Skip to content
Home » தமிழ் இலக்கணம் » தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு

தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் வேற்றுமை உருபுமுதல் வேற்றுமை உருபு, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்

1. பெயர்களனைத்தும், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை, என எட்டு வேற்றுமைகளை ஏற்கும்.

இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் எனவும், பெயர்வேற்றுமை விளியெனவும் பெயர் பெறும்.

2. முதல் வேற்றுமையினது உருபாவது திரிபில்லாத பெயரேயாம்.
இது வினையையும், பெயரையும், வினாவையுங் கொள்ளும்.

உதாரணம்.

சாத்தான் வந்தான், சாத்தனிவன், சாத்தன் யார்
வேற்றுமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல், முடிக்குஞ் சொல் எனவும், பயனிலை எனவும், பெயர் பெறும்.
இத்திரிபில்லாத பெயர், தானே தன் பொருளை வினைமுதற் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட வினைமுதற் பொருளே இதன் பொருளாம்.

வினைமுதல், கருத்தா, செய்பவன் என்பன ஒரு பொருட் சொற்கள்.

இவ் வெழுவாய்க்கு வேறுருபு இல்லையாயினும், ஆனவன், ஆகின்றவன், ஆவான், என்பவன், முதலிய ஐம்பாற் சொற்களுஞ் சிறுபான்மை சொல்லுருபாக வரும்.

உதாரணம்.

சாத்தனானவன் வந்தான்
சாத்தியானவன் வந்தான்
சாத்தரானவர் வந்தார்
மரமானது வளர்ந்தது

3. இரண்டாம் வேற்றுமையினது உருபு ஐயொன்றேயாம்.
இது வினையையும், வினைக்குறிப்பையுங் கொள்ளும்.

இவ்வையுருபு தன்னையேற்ற பெயர்ப்பொருளைச் செயற்படு பொருளாக வேறுபடுத்தும், அப்படி வேறுபட்ட செயற்பட பொருளே இவ்வுருபின் பொருளாம்.

செயப்படுபொருள், கருமம், காரியம், என்பன ஒரு பொருட் சொற்கள்.
அச்செயற்படு பொருளானது, ஆக்கப்படுபொருள், அழிக்கப்படு பொருள், அடையப்பட பொருள், ஒக்கப்படபொருள், உடமைப்பொருள், முதலியனவாகப் பல திறக்கப்படும்.

உதாரணம்

குடத்தை வனைந்தான் – ஆக்கப்படு பொருள்
கோட்டையைப் பிடித்தான் – அழிக்கப்படு பொருள்
ஊரையடைந்தான் – அடையப்படுபொருள்
மனைவியைத் துறந்தான் – துறக்கப்படு பொருள்
புலியையொத்தான் – ஒக்கப்படுபொருள்
பொன்னையுடையான் – உடைமைப் பொருள்

4. மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு என்பனவைகளாம். இவை வினையைக் கொள்ளும்.

இவ்வுருபுகளுள், ஆன், ஆன் என்னும் இரண்டுருபுகளும, தம்மையேற்ற பெயர்ப் பொருளைக், கருவிய பொருளாகவும், கருதாப்பொருளாகவும், வேறுபடுத்தும் அப்படி வேறு பட்ட கருவிப் பொருளுங் கருதாப்பொருளும் இவ்வுருபுகளின் பொருளாம். கருவி, காரணம் என்பன ஒரு பொரட் சொற்கள்.
கருவி, முதற்கருவி, துணைக்கருவி, என இருவகைப்படும். கருத்தாவும், இயற்றுதற்கரத்தா, ஏவுதற் கருத்தா என இரு வகைப்படும்.

ஒடு, ஓடு என்னும் இரண்டுருபுகளும், தம்மையேற்ற பெயர்ப்பொருளை உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட உடனிகழ்ச்சிப் பொருளே இவ்வுருபு களின் பெர்ருளாம்.

