முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

தமிழ் இலக்கணத்தில் முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று மற்றும் பகுதி மட்டும் வரும் ஏவல் வினைமுற்று பற்றி தெரிந்து கொள்வோம்.

முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

முன்னிலையில் உள்ள ஒருவரை நோக்கி ‘நீ இச்செயலைச் செய்வாயாக’ என ஏவினால், அது ஏவலை வெளிப்படுத்தும் எனவே இந்த சொல்லுக்கு ஏவல் வினை என்று பெயர்.

ஏவல் வினை தெரிநிலையில் மட்டும் உண்டு. குறிப்புவினையில் இல்லை. எனவே, ‘ஏவல்’ என்பது ஒரு வினைப் பகுதியானது விகுதி பெற்றோ, பெறாமலோ அமையும் சொல் எனலாம்.

பெரும்பாலும் ஏவல் வினைமுற்றுகள் ‘ஆய்’ விகுதி பெற்று, இலக்கிய வழக்கில் வருகின்றன.

வாராய்=வா
சொல்லாய்=சொல்
பாடாய்=பாடு
என்பன போல அமையும். முன்னிலை ஒருமை விகுதியாகிய ஆய் என்பதைப் பெறாமல் வா, சொல், உண் என்பன போலப் பகுதி மாத்திரமே நிற்கும் வினைச் சொற்களும் ஏவல் ஒருமை வினைமுற்றுகளேயாகும். பேச்சு வழக்கில் ஏவல் ஒருமைச் சொற்கள் பெரும்பகுதி விகுதி இல்லாமல் வருவதையே காணலாம்.

இவ்வாறன்றி ஆய், இ, அல், ஏல், ஆல் முதலிய விகுதிகளைப் பெற்றும் ஏவல் ஒருமை வினைமுற்றுச் சொற்கள் வருவதுண்டு.

வாராய் – (வருவாய்) – ஆய் விகுதி
சேறி – (செல்லுதி = செல்) – இ விகுதி

வாரல் – (வரவேண்டாம்) – அல் விகுதிஎதிர்மறைப் பொருளில் அமைந்தன
திறவேல் (திறக்க வேண்டாம்) – ஏல் விகுதி
அழால் (அழ வேண்டாம்) – ஆல் விகுதி
ஏவல் வினை எதிர்காலத்துக்கு உரியது

பகுதி மட்டும் வரும் ஏவல் வினைமுற்று

விகுதி இல்லாமல் தெரிநிலை வினைப்பகுதி மட்டும் வந்து ஏவல் வினைமுற்றுகள் அமைவது உண்டு. பெரும்பாலும் இக்காலப் பேச்சு வழக்கில் இவ்வாறுதான் ஏவல் வினை முற்று அமைகிறது.

முன்னிலை ஒருமை ஏவலில் பொதுவாக வா, போ, இரு, உண், பார் என்பன போன்ற வினைப்பகுதிகளைத்தான் பெரும்பாலும் பேசுகிறோம். ‘நீ வா’ என்பதற்குப் பதிலாக ‘வா’ என்று மட்டும் எதிரில் இருப்பவரை நோக்கிக் கூறும் பொழுது ‘நீ’ என்னும் எழுவாய் தோன்றா எழுவாயாக மறைந்திருக்கிறது. அதாவது கேட்பவரால் ‘நீ’ என்னும் சொல் தானாக உணரப்படுகிறது.

நன்னூல் பதவியலில் கூறப்படும் பகுபத உறுப்புகள் பற்றிய செய்திகளில் ‘நட, வா, மடி, சீ, விடு, கூ’ என்று தொடங்கும் நூற்பாவில் ‘செய்’ என்னும் பொது ஏவல் வாய்பாட்டில் அமைந்த வினைப் பகாப்பதங்கள் அடங்கும்.

வா, போ போன்ற ஏவல் சொற்களில் விகுதி இல்லை என்றாலும், முன்னிலை ஏவல் விகுதி சேர்ந்து கெட்டிருப்பதாகவே கொள்வர்.

தெரிந்து கொள்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்