இந்த ஐபிஎல்லில் இவர்தான் என் ஹீரோ: ஜாம்பவான் கபில் புகழாரம்!


தமிழகத்தைச் சேர்ந்தவரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளருமான டி நடராஜன்தான் ஐபிஎல் 13ஆவது சீசனின் ‘ஹீரோ’ என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஒரு தனியார் நிகழ்ச்சியின்போது கூறினார். மேலும் பேசிய அவர், யார்க்கர் பந்துகளைத் தொடர்ந்து வீசுவது சாதாரண விஷயம் அல்ல எனவும், அதை நடராஜன் மிக எளிதாக சாத்தியப்படுத்தினார் எனவும் புகழாரம் சூட்டினார்.

“ஐபிஎல் 13ஆவது சீசனில் நடராஜன் மட்டுமே எனது ஹீரோ. அந்த பையன் கிட்டப் பயம் இல்ல, யார்க்கரை மட்டுமே தொடர்ந்து வீசினார். கடந்த 100 வருட வேகப்பந்து வரலாற்றில் யார்க்கர் மட்டுமே பெஸ்ட்” என கபில்தேவ் தெரிவித்தார்.

நடராஜன் இந்த சீசனில் மொத்தம் 16 விக்கெட்களை கைப்பற்றி, ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்குக் காரணமாக இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வினுடன் ஒரு நேர்காணலின் போது, மகேந்திரசிங் தோனி விக்கெட்டை எடுப்பதுதான் எனது லட்சியம் எனக் கூறியிருந்தார். அடுத்த போட்டியிலேயே தோனியை வீழ்த்தி அபாரம் காட்டினார். மேலும், இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ‘மிஸ்டர் 360’ டிவிலியர்ஸ் போன்றவர்களைத் தனது யார்க்கர் பந்துவீச்சு மூலம் வீழ்த்தி உலக அளவில் கவனம் பெற்றார்.

நடராஜன் ஏழ்மை நிலையும் மன உறுதியுடன் போராடிதான் தற்போது கிரிக்கெட் உலகில் சாதித்துள்ளார். இவரது தந்தை ரயில் நிலையத்தில் போர்ட்டராக உள்ளார். தாயார் தினசரி கூலித் தொழிலாளி. ஆனால், இந்த ஏழ்மை நிலை எதுவும் நடராஜனின் கிரிக்கெட் வளர்ச்சிக்குத் தடைபோட முடியவில்லை. கடுமையாகப் போராடி, உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்டு, பின்னர் சென்னை கிரிக்கெட் கீழ்நிலை பிரிவில் சேர்ந்தார். காயத்தால் பலமுறை அவதிப்பட்டு, அதிலிருந்து மீண்டு தன்னுடைய திறமைகளை நிரூபிக்கத் துவங்கினார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2017ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்து 2019ஆம் ஆண்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நகர்ந்தார். இந்த சீசனில் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக வெளியேறியதால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘யார்க்கர் கிங்’ என்னும் பட்டத்தைச் சொந்தமாக்கி, ஆஸ்திரேலிய டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.Source link

மும்பையை வீழ்த்தியது நார்த்ஈஸ்ட்
மீண்டும் களத்தில் 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' இயக்கத்துக்கு ஆதரவா? மார்க் பவுச்சர் விளக்கம்