சதுரகிரி – தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலை தொடரில் இந்த மலைக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வருவதனால் பக்தியுடன் இயற்கை எழிலும் இணைந்து நமது உள்ளத்தையும் மனதையும் செம்மைப்படுத்துகிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றால் மலையேறும்பொழுதே சிறு சிறு ஓடைகள் ஓடும் அதில் குளித்தால் எந்த வியாதியும் குணமடையும். பெரும்பாலும் வெயில் காலங்களில் இந்த நீரோடைகள் இருக்காது.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
மலையின் மேல் மூலவராக சுந்தர மகாலிங்க சாமியும், சந்தன மகாலிங்க சாமியும் உள்ளனர். இவர்களை தரிசித்த பின்பு அங்கிருந்து இன்னொரு மலைப்பாதை வழியாக சென்றால் பெரிய மகாலிங்க சாமியும் தவசிப்பாறையும் தரிசிக்கலாம். ஆனால் இங்கு சென்று தரிசிக்க தற்போது அனுமதி வழங்கப்படுவது இல்லை.
பிரசித்தி பெற்ற சித்தர்கள் அனைவரும் வாழும் மலையாக கருதப்படுவதால் சித்தர் மலை என்றும் சிவன் மலை என்றும் கூறுவார்கள். இந்த கோயில் சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
சதுரகிரி தல வரலாறு
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் மற்றும் திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டிற்க்கு தினமும் அவர்களுக்குத் தேவையான பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்டவர், அந்த பெண்ணிற்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
இவ்வாறு செய்து கொண்டிருக்கையில் சுந்தரானந்த சித்தர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். அவர்களுடன் பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டது, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தினான்.
சிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது மற்ற அனைத்து லிங்கங்களிலும் பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவனாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இருப்பினும் முடியாதவர்கள் அணிந்துகொண்டு தான் செல்கிறார்கள்.
லிங்க வடிவ அம்மன்
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட அம்மன் “ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் அம்மன் சன்னதி உள்ளது.
சதுரகிரி தவசிப்பறை
தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகையாக கருதப்படுகிறது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. முழு இருட்டாக இருக்கும் காற்று வசதியும் இருக்காது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் அனைத்து சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது.
சதுரகிரி கோயில் பராமரிப்பு
1940 ஆம் ஆண்டு வரை இக்கோவில் சாப்டூர் பாளையக்காரர்கள் பராமரிப்பில் இருந்து வந்தது. 1950 ஆம் ஆண்டுக்குப் முதல் இன்றளவும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
சதுரகிரி விசேஷ நாட்கள்
சதுரகிரி விசேஷ நாட்கள் – மாத அமாவாசை பௌர்ணமி பிரதோஷ தினங்களும், வருடந்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சித்ரா பௌர்ணமி மற்றும் மாசி மகா சிவராத்திரி தினத்தன்று இம்மலைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
நடைதிறப்பு
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோயிலில் வெள்ளம் ஏற்பட்டு உயிர்ச்சேதம் பாதிப்பு நடந்ததால், மாதம் ஆறு தினங்களே பக்தர்கள் அனுமதிக்க படுகிறார்கள். அது வளர்பிறை பிரதோஷம் முதல் பௌர்ணமி வரை 3 தினங்களும், தேய்பிறை பிரதோஷம் முதல் அமாவாசை வரை 3 தினங்கள் மட்டுமே. அதிலும் கடைசி 3 வது தினம் பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் ஏறுவதற்கு அனுமதி கிடையாது.
அமைந்துள்ள தெய்வங்கள்
மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், தவசிப்பறை லிங்கம், வெள்ளை விநாயகர், ஆசீர்வாத விநாயகர், சந்தன விநாயகர், சந்தன முருகன், கோரக்கர் குகை, சித்தர் பீடம், பிலாவடி கருப்பு, ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் மற்றும் வனதுர்க்கை அம்மன்.
நீர் ஊற்றுகள்
மலையில் செல்லும் வழியில் நீர் அருந்துவதற்கு நாவல்பழ ஊற்றும், அதற்கும் மேலே பிலாவடி கருப்பு கோயில் தண்டி குளிப்பதற்கு தைல கிணறும் அமைந்துள்ளது. இவைகளை பயன்படுத்துவதால் பிணிகள் நீங்கும்.
அபூர்வ மூலிகைகள்
இங்கே கிடைக்கும் மூலிகைகள் முறிந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் வல்லமை கொண்டது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
மலைப்பாதைகள்
இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. இந்த மலைப்பாதைகள் வழியாக சென்று மகாலிங்கங்களை தரிசிக்கலாம்.
போக்குவரத்து
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்று மலையின் அடிவாரமான தாணிப்பாறையில் இறங்கி அங்கிருந்து நடை பயணமாக சென்றால் மகாலிங்கங்களை தரிசிக்கலாம்.
மதுரை -> கிருஷ்ணன்கோயில் -> வத்திராயிருப்பு ->தாணிப்பாறை
சென்னை -> மதுரை – > ஸ்ரீவில்லிபுத்தூர் -> தாணிப்பாறை (இதுவும் கிருஷ்ணன் கோயில் வழியாகவே செல்லும் இவ்வாறு சென்றால் சௌகரியமாக உட்கார்ந்து செல்லலாம்).
Read More:
- Sri Vishnu Sahasranamam Lyrics in Tamil
- Sri Lalitha Sahasranamam Lyrics in Tamil
- Sivavakkiyar Padalgal Lyrics in Tamil
- 108 ஆஞ்சநேயர் துதி மந்திரம்
- ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள்
Video – Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்
arohara