
திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
திருச்செந்தூர், தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். இக்கோயில் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.

தல வரலாறு
தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், “செயந்திநாதர்’ என அழைக்கப்பெற்றார்.
பஞ்சலிங்க தரிசனம்
இங்கே முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதி உள்ளது. இறைவனை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன. வார நாட்களில் மட்டுமே பஞ்சலிங்க சன்னதியை வழிபட இயலும். கூட்ட நெரிசல் நாட்களில் தரிசிக்க அனுமதி இல்லை.
ராஜகோபுரம்
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. கோபுரம் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்டுள்ளது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
வள்ளி குகை
செந்தில் ஆண்டவரை தரிசித்த பின்னர் வெளியில் சுற்று பாதையில் வள்ளி குகை அமைந்துள்ளது. இக்குகை தரிசிக்க வேண்டிய முக்கிய இடம் ஆகும்.
திருமண தடை
திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும். திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.கங்கை பூஜை தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, “கங்கை பூஜை’ என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.
கந்த சஷ்டி
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்? சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
இலக்கிய சான்று
வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை – புறநானூறு
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் – சிலப்பதிகாரம்
திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவரை குறிப்பிடுகின்றன.
மற்ற நூல்கள்
சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் மாதாந்தக் கலித்துறை, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர்க்கோவை, திருச்செந்தூர் ஷண்முக சதகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம், திருச்செந்தூர் தல புராணம், திருச்செந்தில் பதிகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி, திருச்செந்தில் சந்த விருத்தம் என்று திருச்செந்தூர் பற்றிய நூல்கள் ஆகும்.
ஆதிசங்கரர் குணமடைதல்
ஆதிசங்கரருக்கு எதிராக அபிநவ குப்தன் என்பவன் அபிசார யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் தீராத வயிற்று வலியை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார்.
திருவிழா
பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும்.
ஓம் முருகா போற்றி ! ஓம் சரவண பவ!
Video – Learn Basic Astrology in Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்