Skip to content
Home » ஆன்மிகம் » Siva Puranam Lyrics in Tamil

Siva Puranam Lyrics in Tamil

Siva Puranam Lyrics in Tamil
Siva Puranam Lyrics in Tamil

Siva Puranam Lyrics in Tamil – சிவ புராணம் பாடல் வரிகள் விளக்கம் : திருவாசகத்தின் முதல் பதிகமாக வருவது சிவபுராணம் . இது மாணிக்கவாசகரால் திருப்பெருந்துறையில் அருளியது “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”, தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம் ஆகும். அதனால் அதனை அனுதினமும் படித்து ஈசன் அருள்பெற்று பயன்பெறுவோம்.

சிவமயம் – திருச்சிற்றம்பலம் – சிவ புராணம் பாடல் வரிகள்

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)

சிவபுராணம் பாடல் வரிகள் – Siva Puranam Lyrics in Tamil

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க
நமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில்! நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

விளக்கம்: நமசிவாய வாழ்க! நாதன் நாமம் வாழ்க! கண்ணிமைக்கும் கணம் கூட என் நெஞ்சம் விட்டு பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய இறைவன் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க. ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன்பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் குழல் வெல்க

விளக்கம்: பக்தனின் மன ஓட்டத்தின் வேகத்தைப் போக்கி என்னை ஆளும் மன்னனின் திருவடி வாழ்க. பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும். தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு அரிய பொருளாக உள்ள பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும். கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும். தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு வளரச் செய்யும் பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடி போற்றி

விளக்கம்: ஈசன் திருவடி போற்றி. எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி. ஒளி வடிவானவனின் திருவடி போற்றி. சிவனின் சிவந்த திருவடி போற்றி. அன்பினில் சிறந்து நிற்பவனான நிமலனின் திருவடி போற்றி. மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி. திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

விளக்கம்: தீராத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள். சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால் அவனுடைய திருவருளே அவனுடைய திருவடியை வணங்க செய்து உள்ளம் மகிழும் சிவபுராணமாகிய இதனை முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

விளக்கம்: முக்கண்ணனாகிய சிவ பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன். சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும் அளவிலா எல்லைகள் கடந்து உள்ள பெருமானே! – உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வழி வகை தெரியாது இருக்கிறேன்.

புல் ஆகிப் பூடு ஆய்ப் புழுஆய் மரம் ஆகிப்
பல் விருகம் ஆகிப் பரவை ஆய் பாம்பு ஆகிக்
கல் ஆய் மனிதர் ஆய்ப் பேய் ஆய்க் கணங்கள் ஆய்
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்ச்
செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்

விளக்கம்: புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும் இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே!

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றே
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!

விளக்கம்: உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன். நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த உண்மைப் பொருளே! வேதங்கள் “ஐயா” எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் மிகச்சிறிய அணுவாகவும் இருப்பவனே!

வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் போய் அகல வந்து அருளி
மெய்ஞானம் வி.மிளிர்கின்ற மெய்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல் விக்கும் நல் அறிவே

விளக்கம்: வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீயே. என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே! பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் மெய்யாக வந்து அருள் செய்பவனே, உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே! எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே!
என் அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே!

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

விளக்கம்: தோற்றம், குறித்த வயது, முடிவற்றவனே! நீ உலகங்களையெல்லாம் தோற்றுவிக்கின்றாய், அழியாது இருக்கச் செய்கின்றாய், இறுதியில் அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய், உயிர்களை மாயைக்குள் போக்குவாய்! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய். மணத்தினும் (வாசனை) நுண்மையான பொருளே! வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே! சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே!

கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் எம்பெருமான்!

விளக்கம்: கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ
அவ்வாறு சிறந்து இருப்பவனே, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,
இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
ஐந்நிறமும் நீயே ஆனாய்! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக
மறைந்திருக்கும், எம்பெருமானே!

வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப்
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விளக்கம்: கொடிய வினையில் சிக்கி தவிக்கும் என்னை மாயையாகிய இருளினை செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி, மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும், அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து, மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பு ஆகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!

விளக்கம்: சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசு இல்லாதவனே, உன்னிடம் கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய எனக்கும் அருள் செய்பவனே, உன்னுடைய நீண்ட அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப் பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான பெரும் தத்துவப் பொருளே!

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே தேன் ஆர் அமுதே! சிவபுரனே
பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறு

விளக்கம்: குற்றமற்ற தூய ஒளியாகிய மலர் போன்ற இனிய ஒளி சுடரே! தேன் நிறைந்த அமுதமே! சிவபுரத்தை உடையவனே! பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே !
இனிய அறக்கருணை புரிந்து, நெஞ்சில் வஞ்சனை ஒழிய, என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே!

ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே

விளக்கம்: தெவிட்டாத அமுதமே! அளவுகள் கடந்தும் நிற்கின்ற பெருமானே! ஆர்வம்/முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியோனே! என் உள்ளத்தை நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே! இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே! உள் நிற்பவனே!

அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே
ஆதியனே! அந்தம் நடு ஆகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட் கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே

விளக்கம்: அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவானவனே! எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே! சுடர் ஒளியாக இருப்பவனே! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே!
பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே! முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இருப்பவனே நிலையாகவும் ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே! காந்தம் போல என்னை ஈர்த்து என்னை ஆளாக –
அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே! உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின் பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே!

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே ! காண்பு அரிய பேர் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே ! ஆத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச், சொல்லாத நுண் உணர்வாய்

விளக்கம்: நீங்குவதும், புதிதாக வருவதும்,(பிறப்பு இறப்பு) இல்லாத புண்ணிய மூர்த்தியே! என்னைக் காக்கின்ற காவலனே! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே! தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே! தந்தையே! மிகுதியாக நின்ற ஒளி வீசும் சுடரான தோற்றத்தினாய், சொல்லப்படாத நுண் உணர்வாக இருந்து

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே ! தேற்றத் தெளிவே ! என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா! அரனே ஓ ! என்று என்று

விளக்கம்: இவ்வுலகில் பல்வேறு விதங்களில் மாற்றங்கள் வந்தாலும், மெய்யறிவாக இருப்பவனே!
அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே! என்னுடைய சிந்தனையினுள் உண்பதற்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே! என்னை உடைமையாக ஆள்பவனே! பலவேறு விகாரங்களை உடைய ஊனால் ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு

போற்றிப் புகழ்ந்து இருந்து பொய் கெட்டுமெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே! தென் பாண்டி நாட்டானே!

விளக்கம்: போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்
மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவி என்னும் மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே! வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே! தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே! தென்பாண்டி நாட்டை உடையவனே!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து

விளக்கம்: துன்பம் நிறைந்த இப்பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, இறைவன் திருவடியை பணிந்து அதன் கீழிருந்து சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள், பலராலும் புகழப்பட்டும், தொழப்படுவார்கள்.

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம் !

தெரிந்து கொள்க:

Kolaru Pathigam Lyrics in Tamil

108 ஆஞ்சநேயர் துதி மந்திரம்

ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள்

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

Muthai Tharu Lyrics in Tamil

Jaya Jaya Devi Song Lyrics in Tamil

Sivavakkiyar Padalgal Lyrics in Tamil

Sri Lalitha Sahasranamam Lyrics in Tamil

Sri Vishnu Sahasranamam Lyrics in Tamil

12 Zodiac Signs

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்