உதாரணம்
மண்ணாலாகிய குடம்
மண்ணனாகிய குடம் முதற்கருவி
திரிகையாலாகிய குடம்
திரிகையானாகிய குடம் துணைக்கருவி
தச்சனாலாகிய கோயில்
தச்சனானாகிய கோயில் இயற்றுதற்கருத்தா

இவ்வுருபுகளுள், ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரிய விடத்துக் கொண்டென்பதும், ஓடு, ஒடு உருபுகள் நிற்றற்குரிய விடத்து உடனென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.

உதாரணம்.
வாள் கொணடு வெட்டினான்
தந்தையுடன் மைந்தன் வந்தான்

5. நான்காம் வேற்றுமை உருபுகள் குவ்வொன்றேயாம். இது வினையையும் வினையோடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.

இக்குவ்வுருபு, தன்னையேற்ற பெயர்ப் பொருளைக் கோடற்பொருளாகவும், பகைதொடர் பொருளாகவும், நட்புத் தொடர் பொருளாகவும், தகுதியுடை பொருளாகவும், முதற்காரண காரியப்பொருளாகவும், நிமித்த காரண காரியப்பொருளாகவும், முறைக்கியை பொருளாகவும். வேறுபடுத்தும். அப்படி வேறு பட்ட கொடற் பொருண் முதலியன இவ்வுருபின் பொருள்களாம்.

உதாரணம்

இரப்பவர்க்குப் பொன்னைக் கொடுத்தாள் – கோடற்பொருள்
பாம்புக்குப் பகை கருடன் – பகைத்தொடர்ப் பொருள்
சாத்தனுக்குத் தோழன் கொற்றன் – நட்புத் தொடர் பொருள்
அரர்க்குரித் தருங்கலம் – தகுதியுடைபொருள்
குண்டலத்திற்கு வைத்த பொன் – தகுதியுடைப் பொருள்
கூலிக்கு வேலை செய்தான் – நிமித்தகாரணகாரியப் பொருள்
சாத்தனுக்கு மகனிவன் – முறைக்கியை பொருள்

குவ்வுருபு நிற்றற் குரிய சில விடயங்களிலே, பொருட்டு நிமித்தம் என்பனவும், குவ்வுருபின்மேல் ஆகவென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.

உதாரணம்.
கூழின் பொருட்டு வேலை செய்தான்
கூலியினிமித்தம் வேலை செய்தான்
கூலிக்காக வேலை செய்தான்

6. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் இன், இல் என்பனவாகும்.
இவை வினையையும், வினையோடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.

இவ்வுருபுகள், தம்மையேற்ப பெயர்ப்பொருளை நீக்கப் பொருளாகவும், ஒப்புப்பொருளாகவும், எல்லைப் பொருளாகவும், ஏதுப்பொருளாகவும், வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட நீக்கப் பொருள் முதலியன இவ்வுருபுகளின் பொருள்கலாம்.

உதாரணம்.
மலையின் வீழருவி
மலையில் வீழருவி நீக்கப் பொருள்
பாலின் வெளிது கொக்கு
பாலில் வெளிது கொக்கு ஒப்புப் பொருள்
சீர்காழியின் வடக்குச் சிதம்பரம்
சீர்காழியில் வடக்குச் சிதம்பரம் எல்லைப் பொருள்
கல்வியினுயர்ந்தவன் கம்பன்
கல்வியிலுயர்ந்தவன் கம்பன் ஏதுப் பொருள்

பாலின் வெளிது கொக்கு என்னுமிடத்து, உயர்வு கருதின் எல்லைப் பொருளாம்.
நீக்கப்பொருளினும். எல்லைப் பொருளினும், இன், இல், உருபுகளின் மேல், நின்று, இருந்து என்பவை, உம் பெற்றும், பெறாதுஞ் சொல்லுருபுகளாக வரும்.

உதாரணம்.
நீக்கப்பொருள்
ஊரினின்றும் போயினான், ஊரினின்று போயினான்
ஊரிலிருந்தும் போயினான், ஊரிலிருந்தும் போயினான்

எல்லைப் பொருள்
காட்டினின்றுமூர் காவதம், காட்டினின்றூர் காவதம்
காட்டிலிருந்துமூர் காவதம், காட்டிலிருந்துமூர் காவதம்

ஒரொவிடத்து எல்லைப் பொருளிலே, காட்டிலும் பார்க்கிலும் என்பவைகள், முன் ஐகாரம் பெற்றுச் சொல்லுருபுகளாக வரும்.

