உலக நீதி விளக்கம்

உலக நீதி விளக்கம்

ஆசிரியர்: உலகநாதர்

1

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே

விளக்கம்
கல்வி பயிலாமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது. மற்றவர்மீது பழிச் சொல் கூறக்கூடாது. அம்மாவை எப்போதும் மறக்கக்கூடாது. தீயவர்களோடு நட்பு சேரக்கூடாது. கூடாத இடங்களுக்கு செல்லக்கூடாது. ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிக் குறை கூறக்கூடாது. வள்ளி மணவாளனான மயில் வாகனன் வலிமை பெற்ற முருகப் பெருமானை போற்றி புகழவேண்டும் மனமே.

ஔவையார் ஆத்திச்சூடி விளக்கம்

2

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

விளக்கம்
தெரிந்தே பொய் சொல்லக்கூடாது. நடவாது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்தக் கூடாது. பாம்போடு விளையாடக்கூடாது. பண்பு இல்லாதவரோடு பழகக்கூடாது. தனியாக ஒருவரும் இல்லாத வழியில் செல்லக் கூடாது. பிறர் கெடுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. மலைநாட்டின் மகளான வள்ளி மணவாளன், மயில் வாகனனான முருகப் பெருமானை போற்றுவாய் மனமே!

பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்

3

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

விளக்கம்
மனம் விரும்பும் அனைத்தையும் செய்யக் கூடாது. பகைவனை ஒருபோதும் உறவென்று கொள்ளக் கூடாது. பொருளைத் தேடிச்சேர்த்து பின் அதை அனுபவிக்காமல் பாதுகாக்கக் கூடாது. தர்மம் செய்யாமல் இருக்கக் கூடாது. துன்பத்தை தரும் கோபத்தை கொள்ளக்கூடாது. கோபத்துடன் இருப்பவரிடம் செல்லக்கூடாது. காட்டில் விலங்குகளைத் தேடித் திரிகின்ற குறவர் மகளான வள்ளி மணவாளன் மயில் வாகனன் முருகப் பெருமானை போற்றுவாய் மனமே!.

ஜாதக கட்டம் விளக்கம்

4

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

விளக்கம்
பிறரிடம் எப்போதும் குற்றங்களை மட்டுமே பார்க்கக் கூடாது. கொலை, திருட்டு செய்பவரோடு சேரக்கூடாது. படித்தவர்களை ஒருநாளும் இகழக்கூடாது. பிறன் மனைவியை நினைக்கக் கூடாது. ஆட்சிசெய்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது. கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்கக் கூடாது. வள்ளி மணவாளன் மயில் வாகனன் நிகரில்லாத முருகப் பெருமானை போற்றுவாய் மனமே!.

5

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

விளக்கம்
மனைவியுடன் வாழாமல் பிறபெண்களைத் தேடி அலையக் கூடாது. மனைவியைக் குறை கூறக்கூடாது. தீய பழக்கங்களில் மறந்தும் விழுதல் கூடாது. கடும்போரில் பின்வாங்கி ஓடக்கூடாது. கீழானவர்களோடு(குணத்தில்) சேரக்கூடாது. மற்றும் அவர்களைக் குறை கூறக் கூடாது. பெருவாழ்வு வாழும் குறவர் மகளான வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய் மனமே!.

6

வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே

விளக்கம்
பிறரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவரின் பேச்சைக் கேட்க கூடாது. நம்மை மதிக்காவர்கள் இல்லத்திற்கு நாம் செல்லக் கூடாது. பெரியோரின் அறிவுரைகளை மறுக்கக் கூடாது. அடிக்கடி கோபப்படுபவரோடு சேரக் கூடாது. கல்வியறிவு தந்த ஆசிரியர் சம்பளத்தைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. திருடர்களோடு கூட்டு சேரக்கூடாது. வல்லமையால் புகழ் சேர்த்த வள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய் மனமே!.

7

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே

விளக்கம்
திட்டமிடாமல் எந்த காரியங்களையும் செய்யக் கூடாது. நமது நஷ்டங்களை பிறரிடம் கூறக்கூடாது. போர்க்களத்திற்கு வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது. பொது (புறம்போக்கு) நிலத்தில் வசிக்கக்கூடாது. இரண்டாம் திருமணம் புரியக் கூடாது. எளியோர் என்று பகைமை கொள்ளக் கூடாது. தினைப் புனம் காக்கும் ஏழைப் பங்காளன் குமரவேள் பாதத்தைப் போற்று மனமே!.

