Skip to content
Home » பொதுத் தமிழ் தகவல்கள் » திருக்குறள் படையியல்

திருக்குறள் படையியல்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் படையியல்

படைமாட்சி

குறள் 761:

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.

எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

குறள் 762:

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.

போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடைய படைக்கு அல்லாமல் முடியாது.

குறள் 763:

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

எலியாகிய பகை கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்படும்? பாம்பு மூச்சு விட்ட அளவில் அவை கெட்டழியும்.

குறள் 764:

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

(போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

குறள் 765:

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

எமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

குறள் 766:

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.

வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.

குறள் 767:

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.

தன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.

குறள் 768:

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.

போர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானாலும் படை தன்னுடைய அணி வகுப்பால் பெருமை பெறும்.

குறள் 769:

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.

தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றிபெறும்.

குறள் 770:

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும்.

படைச்செருக்கு

குறள் 771:

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.

பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.

குறள் 772:

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

குறள் 773:

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

குறள் 774:

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில்பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

குறள் 775:

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?

குறள் 776:

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

வீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

குறள் 777:

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

குறள் 778:

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

போர் வந்தாலும் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.

குறள் 779:

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

தாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்?

குறள் 780:

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்