மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்: முதல் முறையாகப் பக்தர்கள் இன்றி நடந்தது


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில், முருகப் பெருமான் சூரனை வதம் செய்தார். முதல் முறையாகப் பக்தர்கள் இன்றி இந்த நிகழ்வு நடைபெற்றது.

முருகப் பெருமானின் 7-வது படை வீடாகப் பக்தர்களால் போற்றப்படும் கோவை மருதமலையில், சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா கடந்த நவ.15-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்ட 15 வகையான வாசனைத் திரவியங்களால் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

கந்த சஷ்டி விழாவின் 6-வது நாளான இன்று (நவ. 20) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகல் 2 மணியளவில் பச்சை நாயகி அம்மன் சன்னதியில் சக்திவேல் வாங்கி வீர நடனமாடிய முருகப் பெருமான், ஆட்டுக்கிடா மற்றும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முதலில் சூரனையும், இரண்டாவதாக பானுகோபனையும், மூன்றாவதாக சிங்கமுகாசுரனையும், நான்காவதாக சூரபத்மனையும் வதம் செய்தார். பின்னர் வெற்றி வாகை சூடிய முருகப் பெருமானுக்கு சேவல் கொடி சாத்தப்பட்டது.

கரோனா தொற்றுக் காலத்தில் பக்தர்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில், மருதமலை அடிவாரத்தில் தடுப்புகள் வைத்துத் தடுத்து நிறுத்தப்பட்டது. பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பெற்றது. பின்னர் மாலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

நாளை (நவ.21) காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெறுகிறது. 8.30 மணிக்கு கலசத் தீர்த்தங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. 9 மணிக்கு வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 11 மணிக்கு வள்ளி- தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மருதமலை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Source link

அடியார்களே எழுப்பும் சிவாலயம்... திருப்பணிக்கு நீங்களும் பங்களிப்பு வழங்கலாம்!
ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ்;  தெய்வானை மணாளனை வேண்டினால் கல்யாண வரம்!