Skip to content
Home » கல்யாணசுந்தரம் » தெய்வம் தேடுதல் – கல்யாணசுந்தரம்

தெய்வம் தேடுதல் – கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சேவை

ஆண் : அறம் காத்த தேவியே!
குலம் காத்த தேவியே!
அறிவின் உருவமான ஜோதியே
கண் பார்த்தருள்வாயே!
அன்னையே!அன்னையே! (அறம்)

பெண் : ஹே மாதா! என் தாயே!
உன் பாதம் நம்பினேன் அம்மா!
சத்தியம் லட்சியமாய்ச்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா!

ஆண் : துன்பம் இல்லாமல் எல்லோரும் மனம்
ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம்
நம் மனதில் உறுதியாகவே
மலிந்த கொடுமை நீங்கவே-இம்
மனித வாழ்வில் உயர்வு காணவே
நீ வாழ்த்திடுவாயே தேவியே! தேவியே!

பெண் : ஹே!பவானி லோகமாதா!
ஏழைகளின் வாழ்வில் சுகம்தா
சத்தியமே லட்சியமாய்ச்
சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா!

காதல் மாத்திரை

சிங்கார வேலவனே! சிவகாமி தன் மகனே!
தினைப்புனத்தில் குறவர் வீட்டிலே
திருட்டுத்தனமா புகுந்தவனே சண்முகனே – ரொம்ப
சிறுசிலே வெண்ணெய் திருடித் தின்னவன் மருமகனே!

பச்சை மயில் வாகனனே
பாடுங்குறி சொல்லிடவா?
உச்சிமலை விட்டிறங்கி
உலகத்தைக் கண்டிடவா?

காசியாத்திரை போகையிலே-ஒரு
காதல் மாத்திரை தின்னதுண்டா?
சோசியர் மகன் சொக்கலிங்கம் – ஒங்க
சொப்பனத்தில் வந்து சொன்னதுண்டா?

ஆசை வீட்டிலே விளக்கு வைக்கற
அழகுக் கன்னியைக் கண்டதுண்டா?
பேச நினைச்சு ராவும் பகலா
பித்த மயக்கம் கொண்டதுண்டா? – ஐயாவே அந்த
உத்தமி உனக்குப் பத்தினியாவா மெய்யாவே
ஒருத்தர் நிலைமை இப்படியிருக்க
ஒங்க நிலைமையும் ஒண்ணுதானா?…ஒரு
கருத்த கன்னியின் பெருத்த மேனியில்
கண்ணைப் பதிச்சதும் உண்மைதானா?
அருத்தம் புரிஞ்சு-அவளும் – வாழைக்
குருத்துபோல வாடிப்போனா
தரத்துக்கேத்த தங்கரதம் – அவ
சம்மதிப்பா நீங்க தேடிப்போனா

சரிதானா? – ஒரு
ஜாடைக்கு என்னைப்போல்
தடிச்ச உடம்பு
அதுதானா?

விடுதலை

உள்ளும் புறமாகி
ஒளியாகி-ஞான
வௌியாகி நின்ற உமையே!

துள்ளும் கலைகளாகித்
துளியாகிக் கடலாகித்
தௌிவாகி நின்ற திருவே!

அல்லும் பகலுமாகி
அறமாகித் தரமாகி
வளமாகி வந்த வடிவே!
அனுதினமும் உனது மலரடி
இணையில் இணையுமெனை
ஆண்டருள்வாய் அம்மையே…!

கையிலே சூலமும்
கண்ணிலே கருணையும்
கனிவாயில் அன்பு நகையும்

கொய்யாத மலர்முகமும்
குலுங்கு நவமணி அழகுங்
கொண்ட தாயே!

மை போன்ற இருட்டிலே
வையகமும் மாந்தரும்
மயங்கும் வேளை

மெய்யிலே அறிவெனும்
விளக்கேற்றி வைத்து நீ
விடுதலை வழங்குவாயே…!

கணவனுக்குச் சேவை

ஓ….மாதா!பவானி!
மனம் நிறை சங்கரி!
உனை நம்பிய பேதைக்கு
அமங்கலமா அம்மா…தேவி….

