Skip to content
Home » தமிழ் கவிதைகள் » காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன் » Page 16

காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன்

ஒரே குறை

அழகிருக்கும் அவளிடத்தில் அன்பி ருக்கும்
அறிவிருக்கும்! செயலிலுயர் நெறியி ருக்கும்
விழியிருக்கும் சேலைப்போல்! கவிதை யின்பம்
வீற்றிருக்கும் அவளரிய தோற்றந் தன்னில்
மொழியிருக்கும் செந்தமிழில் தேனைப் போலே
முகமிருக்கும் நிலவுபோல்! என்னைக் காணும்
வழியிருக்கும்; வரமாட்டாள்; வந்தெ னக்கு
வாழ்வளிக்கும் எண்ணந்தான் அவள்பா லில்லை!

திருவிருக்கும் அவளிடத்தில்! திறமி ருக்கும்!
செங்காந்தள் விரல்நுனியின் நகத்த்¢ லெல்லாம்
மெருகிருக்கும்! இதழோரப் புன்சி ரிப்பில்
விளக்கிருக்கும்! நீள்சடையில் மலரி ருக்கும்!
புருவத்தில் ஒளியிருக்கும்; வளைவி ருக்கும்!
போய்ப்போய்நான் காத்திருக்கும் இடமும் மிக்க
அருகிருக்கும்! வரமாட்டாள்; உடையும் நெஞ்சுக்
கணைகோலும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பண்பிருக்கும் அவளிடத்தில்! ஆடு கின்ற
பச்சைமயில் போல்நடையில் அசைவி ருக்கும்!
மண்ணிருக்கும் கல்தச்சுச் சுதைநூல், நல்ல
வார்ப்படநூல் ஓவியநூல் வல்லார் எல்லாம்
பெண்ணிருக்கும் அமைப்பறியும் ஒழுங்கி ருக்கும்!
பிறர்துயின்றபின், என்போல் இரவில் மூடாக்
கண்ணிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதற்
கனல்மாற்றும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

கனிவிருக்கும் அவளிடத்தில்! சங்கைப் போலும்
கழுத்திருக்கும்! உயர்பசுமை மூங்கிலைப் போல்
தனித்துயர்ந்த தோளிருக்கும்! கன்னம், ஈரச்
சந்தனத்துப் பலகைபோல் குளிர்ந் திருக்கும்!
இனித்திருக்கும் பொன்னாடை! அவள் சிலம்பில்
எழும்ஒலியில் செவியனுப்பி நிற்பேன். அந்த
நினைவிருக்கும்; வரமாட்டாள்; சாவி னின்று
நீக்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

வளமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் தூய்மை!
மயிலிறகின் அடியைப்போல் பல்லி லெல்லாம்
ஒளியிருக்கும்! உவப்பிருக்கும் காணுந் தோறும்!
உயர்மூக்கோ எள்ளுப்பூப் போலி ருக்கும்!
தெளிவிருக்கும் பேச்சிலெல்லாம் சிரிப்பி ருக்கும்!
செழும்ஊரார் அறியாமல் வரவும் கொல்லை
வெளியிருக்கும்! வரமாட்டாள்; என் விழிக்கு
விருந்தளிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பொறையிருக்கும் அவளிடத்தில்! கொல்லை தன்னில்
பூம்பாகற் கொடிதனது சுருட்கை யூன்றி
உறைகூறை மேற்படர்ந்து சென்றிட் டாலும்
ஒருதொடர்பும் கூறையிடம் கொள்ளாமை போல்
பிறரிருக்கும் உலகத்தில் என்னையே தன்
பெறற்கரிய பேறென்று நெஞ்சிற் கொள்ளும்
முறையிருக்கும்! வாமாட்டாள்; வந்தே இன்ப
முகங்காட்டும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அறமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் வாய்மை!
அண்டையிலே பெற்றோர்கள் இருக்கும் போதும்
புறமிருக்கும் என்மீதில் உயிர் இருக்கும்!
‘பூத்திருக்கும் நான்காத்த முல்லை’ யென்றும்
‘நிறம்காண வேண்டும்’என்றும் சாக்குச் சொல்லி
நிழல்போல என்னிடத்தில் வரவும் நல்ல
திறமிருக்கும்! வரமாட்டாள்; வந்தென் நோயைத்
தீர்க்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

உயர்விருக்கும் அவளிடத்தில்! இருக்கும் நேர்மை!
உடலாவி பொருளிவற்றில் நானும்,தானும்
அயலில்லை என்னுமோர் உளம் இருக்கும்!
அசைகின்ற இதழிலெல்லாம் அத்தான் என்ற
பெயரிருக்கும்! எவற்றிலுமே எனை யழைக்கும்
பித்திருக்கும்! மாடியினின் றிறங்க எணிக்
கயிறிருக்கும்! வரமாட்டாள்; என்செய்வேன்! நான்
கடைத்தேறும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

சீரிருக்கும் அவளிடத்தில்! உலகம் போற்றும்
செந்தமிழ்மங் கைக்கிருக்கும் சிறப் பிருக்கும்!
தார்இருக்கும் நெடுந்தோளான் பாண்டி நாட்டான்
தானேநான் எனும்கொள்கை தனக் கிருக்கும்.
ஊரிருக்கும் தூக்கத்தில் கொல்லைப் பக்கத்
துயர்கதவின் தாழ்திறந்து வரவோ பாதை
நேரிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதல்
நெருப்பவிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அருளிருக்கும் அவளிடத்தில்! இசையி ருக்கும்!
ஆடவனும், ஓர்மகளும் ஒப்ப நோக்கி
இருள்கிழித்து வெளிப்படுமோர் நிலவு போல
இரண்டுளத்தும் திரண்டெழுந்த காத லுக்குத்
திரைஎன்ன மறைவென்ன? அவள்என் தோள்மேல்
தேன்சிட்டைப் போற்பறந்து வருவ தற்கும்
கருத்திருக்கும் வரமாட்டாள்;வந்தெ னக்குக்
காட்சிதரும் எண்ணந்தான் அவள் பாலில்லை.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17