தமிழ் மொழியும் இலக்கியமும்

TAMIL ILAKKIYAM: BRAHADEESWARAR TEMPLE
TAMIL ILAKKIYAM: BRAHADEESWARAR TEMPLE

சங்க இலக்கியம்

தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழர்ச் சூழலையும் உரைக்கின்றது. கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும் சங்க இலக்கியத்தில் காணலாம். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகை நூற்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் திருக்குறள், இன்றும் அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறை.

சங்கம் மருவிய கால இலக்கியம்

கி.பி 300-இலிருந்து கி.பி 700-வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே சிலப்பதிகாரமும், பெளத்த தமிழ்க் காப்பியங்களான மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சைன தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசி தமிழில் எழுந்த முதல் தர்க்க நூலாகக் கருதப்படுகிறது.

பக்தி கால இலக்கியம்

கி.பி 700-இலிருந்து கி.பி 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் தமிழ்ப் பக்தி இயக்கம் வலுப்பெற்றதது. சைவமும் வைணவமும் ஆதரவு பெற்றன. சைவ நாயன்மார்கள் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவ ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றன. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதினான்கு சைவ சிந்தாந்த நூற்களும் இயற்றப்பட்டன. கலிங்கத்துப்பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன.

இடைக் கால இலக்கியம்

கி.பி 1200-இலிருந்து கி.பி 1800-வரையுள்ள காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மாராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலமே தமிழ் இசுலாமிய இலக்கியம், தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவற்றின் தோற்றக்காலம் ஆகும். முதல் தமிழ் அகரமுதலி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி என்று அறியப்படும் கிறித்தவ மத ஆசிரியரால் கி.பி 1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலான நிகண்டுகள் இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே.

தற்கால இலக்கியம்

18-ஆம் நூற்றாண்டு தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்துப் பாதுகாத்தனர். 1916-ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமற்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.

தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராகச் சுப்பிரமணிய பாரதியார் கருதப்படுகிறார். இக்காலத்தில் புதுக்கவிதை பிறந்தது. புதினம், சிறுகதை, கட்டுரை ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. இந்த காலப்பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம் பல அறிஞர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது.

மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்