Skip to content
Home » தமிழ் இலக்கணம் » முன்னிலை ஒருமை வினைமுற்று

முன்னிலை ஒருமை வினைமுற்று

முன்னிலை ஒருமை வினைமுற்று – ஒரு செய்தியை யாரோடு பேசுகிறோமோ அவரை ‘முன்னிலை’ என்னும் சொல்லால் கூறுகிறோம். அல்லது ‘முன்னிலை’ என்னும் சொல் தமிழ் இலக்கணத்தில் கேட்பவரைக் குறிக்கும் ஒரு கலைச்சொல் எனலாம். மூவிடப் பெயர்களைக் கீழ்வருமாறு எளிமையாக நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

தன்மை எனும் சொல் பேசுபவரைக் குறிக்கும்.
முன்னிலை எனும் சொல் கேட்பவரைக் குறிக்கும்.
படர்க்கை எனும் சொல் பேசப்படுபவரைக் குறிக்கும்.

முன்னிலை வினைமுற்று என்பது ஒரு தொடரில் பயனிலையாக வருவதாகும்.

நீ வந்தாய்
நீ உண்கிறாய்
நீ செல்வாய்

எனும் தொடர்களில் உள்ள வினைமுற்றுச் சொற்கள் முன்னிலை வினைமுற்றுகள் ஆகும்.

முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் கீழ்க்காணும் விளக்கங்களைத் தருவனவாக அமையும். செயல் (வினை), காலம், இடம், எண் ஆகியன குறித்து அச்சொல் அறிவிக்கும் என்பதை ஓர் எடுத்துக்காட்டின் வழிக் காண்போம்.

வந்தாய் என்னும் முன்னிலை வினைமுற்றுச் சொல் வருதல் ஆகிய செயலையும் இறந்த காலத்தையும் முன்னிலையில் ஒருவரையும் சுட்டுகிறது.

முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் தன்மை வினைமுற்றுச் சொற்களைப் போன்றே திணை, பால் ஆகியவற்றைத் தெரிவிப்பதில்லை.

வந்தாய்’ என்னும் சொல் எதிரில் உள்ள ஒருவரை மட்டும் குறிக்கிறதே தவிர அவர் உயர்திணையா அல்லது அஃறிணையா என்பதையோ, அவர் ஆணா அல்லது பெண்ணா என்பதையோ தெரிவிப்பதில்லை. எதிரில் உள்ள ஒரு மனிதரைப் பார்த்தும் ‘வந்தாய்’ எனப் பேசலாம்.

எதிரில் உள்ள அஃறிணைப் பொருளாகிய ஒன்றனைப் பார்த்தும் பேசலாம். சான்றாக ஒரு நாயைப் பார்த்தும், ‘நீ இவ்வளவு நேரம் எங்கே போய் இருந்தாய்? எப்பொழுது இங்கு வந்தாய்?’ என்பன போலப் பேசலாம். அதே போல வந்தீர் என்னும் முன்னிலை வினைமுற்று உயர்திணையைக் குறிக்கவும் வரலாம்; அஃறிணையைக் குறிக்கவும் வரலாம். ஆகவே, முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் திணை, பால் உணர்த்தாமல் ஒருமை, பன்மை என்பவற்றுள் ஒன்றை மட்டும் உணர்த்தும் என்பதை அறிய வேண்டும்.

– முனைவர்.மா.சற்குணம்

தெரிந்து கொள்க

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்