சகலமும் நீயெனத் துவங்கிய வாழ்வினில்
சகுன பேதமா?..இதுதான் உனது வேதமா? மங்கல
இசை இன்னும் ஓயவுமில்லை
மணவறை ஆடை மாற்றவுமில்லை
மஞ்சள் அரிசி மண்ணில் சிந்தவுமில்லை
வந்த பேரின்பம் வைகைச் சுழல்தானோ?
வஞ்சம் ஏனோ…ஓ-மாதா (சகலமும்)

கணவன் துணையே நிலையான செல்வம்!
கணவன் உயிரே மனையாளின் தெய்வம்!
கணவன் சேவையைப் பறிப்பதிலும் எனைப்
பலிகொள்ளலாமே…மாதா..தேவி…மாதா!

உயிர்

கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா
கழுகுமலை பழனிமலை
கால்நடையாய்ப் போக வேணும்
எங்கந்தா, எம்முருகா-என்வேலா
எங்குமரா-ஆ-ஆ
சுப்பிரமணியா-ஆறுமுகா-நீ
கண்திறந்து பார்த்திடய்யா
எட்டுஜாண் குச்சிக்குள்ளே…கந்தையா
எத்தனை நாளிருப்பேன்

எட்டுஜாண் குச்சிக்குள்ளே-கந்தையா
எத்தனை நாளிருப்பேன்-ஒரு
மச்சுவீடு கட்டித் தாருங்காணும்-உச்சி
மலையின் மேலோனே-ஒரு (மச்சு வீடு)

சட்டியில் சேர்ந்ததெல்லாம்-கந்தா உன்
சன்னதி சேர்த்திடுவேன் (சட்டியில்)

மொட்டை ஆண்டி ஒன்னை
முழுசாவே நம்புறேன்
மோட்சம் தந்திடப்பா-அட (மொட்டை)

தீராத வினைகளெல்லாம்
தீர்த்து வைப்பார் கோவிந்தம்
மாறாத மனசையெல்லாம்
மாத்தி வைப்பார் கோவிந்தம்!
பட்டை நாமம் கண்டால்
பசி தீர்ப்பார் கோவிந்தம்-உன்
கட்டை கடைந்தேறக்
கைகொடுப்பார் கோவிந்தம்!

கோவிந்தம் கோவிந்தம்
கொடுத்தா புண்ணியம் கோவிந்தம்!
ரகுராமா ரகுராமா
நடுத்தெருவிலே என்னை விடலாமா?

அடப்பாவிகளே பாவிகளே
பார்த்துட்டு சும்மா போறீங்களே!
கோவிந்தம் கோவிந்தம்
கோவப்படாத கோவிந்தம்!

மானாகி,மயிலாகி,மானாகி,மயிலாகி
நானாகி,நீயாகி,வடிவாகி வந்த வடிவே-ஏ-ஏ
பெண்ணாகி,ஆணாகி,பேச்சாகி
மூச்சாகி-அடேயப்பா
பெண்ணாகி ,ஆணாகி,பேச்சாகி,மூச்சாகி
கண்ணாலே கொல்லும் கண்ணே-கண்ணே கண்ணே
கண்ணே கண்ணே கண்ணே
உடம்பை நம்பாதே-கண்ணே
உடம்பை நம்பாதே (உடம்பை)

உயிர் பிரிந்த பின்னே-இது
ஒன்றுக்கும் உதவாத மண்ணே
உடம்பை நம்பாதே-கண்ணே
உடம்பை நம்பாதே

எங்கும் இன்பம்

கங்கை அணிந்தவா!
கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாதவினோதா
லிங்கேஸ்வரா-நின்தாள் துணை நீதா
தில்லையம்பல நடராஜா!
செழுமைநாதனே பரமேசா!
அல்லல் தீர்த்தாண்டவா-வாவா
அமிழ்தானவா….(தில்லை)

எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதி
எளிமை அகல வரந்தா-வாவா
வளம்-பொங்கவா(தில்லை)

பலவித நாடும் கலை ஏடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலையின் வாசா
மங்கா மதியானவா…(தில்லை)

கடவுள் எங்கே

பார்த்தாயா மானிடனின் லீலையை-தேவா
பார்த்தாயா மானிடனின் லீலையை-தேவா
நிலையான உலகத்தையும்
நேரான பழக்கத்தையும்
தலைகீழாய்ப் புரட்டிவிடும்
தாறுமாறு வேலையை (பார்த்தாயா)
பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே…ஹா…ஹா (பக்த)

பசியும் சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை
சுத்தமான போலிகளின்
சோம்பேறி வேஷத்திலே! (சுத்த)

தொடர்ந்து உந்தன் கண்ணெதெரில்
நடந்து வரும் மோசங்களை
ஆட்டம் போட்டுப் புரள்வதுதான்
ஆண்டவனின் சேவையா?
ஆலயத்தைத் தரிசிக்க
அலங்காரம் தேவையா?
ஆளை ஆளு இடிக்கறதும்
அடிதடியும் ஏனையா?