உதாரணம்.
அவனைக் காட்டிலும் பெரியவனிவன்
இவனைக் காட்டிலும் சிறியனவன்

7. ஆறாம் வேற்றுமை உருபுகள் அது, ஆது, ஏ என்பனவாம்.
இவைகளுள், அது, ஆது உருபுகள் அஃறிணை யொருமைப் பெயரையும், அ உருபு அஃறிணைப் பன்மைப் பெயரையுங் கொள்ளும்.

உதாரணம்.
சாத்தனது கை, தனது கை, தன கைகள்
இவ்வுலுபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை வருமொழிப் பெயராகி தற்கிழமைப் பொருளோடும் பிறிதின் கிழமைப் பொருளோடுஞ் சம்பந்த முடைய பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட சம்பந்தப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.

தற்கிழமைப் பொருளாவது, தன்னோடு ஒற்றுமையுடைய பொருள். அது, உறுப்பும், பண்பும், தொழிலும், ஒன்றன் கூட்டமும், பலவின் கூட்டமும், ஒன்று திரிந்தொன்றாயதும் என, ஆற் வகைப்படும்.

உதாரணம்
சாத்தானது கை – உறுப்புத்தற்கிழமை
சாத்தனது கருமை – பண்புதற்கிழமை
சாத்தனது வரவு – தொழிற்றற்கிழமை
நெல்லது குப்பை – ஒன்றன்கூட்டற்தற்கிழமை
சேனையது தொகுதி – பலவின்கூட்டத்தற்கிழமை
மஞ்சளது பொடி – ஒன்று திரிந்தொன்றாயதன் தற்கிழமை

பிறிதின்கிழமைப் பொருளாவது, தன்னின் வேறாய் பொருள். அது, பொருள், இடம், காலம், என மூவகைப்படும்.

உதாரணம்
முருகனது வேல் – பொருட்பிறிதின் கிழமை
முருகனது மலை – இடப்பிறிதின்கிழமை
மாரனது வேனில் – காலப்பிறிதின் கிழமை

இவ்வுருபுகள் நிற்றற்குரிய இடங்களில், உடைய என்பது சொல்லுருபாக வந்து, இரு திணையொருமை பன்மைப் பெயரையுங் கொள்ளும்.

உதாரணம்.
சாத்தனுடைய புதல்வன், சாத்தனுடைய புதல்வர்
சாத்தனுடைய வீடு, சாத்தனுடைய வீடுகள்

சிறு பான்மை அதுவுருபு, அரனது தோழன், நினதடியாரொடல்லால் என உயர்திணையொருமை பன்மைப் பெயர்களையுங் கொள்ளுமென அறிக.

இவ்வீடானது, அத்தோட்டமவனது என வவுருவன வற்றில், எனது, அவனது, என்பன துவ்விகுதியும் அகராச்சாரியையும் பெற்று நின்ற குறிப்பு வினை முற்று. எனது போயிற்று, அவனதை வாங்கினேன், என வருவனவற்றில், எனது, அவனது என்பன, மேற்கூறியபடி வந்த குறிப்பு விணையாலணையும் பெயர். இங்ஙணமன்றி, இவ்விடங்களில் வரும் அது என்பது ஆறாம் வேற்றுமையுருபன்று.

8. ஏழாம் வேற்றுமை உருபுகள், கண், இல், உள், இடம் முதலியனவாம்.
இவை வினையையும், வினையோடு பொருந்நும் பெயரையுங் கொள்ளும்.

இவ்வுருபுகள், தம்மையேற்ற பொருள். இடம், காலம். சினை, குணம், தொழில் என்னும் ஆறு வகைப் பெயர்பொருளையும், வருமொழிப் பொருளாகிய தற்கிழமைப் பொருளுக்காயினும், பிறிதின்கிழமைப் பொருளுக்காயினும் இடப்பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுப்பட்ட இடப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.

