Skip to content
Home » பொதுத் தமிழ் தகவல்கள் » திருக்குறள் களவியல்

திருக்குறள் களவியல்

திருக்குறள் விளக்கம்
தகையணங்குறுத்தல்

குறள் 1081:

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

குறள் 1082:

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

குறள் 1083:

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

குறள் 1084:

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

குறள் 1085:

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

குறள் 1086:

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

குறள் 1087:

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

குறள் 1088:

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!.

குறள் 1089:

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

குறள் 1090:

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

குறிப்பறிதல்

குறள் 1091:

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

குறள் 1092:

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

குறள் 1093:

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

குறள் 1094:

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

குறள் 1095:

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

குறள் 1096:

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

குறள் 1097:

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

குறள் 1098:

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

குறள் 1099:

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

குறள் 1100:

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

புணர்ச்சிமகிழ்தல்

குறள் 1101:

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

குறள் 1102:

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

குறள் 1103:

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?

குறள் 1104:

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

குறள் 1105:

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

குறள் 1106:

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

குறள் 1107:

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

குறள் 1108:

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

குறள் 1109:

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

குறள் 1110:

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

நலம்புனைந்துரைத்தல்

குறள் 1111:

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

குறள் 1112:

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

குறள் 1113:

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

குறள் 1114:

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

குறள் 1115:

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

குறள் 1116:

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

குறள் 1117:

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.

குறள் 1118:

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

குறள் 1119:

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

குறள் 1120:

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

காதற்சிறப்புரைத்தல்




குறள் 1121:

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

குறள் 1122:

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.

குறள் 1123:

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!.

குறள் 1124:

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

குறள் 1125:

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே!.

குறள் 1126:

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.

எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

குறள் 1127:

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.

குறள் 1128:

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.

குறள் 1129:

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.

கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

குறள் 1130:

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.

காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

நாணுத்துறவுரைத்தல்

குறள் 1131:

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

குறள் 1132:

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

குறள் 1133:

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

குறள் 1134:

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

குறள் 1135:

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

குறள் 1136:

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

குறள் 1137:

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.

கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

குறள் 1138:

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!.

குறள் 1139:

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

குறள் 1140:

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

அலரறிவுறுத்தல்




குறள் 1141:

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

குறள் 1142:

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

குறள் 1143:

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

குறள் 1144:

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

குறள் 1145:

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

குறள் 1146:

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

குறள் 1147:

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

குறள் 1148:

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

குறள் 1149:

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.

அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?

குறள் 1150:

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

Comments are closed.