Skip to content
Home » தமிழ் இலக்கணம் » எட்டுத்தொகை நூல்கள் யாவை?

எட்டுத்தொகை நூல்கள் யாவை?

எட்டுத்தொகை நூல்கள் யாவை? – தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவைகளை பார்ப்போம்.

எட்டுத்தொகை நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள்

அகம் சார்ந்த நூல்கள் 

1. நற்றிணை
2. குறுந்தொகை
3. அகநானூறு
4. ஐங்குறுநூறு
5. கலித்தொகை
என்ற ஐந்துமாகும்.

புறம் சார்ந்த நூல்கள் 

1. புறநானூறு
2. பதிற்றுப்பத்து
என்ற இரண்டுமாகும்.

அகமும் புறமும் சார்ந்த நூல்

1. பரிபாடல்

இனி ஒவ்வொரு எட்டுத்தொகை நூல்களின் அமைப்பும் சிறப்பும் பற்றி விரிவாக காண்போம்.

நற்றிணை

அகநானூறு போல் மிக நீண்டனவாகவும் குறுந்தொகை போல் மிகச் சிறியனவாகவும் அமையாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட அளவினதான 400 அகவல்கள் நற்றிணை என்ற தொகுப்பில் உள்ளன. இதன் அடியளவு 9 முதல் 12 அடிகள். இதில் 110, 379 ஆம் எண்ணுள்ள பாடல்கள் ஆகிய இரண்டும் 13 அடிகள் கொண்டவை. இந்த நூலுக்கு அமைந்த திருமால் வணக்கப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது.

குறுந்தொகை

குறுகிய அடிகளால் ஆன 400 ஆசிரியப்பாக்களால் ஆன நூல் குறுந்தொகை ஆயிற்று. இதில் நாலடி முதல் எட்டடி வரை அமைந்த பாடல்கள் இடம் பெற்றன. இதனை இயற்றியோர் 205 புலவர்கள். இதற்குக் கடவுள் வாழ்த்தொன்று உண்டு. இதன் ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

இது முருகவேள் வணக்கமாக அமைந்துள்ளது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர். தொகுப்பித்தார் பெயர் தெரியவவில்லை. இதற்குப் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் எழுதிய உரைகள் கிடைக்கவில்லை. இதன் 235 பாடல்கள் பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.

ஐங்குறுநூறு

இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளும் உயர்ந்த அளவாக ஆறு அடிகளும் கொண்டவை. இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது. ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பாடியுள்ளனர்.

ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு. கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும் பாத்திரம் முதலியவற்றுள் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக அமையும்.

அகநானூறு

இது 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப்பேரெல்லையும் உடைய 400 பாடல்களைக் கொண்டது. ஆசிரியப்பா யாப்புடையது. பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்கு வாழ்த்துப் பாடியுள்ளார். அது சிவ வணக்கப் பாடலாகும். இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு.

இது களிற்று யானை நிரை (1-120) மணிமிடை பவளம் (121-300) நித்திலக்கோவை (301 – 400) என்று மூன்று தொகுதிகளாக உள்ளது. தொகுப்பு முறையில் இது ஏனையவற்றை விட வேறுபட்டுள்ளது.

பாட்டின் எண் கொண்டு அதன் திணையைச் சொல்லும் வகையில் இவை கோக்கப்பட்டுள்ளன. ஒற்றைப்படை எண் கொண்ட 200 செய்யுட்கள் பாலைக்கு உரியன. 2, 8 என்ற எண்களில் முடிவன குறிஞ்சிக்குரியன. 4 என்ற எண்ணில் முடிவன முல்லைக்கும், 6 என்ற எண்ணில் முடிவன மருதத்திற்கும், 10, 20 என்றவாறு முடிவன நெய்தலுக்கும் உரியன. மதுரை உப்பூரிகுடி கிழாரைக் கொண்டு இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப்பெருவழுதி என்பர். இதில் 175 புலவர்களின் செய்யுட்கள் உள்ளன. மூன்று பாடல்கட்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

கலித்தொகை

கலிப்பா என்னும் பாவகையால் யாக்கப்பட்ட 150 பாடல்கள் கொண்டது இந்நூல். அகப்பொருளைப் பாட ஏற்ற யாப்பாகத் தொல்காப்பியரால் சொல்லப்பட்டவை கலியும் பரிபாடலும் என்பது நினையத்தக்கது.