உதாரணம்
மணியின் கணிருகின்ற தொளி
பனையின்கண் வாழ்கின்றதன்றில் தற் பிறி பொருளிடமாயிற்று
ஊரின் கணிருக்குமில்லம்
ஆகாயத்தின்கட் பறக்கின்றது பருந்து தற் பிறி இடமிடமாயிற்று
நாளின் கணாழிகையுள்ளது
வேனிற்கட்பாதிரி பக்கும் தற் பிறி காலமிடமாயிற்று
கையின் கணுள்ளது விரல்
கையின்கண் விளங்குகின்றது கடகம் தற் பிறி சினையிடமாயிற்று
கறுப்பின்கண் மிக்குள்ளதழகு
இளமையின்கண் வாய்த்தது செல்வம் தற் பிறி குணமிடமாயிற்று
ஆடற்கணுள்ளது சதி
ஆடற்கட்பாடப்பட்டது பாட்டு தற் பிறி தொழிவிடமாயிற்று
மற்றவைகளும் இப்படியே



9. எட்டாம் வேற்றுமை உருபுகள், படர்க்கைப் பெயாPற்றில் ஏ ஓ மிகுதலும், அவ்வீறு திரிதலும், கெடுதலும், இயல்பாதலும், ஈற்றயலெழுத்துத் திரிதலுமாம்.

இவை ஏவல் வினையைக் கொள்ளும்.

இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப் பொருளை முன்னிலையின் விளிக்கப்படுபொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட விளிக்கப்பட்ட பொருளே இவ்வுருபுகளின் பொருளாம். விளித்தல் – அழைத்தல்.

உதாரணம்
சாத்தனே ஏ மிகுந்து
அப்பனோ வுண்ணாய் ஓ மிகுந்து
வேனிலாய் கூறாய் ஈறு திரிந்தது
தோழ சொல்லாய் ஈறு கெட்டது
பிதா வாராய் ஈறியல்பாயிற்று
மக்கள் கூறிர் ஈற்றயலெழுத்துத் திரிந்தது

10. நுமன், நுமள், நுமர் என்னுங் கிளைப் பெயாகளும். எவன் முதலிய வினைப் பெயர்களும், அவன் முதலிய சுட்டுப் பெயர்களும், தான், தாம், என்னும் பொதுப் பெயர்களும், மற்றையான், பிறன் முதலிய மற்றுப் பிற என்பன அடியாக வரும் பெயர்களும் விளி கொள்ளாப் பெயர்களாம்.

11. சிறுபான்மை ஒரு வேற்றுமையுருபு நிற்றற் குரிய விடத்தே, மற்றதொரு வேற்றுமையுருபு மயங்கி வரும்; வரின் அவ்வுருபைப் பொருக்கியைந்த உருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும்.

உதாரணம்.
ஆலத்தினாலமிர்தமாக்கிய கோன்; இங்கே ஐயுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆலுருபு மயங்கிற்று.
காலத்தினாற் செய்த நன்றி; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆனுருபு மயங்கிற்று.
நாகுவேயொடு நக்கு வீங்கு தோள்; இங்கே ஐயுருபு நிற்றற் குரிய விடத்தில் ஓடுருபு மயங்கிற்று.
ஈசற்கியான் வைத்தவன்பு; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் குவ்வுருபு மயங்கிற்று.

12. ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமை யுருபோடுந் தகுதியாக வருதலும் உண்டு.

உதாரணம்.
சாத்தனோடு சேர்ந்தான்; இங்கே செயப்படு பொருள் மூன்றனுருபோடு வந்தது.
மதுரையை நீங்கினான்; இங்கே நீங்கப் பொருள் இரண்டனுருபோடு வந்தது.
சீர்காழிக்கு வடக்குச் சிதம்பரம்; இங்கே எல்லைப் பொருள் நான்கனுருபோடு வந்தது.
வழியைசல் சென்றான்; இங்கே இடப் பொருள் இரண்டனுருபோடு வந்தது.
இன்னும் இப்படி வருவனவற்றையெல்லாம் ஆராய்ந்தறிந்து கொள்க.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More: தமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்