அன்பர்கண்ணு அங்கே மொறைக்குது
கும்பிடு மட்டும் இங்கே நடக்குது (பார்)
விண்ணும் மண்ணும் நீயானாய்
வெயிலும் மழையும் நீயானாய்
விளங்கும் அகில உலகமிது
நீயில்லாத இடம் ஏது? ஹா…ஹா…ஹா…(விண்)

காசு தந்தால்தான் உன்னைக்
காணும்வழி காட்டுவதாய்
கதவு போட்டு பூட்டி வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப் (பார்)

ஆளை விழுங்கும் காலம்

ஓங்கார ரூபிநீ
ஆங்கார மோகினி
உக்ரமா காளி நீயே
ரீங்கார நாதம்
நீஸ்ருங்கார மாதுநீ என்
நெஞ்சூரில் வாழும் தாயே!

அம்பிகையே முத்து மாரியம்மா-உன்னை
நம்பி வந்தோம் ஒரு காரியமா! (அம்)

ஆளை விழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா
ஏழை எங்கள் நிலைமையைத்தான்
எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா!(அம்)

சமயபுரத்து மகமாயி சகல உலக மாகாளி
கன்னபுரத்து மகமாயி காஞ்சிபுரத்து காமாட்சி
குறைகள் தீரக் கொடுமைகள் மாற
கருணைக்கண்ணால் பாருமம்மா!
கும்பிடுபோடும் ஏழை எங்கள்
குடும்பம் வாழ வேணுமம்மா! (அம்)

இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு-அது
எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?
பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது
பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது
துன்பம் வந்தெங்களைச் சொந்தம் கொண்டாடுது
சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது
சூதுக்காரர் தொட்டிலிலே
காதும் கண்ணும் கெட்டு-நல்ல
நீதியது குழந்தை போல உறங்குதம்மா-அதை
நினைக்கையிலே மக்கள்மனது கலங்குதம்மா-காசி விசலாட்சி

கன்யா குறிச்சி,வடிவழகி,பேச்சி,
சடச்சி,பெரியாட்சி
காட்சி கொடுக்கும் மீனாட்சி!
தெரிஞ்சு நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு உண்மை
ஒளிஞ்சு மறைஞ்சு வாழுதம்மா-இன்று
பணிஞ்சு நடக்கும் எளியவரிடம்
பசியும் பிணியும் பந்தயம் போடுது!
கொஞ்சம் ஏமாந்தால் வஞ்சம் தீர்க்கப்பாக்குது
தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா
தேவைக்கேற்ற வகையில் உன்னை
போற்றுகிறோம் தூற்றுகிறோம்!
தீர்ப்பளித்துக் காப்பதுந்தன் திறமையம்மா-உன்
திருவடியைப் பணிவதெங்கள் கடமையம்மா!

அக்கினிக்காளி பத்திரக்காளி அந்தரக்காளி
உதிரக்காளி
நடனக்காளி சுடலைக்காளீ!
குறைகள் தீரக் கொடுமைகள் மாற
கருணைக் கண்ணால் பாருமம்மா!
கும்பிடுபோடும் ஏழை மக்கள்
குடும்பம் வாழ வேணுமம்மா!
நெடியசூலி பெரும்பிடாரீ (அம்பிகையே)

நீயே துணை!

அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா (அம்மா)

அகிலமும் நீயே ஆதியும் நீயே
ஆண்டருள்வாயே அன்பெனும் தாயே
நிதமுமென் வாழ்வில் நிலையான தாயே
நினைவிலும் கனவிலும் நீயே துணை (அம்மா)

மானமும் பெண்மையும் குலப்பண்பும் பொங்க
தேன் மொழிச் செல்வனைத் தாலாட்டிக் கொஞ்ச
(மானமும்)

மங்கல நாணும் மஞ்சளும் வாழ
மனஇருள் நீங்கி மகிழ்ந்தென்றும் வாழ
வழிபுரிவாய் ஜோதி நீயே துணை! (அம்மா)

மாசற்ற அன்பு

பாசத்தால் எனையீன்ற
அன்னை தந்தை
பதை பதைத்து நிற்கின்றார்
மகனைக் காண

பேசத்தான் வார்த்தையில்லாக்
கற்பு மங்கை
பிடியென்றால் தன்னுயிரைக்
கணவன் வாழ

மாசற்ற அன்புக்கு
மரணம் உண்டோ?
மதிகெட்டு வந்தாயோ
வஞ்சகப் பாம்பே!