பிற்காலத்து வெண்பாவொன்று, இதிலுள்ள ஐந்திணைகளையும் பாடிய புலவர்களைக் குறிப்பிடுகின்றது. இதன்படி, பாடியோரும் அவர் பாடிய திணையும் பின்வருமாறு அமையும்.

பாலை – பாலை பாடிய பெருங்கடுங்கோ
குறிஞ்சி – கபிலர்
மருதம் – மருதன் இளநாகனார்
முல்லை – சோழன் நல்லுருத்திரன்
நெய்தல் – நல்லந்துவனார்

நல்லந்துவனார் இந்நூலைத் தொகுத்தவர் ஆவார். நூல் முழுவதனையும் ஒரு புலவரே பாடியிருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

புறநானூறு

புறப்பொருள் பற்றிய 400 அகவற்பாக்களைக் கொண்டது புறநானூறு. இதனைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யாவர் எனத் தெரியவில்லை. 267, 268 ஆகிய இரு செய்யுட்களும் அழிந்தன. 266 ஆம் செய்யுட்குப் பின்னர் வரும் செய்யுள்களில் சிதைவுகள் உள்ளன. இதற்கு வணக்கச் செய்யுள் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

அது சிவ வணக்கமாகும். இதற்கு 266 செய்யுட்கள் வரையில் பழைய உரை உண்டு. இதனை இயற்றியோர் 157 பேர் என்பர். பல பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை. (16 செய்யுட்கள்) இதனை நமக்குத் தேடித் தந்தவர் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயராவார்.

பதிற்றுப் பத்து

பத்துச் சேர மன்னர்கள் பற்றிப் பத்துப் புலவர்கள் தலைக்குப் பத்துச் செய்யுள் வீதம் பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது. இதன் முதற்பத்தும், இறுதிப்பத்தும் அழிவுற்றன. எஞ்சியவை 80 செய்யுட்களே. இதனைத் தொகுத்தார் தொகுப்பித்தார் இன்னார் எனத் தெரியவில்லை. இதற்குப் பழைய உரையொன்று உண்டு.

இந்நூலின் ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பதிகம் உண்டு. அதன் முற்பகுதி செய்யுளாகவும் பிற்பகுதி உரைநடையாகவும் உள்ளன. இது, பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், அவன் பெற்றோர், செய்த அருஞ்செயல்கள், ஆண்ட கால அளவு, பாட்டுகளின் பெயர்கள், புலவர் பெற்ற பரிசில் முதலிய அரிய செய்திகளைத் தருகின்றது.

பரிபாடல்

எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடலாகும். பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற பெயர். இதில், திருமால், முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும், மதுரை நகர் பற்றியும், வையையாறு பற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள் இருந்தன. அழிந்தவை போக இப்போது 22 பாடல்களும் சில சிதைந்த உறுப்புகளுமே எஞ்சியுள்ளன. புறத்திரட்டிலிருந்து வேறு இரு பாடல்கள் கிடைத்துள்ளன.

– பேரா.அ.தட்சிணாமூர்த்தி

தெரிந்து கொள்க

தமிழ் இலக்கண நூல்கள்

தமிழ் இலக்கணத்தின் வகைகள்

தன்மை வினைமுற்று

முற்று வினை என்றால் என்ன

இடவேற்றுமை பெயர்கள்

வேற்றுமை உருபு

Video: அடிப்படை ஜோதிடம் கற்க

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்