Skip to content
Home » ஆன்மிகம் » நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

திருஅண்ணாமலை கோயில் பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகும். இத்தலத்தின் மூலவர் அண்ணாமலையார் அம்பிகை உண்ணாமுலை ஆவர். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது சிவபெருமான் ஒளி வடிவமாக (இலிங்கோத்பவர்) தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரியவர் என்று கூறினார். இருவரும் பல கோடி ஆண்டுகள் சென்றும் முடியவில்லை. திருமால் அடியை காண முடியாமல் திரும்பினார், பிரம்மாவோ தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். ஆதலால் பிரம்மாவிற்கு ஆலயங்கள் இல்லாமல் போனது.

முக்தி தரும் தலம் 

மற்ற தலங்களுக்கு சென்றால் தான் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலமாகும்.

மலை வலம் (கிரிவலம்)

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. கோயிலில் மலைவலம் வருதல் இறைவனை வலம் வருதலாகும். எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் பௌர்ணமி நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் ஆகும்.

அட்டலிங்கம்

பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், பாதள லிங்கம், அண்ணாமலையார் பாத மண்டபம், ராஜா கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் மற்றும் முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன.

திருவிழா : கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும் இத்திருநாள் கொண்டாடப்படுக்கிறது, கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் மகா தீபம் மாலையில் இம்மலையில் ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். பின்பு மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.



அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்ததநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

தமிழ்நாட்டில் கார்த்திகை தீபத் திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். வீட்டில் மூன்று நாட்களாக தீபம் ஏற்றி வழிபடுவர். இந்த நாளன்று நெல் பொரியும், அவல் பொரியும் சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.

தீபம் ஏற்றும் முறை

கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

  1. ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
  2. இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.
  3. மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.
  4. நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.
  5. ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.
போக்குவரத்து

இத்திருத்தலம் விழுப்புரம் காட்பாடி ரயில் மார்கத்தில் விழுப்புரத்திலிருந்து 65 கி.மி, தூரத்திலும் காட்பாடியிலிருந்து 90 கி.மி தூரத்திலும் அமைந்துள்ளது.

இத்திருத்தலம் வேலூரிலிருந்து 70 கி.மி. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 60 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 60 கி.மி. தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து 100 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது.

Video – Learn Basic Astrology in Tamil

 

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

1 thought on “நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை”

Comments are closed.