் பகுதி 1

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அரசியல்

இறைமாட்சி

குறள் 381:

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.

குறள் 382:

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

குறள் 383:

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

குறள் 384:

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

குறள் 385:

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

குறள் 386:

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

காண்பதற்கு எளியவனாய், கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

குறள் 387:

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

இனிய சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

குறள் 388:

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்.

குறள் 389:

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

குறள் 390:

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

கல்வி

குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

குறள் 392:

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

குறள் 393:

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.

குறள் 394:

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

மகிழும்படியாகக் கூடிப் பழகி. (இனி இவரை எப்போது காண்போம் என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

குறள் 395:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.

குறள் 396:

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

குறள் 397:

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?

குறள் 398:

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.

குறள் 399:

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.

குறள் 400:

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல.

கல்லாமை

குறள் 401:

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.

குறள் 402:

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

குறள் 403:

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.

குறள் 404:

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.

குறள் 405:

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு (கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.

குறள் 406:

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்.

குறள் 407:

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

குறள் 408:

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.

குறள் 409:

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

குறள் 410:

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

கேள்வி

குறள் 411:

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும்; அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

குறள் 412:

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத் துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

குறள் 413:

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.

குறள் 414:

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய வேண்டும்; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல் துணையாகும்.

குறள் 415:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கல் உடைய சேற்றுநிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும்.

குறள் 416:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

எவ்வளவு சிறிதேயாயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்; கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

குறள் 417:

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

குறள் 418:

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளைகள் கொண்டு ஒசையைக்) கேட்டறிந்தலும், கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

குறள் 419:

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

குறள் 420:

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?

அறிவுடைமை




குறள் 421:

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

குறள் 422:

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.

மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

குறள் 423:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

குறள் 424:

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.

குறள் 425:

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.

உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.

குறள் 426:

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

குறள் 427:

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

குறள் 428:

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும்.

குறள் 429:

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

குறள் 430:

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

குற்றங்கடிதல்

குறள் 431:

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

குறள் 432:

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

பொருள் கொடாத தன்மையும், மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பவனுக்குக் குற்றங்களாகும்.

குறள் 433:

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக்கொள்வர்.

குறள் 434:

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும். ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ளவேண்டும்.

குறள் 435:

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும்.

குறள் 436:

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால் தலைவனுக்கு என்ன குற்றமாகும்?

குறள் 437:

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

செய்யத்தக்க நன்மைகளைச்செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம் உய்யுந்தன்மை இல்லாமல் அழியும்.

குறள் 438:

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்த்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

குறள் 439:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.

குறள் 440:

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

தன் விருப்பம் பிறர்க்குத் தெரியாதபடி விருப்பமானவற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

பெரியாரைத் துணைக்கோடல்

குறள் 441:

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

குறள் 442:

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

குறள் 443:

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

குறள் 444:

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

தம்மை விட, ( அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

குறள் 445:

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.

குறள் 446:

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

குறள் 447:

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யார் இருக்கின்றனர்?

குறள் 448:

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

குறள் 449:

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

குறள் 450:

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

சிற்றினஞ்சேராமை




குறள் 451:

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

குறள் 452:

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

குறள் 453:

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

குறள் 454:

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

குறள் 455:

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

குறள் 456:

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

குறள் 457:

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

குறள் 458:

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும்.

குறள் 459:

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

குறள் 460:

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

தெரிந்துசெயல்வகை

குறள் 461:

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

குறள் 462:

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.

குறள் 463:

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார்.

குறள் 464:

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

குறள் 465:

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத் தொடங்குதல் பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

குறள் 466:

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

குறள் 467:

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

குறள் 468:

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகி விடும்.

குறள் 469:

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

குறள் 470:

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

வலியறிதல்

குறள் 471:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.

குறள் 472:

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை.

குறள் 473:

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

குறள் 474:

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

குறள் 475:

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

குறள் 476:

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும் ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

குறள் 477:

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்; அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும்.

குறள் 478:

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

குறள் 479:

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்.

குறள் 480:

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

காலமறிதல்

குறள் 481:

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

குறள் 482:

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

குறள் 483:

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறந்து செயின்.

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?

குறள் 484:

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

குறள் 485:

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர்.

குறள் 486:

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது.

குறள் 487:

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.

குறள் 488:

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்தபோது அவருடைய தலைகீழே விழும்.

குறள் 489:

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும்.

குறள் 490:

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும்.

இடனறிதல்

குறள் 491:

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக் கூடாது; பகைவரை இகழவும் கூடாது.

குறள் 492:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப் பயன்களையும் கொடுக்கும்.

குறள் 493:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.

குறள் 494:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலை நெருங்கிச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

குறள் 495:

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும்; ஆனால் நீரிலிருந்து நீங்கி வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.

குறள் 496:

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமுடியாது; கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

குறள் 497:

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

(செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

குறள் 498:

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

குறள் 499:

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

குறள் 500:

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்.

தெரிந்துதெளிதல்




குறள் 501:

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

குறள் 502:

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

குறள் 503:

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

குறள் 504:

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

குறள் 505:

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

குறள் 506:

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.

குறள் 507:

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும்.

குறள் 508:

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.

குறள் 509:

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

யாரையும் ஆராயமல் தெளியக்கூடாது; நன்றாக ஆராய்ந்த பிறகு, அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

குறள் 510:

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்