குழந்தை வளர்ப்பு பெற்றோரின் கடமை
பெண் குழந்தை
பிறந்த குழந்தை எந்த குழந்தையாக இருந்தாலும் அதை பேணி காப்பது பெற்றோரின் கடமை. இன்றும் சில இடங்களில் ஆண் பிள்ளையை அகமகிழ்ந்து ஏற்கும் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளின் அருமைகளை அறியாமல் அதனை ஏற்க மனம் தடுமாறுகிறார்கள். பெற்றோரின் வயோதிகத்திலும், உடல் நிலை குன்றிய நேரத்திலும் பெண்கள் முன் வந்து பரிவுடன் கவனித்துக் கொள்வதை நாம் கண் கூடாக பார்க்கிறோம்.
அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்கிறார்கள், ஏன் மகன்களை பெற்றேடுத்து அரசன் ஆண்டியானவன் இல்லையா, மகனே தந்தையை சிறையில் அடைத்த சரித்திர நிகழ்வுகள் உள்ளன.
சமுதாய சூழல்
ஒரு குழந்தை பிறந்த சில நாட்களில் தந்தையையோ தாயையோ இழந்து விட்டால், அக்குழந்தையின் பிறப்பை குறை கூறுகிறார்கள். இதனால், உறவினர்களும் பிள்ளையிடம் அன்பை காட்டுவதற்கு பதிலாக வெறுப்பையே காட்டுகிறார்கள், இந்த சூழலில் வளரும் குழந்தைகள் மனநிலை மிகவும் பாதிப்படையும். அவர்களுக்கு ஒன்று புரியவில்லை உண்மையிலே இழப்பு அக்குழந்தைக்கு தான், ஒரு குழந்தையின் பிறப்பு பெற்றோரின் இறப்புக்கோ, வேறு கெடுதலுக்கோ காரணம் என்று எண்ணுவது பெரிய முட்டாள் தனம்.
பெற்றோர்கள், தான் பெற்ற பிள்ளைகளை ஆண் என்றோ, பெண் என்றோ, அறிவுடையவன் என்றும், திறமையற்றவன் என்றும் பிரித்து பார்த்தால் தவறாகும். அனைவரையும் ஒன்றாக நேசித்து சமமாக நடத்த வேண்டும். சில குடும்பங்களில் தான் பெற்ற பிள்ளைகளில் ஒரு பிள்ளையை மற்றும் உயர்த்தி பேசுவது அல்லது அதிக அன்பு கட்டி வளர்ப்பது நியாயமற்ற செயல் ஆகும். அதனை ஆண்டவன் கூட ஏற்க மாட்டார்.
இன்னும் சில இடங்களில் தனக்கு பிறக்கும் குழந்தைகளில் முதல் குழந்தையின் மேல் குடும்ப பாரத்தை சுமக்க செய்வார்கள், அவர்களை நன்றாக படிக்க வைத்தால் அவர் குடும்பத்தை பார்த்துக் கொளவர் என்று எண்ணி, மற்றவர்களின் படிப்பையும் வீணடிப்பர். முதல் குழந்தையின் மேல் குடும்ப பாரம் இருப்பதால் சமூகத்தில், தான் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாமல் அவதியுறுவார்கள்.
மறுமணம் செய்த வீட்டில்
மறுமணம் செய்த சில குடும்பங்களில் முதல் தாரத்து பிள்ளைகள் அனுபவிக்கும் வறுமை, தனிமை, துயரம் முதலிய இடையூறுகள் இவ்வுலகிலேயே கொடியது. முதல் தாரத்து குழந்தைகளுக்கு கிடைக்க இருக்கும் எல்லாவற்றையும் இரண்டாவது மணம் முடித்த ஆடவராக இருந்தாலும் சரி, பெண்டிராக இருந்தாலும் சரி அவர்கள் அட்டை பூச்சியினை போன்று உறிஞ்சி எடுத்துக் கொள்வார்கள். இதனாலே இவர்களை ‘மாற்றாந்தாய்’ மற்றும் ‘மாற்றாந்தகப்பன்’ என்று அழைக்கிறார்கள். மாற்றான் என்றல் ‘சத்துரு’ விரோதி என்று பொருள்.
சமூகத்தில் பிள்ளைகள் அவதியுறும் நிலையை எனக்கு தெரிந்த வகையில் வெளிப்படுத்தினேன். இது போன்ற சூழல்களில் வளரும் குழந்தை நிச்சயமாக ஆரோக்கியமாக வளராது, இதற்கு காரணம் குழந்தைகள் இல்லை. பெற்றோர்களும் , சுற்றத்தாரும், சமூகமுமே ஆகும்.
மேலும் காண்க
Video: அம்மா பற்றிய வரிகள்