Skip to content
Home » ஆன்மிகம் » குண்டலினி சோதியை பற்றி மகான் சிவவாக்கியர் கூறியது

குண்டலினி சோதியை பற்றி மகான் சிவவாக்கியர் கூறியது

Siddhar Padalkal

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே!
 – மகான் சிவவாக்கியர்

விளக்கம்

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை – நீங்கள் சக்தியை தேடி புறத்தே ஓடினாலும் குண்டலினி சக்தி உங்களுக்குள்ளே இருக்கின்றது என்பதை அறிந்து அதனை எழுப்பும் வழியை அறிய வேண்டும்.

நாடிநாடி நாடிநாடி என்றால் ஆராய்தல் என்று அர்த்தம். நாடுதல் என்றால் விரும்புதல் என்று அர்த்தம். உள்ளெழும் சோதியை அறிவதற்கு நாம் விரும்பினாலும் காலம்தான் கழியுமே தவிர அதனை நம்மால் அறிய இயலாது.

வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள் – காலமெல்லாம் அலைவான், தூங்காமல் இருப்பான், படி பட்டினியாக இருப்பான். துன்பப்பட்டு துன்பப்பட்டு வாழ்கிறான். இந்த ஜோதியின் ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் கடைசியாக ஒன்றுமில்லாமல் மாண்டு போகிறான்.

கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே – உண்மை பொருளை அறியாமல் எண்ணிலடங்காத மக்கள் இப்படி போய்விட்டார்கள். ஏனென்றால் அவனுக்கு தக்க ஆசான் இல்லை. அதற்காக என்ன செய்வான்? யாராவது வழியை காட்டுவாரா என்று தேடி அலைவனே தவிர, உண்மையான இடத்திற்கு வர மாட்டான்.

நீ என்னதான் பாடு பட்டாலும், உன் வினை இருக்கும்வரை அது உன்னை விடாது. இந்த வினையை ஒழிப்பதற்கு ஒன்று தர்மம் செய் அல்லது தவம் செய். தவம் என்பது ஆசான் அகத்தீசர் அல்லது ஏதாவது மகான் திருவடியை பற்றிக்கொள்ள வேண்டும்.

அன்பு செய்வது தவமென்றும், தர்மம் செய்வது தானம் என்றும் பொருள். ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் அல்லது மற்ற உதவி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது ஒவ்வொருவரின் வாழ்த்தும் ஆசியும் நாம் பல்வேறு ஜென்மங்களில் செய்த பாவச்சுமை நீங்கி, நமக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்படும். அப்படி உள்ளுணர்வு எலும்பினால்தான் நமக்கு உண்மை புலப்படும். இல்லாவிட்டால் வாடிவாடி வாடிவாடி என்ற வரிக்கேற்ப உண்மை அறியாமால் மாண்டு போவான்.

                                                                                    – தவத்திரு அரங்கமகாதேசிகர் அருளுரை
மேலும் காண்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்