8

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

விளக்கம்
கூடாத நட்புகளிடம் சேரக்கூடாது . ஒரு நாளும் ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்கக் கூடாது. எல்லாரையும் பற்றி கோள் சொல்லக் கூடாது. நமக்கு வேண்டியவர்களை அலட்சியமாய் பேசக்கூடாது. பெருமை தரும் காரியங்களைத் தவிர்க்கக் கூடாது. தீய செயல்களுக்குத் துணை போகக் கூடாது. பெருமை பெற்ற குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய் மனமே!.

9

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

விளக்கம்
நில பிரச்சினையில் ஒருசார்பாகத் தீர்ப்பு சொல்லுதல் கூடாது. மனம் நொந்து எவரோடும் சண்டை செய்யக் கூடாது. நம் கஷ்டத்தை எவரிடமும் அழுது தெரிவிக்கக் கூடாது. பார்க்காத ஒன்றைப் பெரிதாகக் கற்பனை செய்து கூறக்கூடாது. பிறர் மனம் புண்படும் படி பேசக்கூடாது. கோள் சொல்லிக்கொண்டு அலைபவரோடு சேரக்கூடாது. உலகளந்த விஷ்ணுவின் தங்கையான உமையாளின் மைந்தன், மயிலேறும் நம் தலைவன் முருகப் பெருமானைப் போற்றுவாய் மனமே!.

10

மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே

விளக்கம்
வீண்பேச்சு பேசுபவரிடமும் வலுச்சண்டை தேடுபவரோடும் சேரக்கூடாது. ஒருநாளும் பொய் சாட்சி சொல்லக்கூடாது. தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது. ஒரு நாளும் தெய்வத்தை மறக்கக்கூடாது. இறக்கும் நிலை வந்தாலும் பொய் கூறக்கூடாது. நம்மை ஏசிய உறவினரிடம் உதவி கேட்கக்கூடாது. குறி கூறும் குறவள்ளி மணவாளன், முருகப் பெருமான் நாமத்தைக் கூறுவாய் மனமே!.

11

அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ ஏமன்றானே

விளக்கம்
ஐந்து நபர்களுடைய கூலியைக் கொடுக்காமல் இருக்கக் கூடாது. அவர்கள் வண்ணான், சவரத் தொழில் செய்பவர், கலைகளைக் கற்றுக் கொடுத்த வாத்தியார், மகப்பேறு பார்த்த மருத்துவச்சி, பெருநோயைக் குணப்படுத்தும் மருத்துவர் இவர்களின் கூலியைக் கொடுக்காதவர்களை எமதர்மன் என்ன பாடு படுத்துவானோ?

12

கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

விளக்கம்
ஒரு குடும்பத்தைப் பிளவு செய்யக் கூடாது. அனைவருக்கும் தெரியுமாறு கொண்டை மேல் பூ வைத்துக் கொள்ளக்கூடாது. அவதூறு சொல்வதே தொழிலாகக் கொள்ளக் கூடாது. தீயவர் நட்பு ஒரு போதும் கூடாது. ஒரு நாளும் தெய்வத்தை இகழக்கூடாது. பெரியோரை வெறுக்கக் கூடாது. குறவள்ளி மணவாளன், மயில் வாகனன், முருகப் பெருமானை போற்றுவாய் மனமே!.

13

ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே

விளக்கம்
பலரைப் போற்றி பலவகையில் பொருள் தேடிய உலகநாதனாகிய நான் கற்றகல்வியால், அருந்தமிழில் முருகனைப் பாட வேண்டி, அவன் திருவருளால் உலகநீதியை உண்மையாய்ப் பாடிவைத்தேன். இதனை விரும்பி, பொருள் தெரிந்து, நாள்தோறும் கற்றோரும், கேட்டோரும் பூலோகம் உள்ளளவும் களிப்போடும், புகழோடும் இன்புற்று வாழ்வார்களாக.

முற்றும்.

பழமொழி விளக்கம் பகுதி 1
உலகின் உயர்ந்த மருந்து