வாழத்தான் வேண்டும்
நான் கடமைக்காக
மனமிருந்தால் ஓடிவிடு
மாயப் பாம்பே! மாயப் பாம்பே!

பெண் மனசு

ஜிலுஜிலுக்கும் பச்சைமலை,
தென்றல் பொறந்தமலை
தென்பொதிகை எங்கள்மலை சாமியோ சாமி
தேக்கு மரம்,பாக்கு மரம்-எங்கள்
தென்னை மரம்,புன்னை மரம்-எங்க
வாழ்க்கை யெல்லாம் காட்டுக்குள்ளே
ஏஞ்சாமி யோசாமி!-நாங்க
வந்ததில்லே நாட்டுக்குள்ளே

சிட்டுக் குருவியிவ,சிங்கினிக் குறத்திமவ,
சித்திரைப் பதுமை தானுங்க-பொண்ணு மனசு
முத்திரைப் பசும் பொன்னுங்க
தையன்னத் தையன்னத்தானா
தையான தயன்னத்தான
தங்தோம் தன்னானக் கந்தையா

உன்பேரைப் பாடிவந்தோம் சிங்காரக் கந்தையா
வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி
வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா
மீறி வரும் புலியை வீரத்தினால் அடக்கி
ஏறி மிதிச்சுக்கிட்டு பல்லை எடுப்பா
தையத் தையத் தையத் தந்தின்னத்
தம்தின்னத் தைய
திக்கெல்லாம் சுத்தி வருவா-மச்சானைத்தேடி
தென்றலைத்தூது விடுவா
தையன்னத் தையன்னத்தான்
தையான தயன்னத் தானத்
தந்தோம் தன்னானக் கந்தையா!

உன்பேரைப் பாடிவந்தோம் சிங்காரக் கந்தையா
மழைமேகம் போலக் கூந்தல் தனைக்காட்டி
மயங்கியோட வச்சு மயில் பிடிப்பா!
மதுரக் கவிபோலக் கோவை யிதழ் காட்டி
வண்ணம் பாட வைச்சுக் குயில் பிடிப்பா!

பூனைபிடிப்போம் அதில் புனு கெடுப்போம்
பொல்லாத சிங்கத்தையும் அடைத்து வைப்போம்!
ஆனை பிடிப்போம் அதில் தந்த மொடிப்போம்
அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்!
(சிட்டுக்)

சிங்கினி சிங்கினி சிங்கினி
திறமையுள்ளவன் எடுத்துக்கோ
டங்கினி மங்கினி டங்கினி மங்கினி
ரகசியத்தைப் புரிஞ்சுக்க! (சிட்டுக்)

ஞானம்!

தேவி மனம் போலே
சேவை புரிந்தாலே
தேவை நிறைவேறும்! (தேவிமனம்)

பாவ வினை தீரும்
யோக நிலையாலே
தேவ மொழியாலே
மாயா வழிகாணும்
ஞான மருள்வாயே! (தேவிமனம்)

வானில் உலாவும் வண்ண நிலாவும்
நாணம் கொள்ளும் நங்கையாள்
ஆடல் விநோத ஆனந்த கீத
பாடம் சொல்லும் மங்கையாள்!
அழகு வரும் நேரம்
அன்னை அதிகாரம்
முழுதும் அவள் பாரம்
மோகம் வெகு தூரம் (தேவி மனம்)

நோட்டம்!

ஆண் : ஆனைமுகனே ஆதி முதலானவனே
பானை வயிற்றோனை பக்தர்களைக் காப்பவனே
மோனைப் பொருளே
மூத்தவனே கணேசா கணேசா!
ஏனென்று கேளுமையா-இந்த
ஏழை முகம் பாருமையா

குழு : புள்ளையொரு கோவிலுக்குப்
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு-இந்தப்
பிள்ளை யாரு?

பெண் : புள்ளையாருக்கு கோவிலுக்குப்
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு-இந்தப்
பிள்ளை யாரு?

பெண் : புள்ளையாரு கோவிலுக்குப்
பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு-இந்தப்
பிள்ளை யாரு?
வள்ளியம்மை நேசத்திலே
வனவேடன் வேஷத்திலே
வாட்டங்கொண்ட வேலனுக்கு
உதவி செஞ்சாரு-யானை
உருவில் வந்தாரு-இந்தப்
வாதங் கொண்ட மாப்பிளைக்கு
என்னடி செய்வாரு? பெண்ணுக்கு
எங்கடி போவாரு?

