சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கும் முருகன் – முத்து முத்தாய் முகத்தில் வியர்வை துளிகள்


News

oi-Jeyalakshmi C

|

நாகப்பட்டினம்: கந்த சஷ்டி தினமான நாளை சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கும் வைபவம் இன்று நடைபெறுகிறது. அழகன் முருகனுக்கு வியர்வை வருமா? அதுவும் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் போது வியர்வை பெருகுவதை பார்த்திருக்கிறீர்களா? சிக்கல் சென்றால் வியர்வையோடு இருக்கும் முருகனை பார்க்கலாம்.

முருகனின் முகத்தில் வியர்வை துளிர்ப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தீய சக்திகளை நான் வியர்வை துளிகளைப் போல துடைத்து எறிவேன் எனவே பக்தர்களே தீயவைகளைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்று உணர்த்தும் வகையிலேயே கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்வை ஆறாக பெருகுகிறது.

தமிழ்கடவுள் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்றது வேலாயுதம். அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. இந்த வேல் பிறந்த கதையையும் கந்த சஷ்டியின் கதையையும் படித்தாலோ, கேட்டாலோ எண்ணற்ற நன்மைகள் நிகழும்.

கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா: திருச்சானூர் பத்மாவதி தாயாரின் தரிசனம் பாருங்கள்

அசுரர்கள் தவம்

அசுரர்கள் தவம்

காசிபமுனிவருக்கும், அசுர குலத் தோன்றலாகிய மாயைக்கும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி ஆகியோர் பிறந்தனர். காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார்.

சூரபத்மன் தம்பியர்கள்

சூரபத்மன் தம்பியர்கள்

சூரபத்மனும் அவனது தம்பியரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டனர். தவத்தின் பயனாக, சூரபத்மன் சிவபெருமானிடம் 1008 அண்டங்களையும், 108 யுகங்கள்வரை ஆளும் வரத்தைப் பெற்றான். தம்பியரான தாரகனும் சிங்கமுகனும் வரங்களைப் பெற்றனர்.

வரம் பெற்ற சூரபத்மன்

வரம் பெற்ற சூரபத்மன்

சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டான்.

சாகாவரம் பெற்ற சூரபத்மன்

சாகாவரம் பெற்ற சூரபத்மன்

சாகா வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவன் சகோதரர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரின் ஆசியுடன் இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான். இந்திரனின் மகனான ஜயந்தனையும் அவனது தோழர்களையும் கிரெளஞ்ச மலையில் சிறை வைத்தான். சூரபத்மன் ஒரு கட்டத்தில் அளவு கடந்து இனி தாங்க முடியாது என்ற நிலைமை உண்டாயிற்று. தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவபெருமானைச் சரணடைந்தனர். தங்களைக் காக்கும்படி முறையிட்டனர்.

ஆறுமுகன் அவதாரம்

ஆறுமுகன் அவதாரம்

சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு ஆறு தீப்பொறிகளையும் எடுத்துச் சென்று கங்கையிடம் அளித்தான். அவள் அவற்றைத் தனது உற்பத்தித் தானமாகிய நாணற்காட்டில் இருந்த சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கு அவை ஆறும் அழகிய குழந்தைகளாக உருவாயின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது.

வேலாயுதம் பிறந்த கதை

வேலாயுதம் பிறந்த கதை

அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். சிவபெருமான் முருகனை அழைத்து, “குமாரனே! நீ விரைந்து சென்று சூரனாதியரை வென்று தேவர்களுக்கு வாழ்வு தருக” என்று ஆணை மொழிந்தார். பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். பிறகு பார்வதியிடம் “முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்குக” என்றார். பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். சிவசக்தியரின் அம்சமாகவே வேல் தோன்றியது.

வியர்வை துளிகள்

வியர்வை துளிகள்

அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் இன்றைக்கும் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்பது பழமொழி. இன்றைய தினம் கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் சிக்கலில் பார்வதி தேவியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிக்கலில் வேல் வாங்கும்போது முருகன் திருமேனியில் வியர்ப்பது இன்றும் நடக்கும் அதிசயம்.

சூர சம்ஹாரம் செய்த முருகன்

சூர சம்ஹாரம் செய்த முருகன்

முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான். ஆயிரத்தெட்டு அண்டங்களையும், நூற்றெட்டு யுகங்கள் ஆண்ட சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். சேவலும் மயிலுமாக ஆக்கி, தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக்கொண்டு, அவனுக்கும் கௌரவம் அளித்தார்.

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைமாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தார். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!

Source link

இன்றைய பஞ்சாங்கம் 21 நவம்பர் 2020
இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்