Skip to content
Home » தமிழ் கவிதைகள் » காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன் » Page 15

காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன்

உணர்வெனும் பெரும்பதம்

கதிரவனை வழியனுப்பிக்
கனிந்த அந்திப் போதில்
கடற்கரையின் வெண் மணலில்
தனியிருந்தேன். கண்ணைச்
சதிபுரிந்து நெஞ்சினுள்ளே
ஒருமங்கை தோன்றிச்
சதிராடி நின்றாள். அப்
புதுமை என்ன் சொல்வேன்!
மதிபோலும் முகமுடையாள்
மலர்போலும் வாயாள்
மந்தநகை காட்டிஎனை
‘வா’ என்று சொன்னாள்.
புதையல் வந்து கூவுங்கால்
‘போ’ என்றா சொல்வேன்?
‘பூங்காவனக் குயிலே
யாரடி நீ?’ என்றேன்.

‘உணர்வு’ என்றாள்.பின்னென்ன,
அமுதாகப் பெருகும்
ஓடையிலே வீழ்ந்தேன்.’என்
ஈடில்லாச் சுவையே,
துணை என்ன தமிழர்க்குச்
சொல்லேடி’ என்றேன்.
‘தூய்தான ஒற்றுமைதான்
துணை’ என்றாள் மங்கை.
இணையற்ற அந்நிலைதான்
எற்படுங்கால் அந்த
எற்பாட்டுக் கிடையூறும்
எற்படுமோ?’ என்றேன்.
‘தணல் குளிரும்; இருள் ஒளியாம்
தமிழர் ஒன்று சேர்ந்தால்!
தம்மில் ஒருவனின் உயர்வு
தமக்கு வந்ததாக

எண்ணாத தமிழர்களால்
இடையூறும் நேரும்,
இனத்திலுறும் பொறாமைதான்,
வெடிமருந்துச் சாலை
மண்ணாகும்படி எதிரி
வைத்த கொடும் தீயாம்
வையத்தில் ஒழுக்கமில்லார்
ஏதிருந்தும் இல்லார்
நண்ணுகின்ற அன்புதான்
ஒற்றுமைக்கு வித்து,
நல்ல அந்த வித்தினிலே
தன்னலத்தைச் சிறிதும்
எண்ணாமை செழித்து வரும்
நடுவுநிலை பூக்கும்;
ஏற்றமுறு செயல் காய்க்கும்;
பயன்கனியும்’ என்றாள்.

‘முன்னேறும் தமிழ் மக்கள்
மதத்துறையை நாடி
மூழ்குதலும் வேண்டுமோ
மொழியேடி’ என்றேன்.
‘முன்னேற்றம் மதஞ்சொன்னோர்
இதயம் பூஞ்சோலை!
மொழிகின்ற இம்மதமோ
அச்சோலை தன்னைத்
தின்னவந்த காட்டுத்தீ’
என்றுரைத்தாள். இன்பத்
தேனென்று சொல்லுவதோ
அன்னவளின் வார்த்தை?
கன்னல்மொழி உயிர்தழுவ
வீட்டுக்குச் சென்றேன்.
கதிகாட்டும் விழியாளின்
காதல் மறத்தல் உண்டோ!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17