ஆண் : ஆஹா…குலுக்கி மினுக்கிக்கிட்டு
குடங்களையும் தூக்கிக்கிட்டு
தளுக்கு நடை போட்டுகிட்டு
ஜாடையிலே பார்த்துக்கிட்டு
கொளத்தங்கரை ஓரத்திலே-அட
எங்கப்பா கணேசா!
மயக்கம் வரும் நேரத்திலே
கூட்டமா வந்திருக்கும் இவங்க
நோட்டமென்ன சொல்லுமப்பா?-இவங்க
நோட்டமென்ன சொல்லுமப்பா?

குழு : ஓகோ!

பெண் : தனக்கொருத்தி யில்லாமே
தனிச்சிருக்கும் சாமியிடம்
எனக்கொருத்தி வேணுமின்னு
கேக்க வந்தாரோ?
ஏங்கி ஏங்கி எதைப்
பார்க்க வந்தாரோ?

ஆண் : ஏய்..போக்கிரிக் குட்டிகளா
தண்ணி தூக்கப் போறதுபோல்
கண்ணிபோட வந்திருக்கும்
பொண்ணு யாரு?-இவ
புருஷன் யாரு?-அந்தக்
கள்ளி யாரு?
வேப்பெண்ணையைப் பூசிகிட்டு
வெறுங்கையாலே கிண்டி விட்டு
வேடுகட்டும் கூந்தலிலே செங்கமலம்-காக்கா
கூடுகட்டப் பார்க்குதுடி ருக்குமணி ருக்குமணி!

குழு : ஓஹோ

பெண் : கட்டழகைப் பாருங்கடி
காலைப் புடிச்சு வாருங்கடி!

குழு : (கட்டழகை)

ஆண் : ஏய்…ஒய்யாரப் பெண்டுகளா
ஒடம்பைத் துளைக்கும் வண்டுகளா!

குழு : நொண்டிக்கை நொண்டிக்கை
ஊளை மூக்கு ஊளை மூக்கு

ஆண் : கோண மூஞ்சி கோண மூஞ்சி
பூனைமுழி பூனைமுழி!

குழு : முட்டிக் காலு சட்டித் தலை!
ஆண் : சொத்தப் பல்லு பட்டி வாயி!

குழு : நீதான்
ஆண் : நீங்கதான்

குழு : புடிங்கடி
ஆண் : நில்லுங்கடி…டூர்….

ஒரே ரத்தம்

ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா!

மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து
ஒரேகாத்து ஒரே தண்ணி
ஒரே வானம் ஒரே பூமி
ஆமடி பொன்னாத்தா! (ஊருக்)

எல்லோருக்கும் உலகம் ஒண்ணு
இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு
நானும் ஒண்ணே தானே
யாரு மேலே கீறினாலும்
ரத்தம் ஒண்ணு தானே
ஆகமொத்தம் பிறந்ததெல்லாம்
பத்தாம் மாதம் தானே (ஆக)

உயிருகெல்லாம் ஒரேபாதை
ஒரேபாதை ஒரே வாசல்
ஒரே கூடு ஒரே ஆவி
பாரடி கண்ணாத்தா! (உயிருக்)

பாடுபட்டோர் கொஞ்சமில்லை
பலன் வெளைஞ்சா பஞ்சமில்லே
ஆடும் மாடும் நாமும் வாழ
அருள் புரிவாளே-அம்மா
அருள் புரிவாளே
அங்காளம்மன் கோவிலுக்குப்
பொங்க வைக்க வேணும்
அன்னையவள் எங்களையும்
பொங்க வைக்க வேணும் (அங்கா)

ஆளுக் கெல்லாம் ஒரே கோயில்
ஒரே கோயில் ஒரே பூசை
ஒரே ஞாயம் ஒரே தீர்ப்பு!
கேளடி கண்ணாத்தா! (ஊருக்)

ஏங்கும் ஏழை

கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே-என்
காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
ஏழைக்குக் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்-வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக் கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே-அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே)

விதவிதமாய்த் துணிகள் இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லே-இதை
எண்ணாமலிருக்கவும் முடியல்லே (கையிலே)

கண்ணுக்கு அழகாப் பெண்ணைப் படைச்சான்
பொண்ணுக்கு துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்கு பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு-அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே)

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

மேலும் காண்க

Business Ideas in Tamil

Video: அம்மா பற்றிய வரிகள்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்