காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன்
காதல் நினைவுகள் கவிதை புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
ஆடுகின்றாள்
கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த
புலையுலகம் போக்கினேன். போக்கிக்–கலையுலகம்
சென்றேன்;மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள்
நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு.
விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின்
வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்–சுழிந்தோடிக்
கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என்
மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து.
சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும்.வானில்
மிதக்கும்அவள் தாமரைக்கை. மேலும்–வதங்கலிலாச்
சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல்,
கண்கவரும் செம்பவளக் காம்பு.
செந்தமிழை நல்லிசையைத் தேன்மழையை வானுக்குத்
தந்தோம்என் னும்தாள மத்தளங்கள்–பந்தியாய்
இன்னஇடம் இன்னபொருள் என்றுணர்த்தும் அன்னவளின்
வன்னஇடை வஞ்சிக் கொடி.
கோவை உதட்டை ஒளிதழுவும்.அவ்வொளியில்
பாவைதன் உள்ளத்தின் பாங்கிருக்கும்–தாவும்அதைக்
கண்ணாற் பதஞ்செய்து கையோடு நற்கலையைப்
பண்ணால் உயிரில்வைத்தாள் பார்.
இளமை, அழகு, சுவைகொள்இசை, என்னும்
களமெழுந்த நாட்டியத்தைக் கண்டேன்–உளமார
நானெந்தத் துன்பமுமே நண்ணுகிலேன் பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமா னேன்.