Skip to content
Home » தமிழ் கவிதைகள் » காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன் » Page 12

காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன்

வாளிக்குத் தப்பிய மான்

கணக்கப் பிள்ளையின்மேல்–அவளோ
கருத்தை வைத்திருந்தாள்.
மணக்கும் எண்ணத்தினை–அவளோ
மறைத்து வைத்திருந்தாள்.
பணக்கு வியல்தனைப்–பெரிதாய்ப்
பார்த்திடும் வையத்திலே,
துணைக்கு நல்லவனின்–பெயரைச்
சொல்வதும் இல்லைஅவள்.

அழகிய கணக்கன்–உளமோ
அவள் அழகினிலே
முழுகிய தன்றி– மணக்கும்
முயற்சி செய்ததில்லை.
புழுதி பட்டிருக்கும்–சித்திரம்
போல இரண்டுளமும்
அழிவு கொள்ளாமல்–உயிரில்
ஆழ்ந்து கிடந்தனவாம்.

மணப்பிள்ளை தேடி–அலைந்தே
மங்கையின் பெற்றோர்கள்
பணப்பிள்ளை கிடைக்க–அவன்மேல்
பாய்ந்து மணம்பேசி
இணக்கம் செய்துவிட்டார்–மணமும்
இயற்றநாள் குறித்தார்.
மணத்தின் ஓலைப்படி–நகரின்
மக்களும் வந்திருந்தார்.

பார்ப்பனன் வந்துவிட்டான்–மணத்தின்
பந்தலில் குந்திவிட்டான்.
‘கூப்பிடும் மாப்பிள்ளையைப்–பெண்ணினைக்
கூப்பிடும்’ என்றுரைத்தான்.
ஆர்ப்பாட்ட நேரத்திலே–ஐயகோ
ஆகாய வீதியிலே
போய்ப்பாடும் மங்கையுள்ளம்–கணக்கன்
பொன்னான மேனியினை!

கொட்டு முழக்கறியான்–கணக்கன்
குந்தி இருந்தகடை
விட்டுப் பெயர்ந்தறியான்–தனது
வீணை யுளத்தினிலே
கட்டிச் சருக்கரையைத்–தனது
கண்ணில் இருப்பவளை
இட்டுமிழற்று கின்றான்–தனதோர்
ஏழ்மையைத் தூற்றிடுவான்.

பெண்ணை அழைத்தார்கள்–மணமாப்
பிள்ளையைக் கூப்பிட்டனர்.
கண்ணில் ஒருமாற்றம்–பிள்ளைக்குக்
கருத்தில் ஏமாற்றம்
‘பண்ணுவதாய் உரைத்தீர்–நகைகள்
பத்தும் வரவேண்டும்;
எண்ணுவதாய் உரைத்தீர்–தொகையும்
எண்ணிவைக்க வேண்டும்.’

என்றனன் மாப்பிள்ளை தான்–பெண்ணினர்
‘இன்னும் சிலநாளில்
ஒன்றும் குறையாமல்–அனைத்தும்
உன்னிடம் ஒப்படைப்போம்.
இன்று நடத்திடுவாய்–மணத்தை’
என்று பகர்ந்தார்கள்.
‘இன்று வரவேண்டும்–அதிலும்
இப்பொழு’ தென்றுரைத்தான்.

‘நல்ல மணத்தைமுடி–தொகையும்
நாளைக்கு வந்துவிடும்.
முல்லைச் சிரிப்புடையாள்–அழகு
முத்தை மணந்து கொள்வாய்.
சொல்லை இகழாதே’–எனவே
சொல்லியும் பார்த்தார்கள்.
‘இல்லை, முடியாது–வரட்டும்’
என்று மறுத்துவிட்டான்.

மங்கையைப் பெற்றவனும்–தனது
வாயையும் நீட்டிவிட்டான்.
அங்கந்த மாப்பிள்ளையும்–வாலினை
அவிழ்த்து விட்டுவிட்டான்.
பொங்கும் சினத்திலே–வந்தவர்
போக நினைக்கையிலே
தங்கம் நிகர்த்தவளின்–அருமைத்
தந்தை உரைத்திடுவான்.

‘இந்த மணவரையில்–மகளுக்
கிந்த நொடியினிலே,
எந்த வகையிலும்நான்–மணத்தை
இயற்றி வைத்திடுவேன்.
வந்துவிட்டேன் நொடியில்’–எனவே
வாசலை விட்டகன்றே
அந்தக் கணக்கனிடம்–நெருங்கி
‘அன்பு மகளினை நீ

வந்து மணம்புரிவாய்’–என்றனன்
மறுத்துரைப் பானோ?
தந்த நறுங்கனியைக்–கணக்கன்
தள்ளி விடுவானோ?
முந்தை நறுந்தமிழைத்–தமிழன்
மூச்சென்று கொள்ளானோ?
அந்த நொடிதனிலே–கணக்கன்
ஆடி நடக்கலுற்றான்.

‘ஆசைக் கொருமகளே–எனதோர்
அன்பில் முளைத்தவளே!
காசைக் கருதிவந்தான்–அவனோ
கண்ணாலத்தை மறுத்தான்.
காசைக் கருதுவதோ–அந்தக்
கணக்கனைக் கண்டு
பேசி மணம்முடிக்க–நினைத்துன்
பெற்றவர் சென்றுவிட்டார்.

ஏழைஎன் றெண்ணாதே–கணக்கன்
ஏற்ற அழகுடையான்.
தாழ இருப்பதுவும்–பிறகு
தன்தலை நீட்டுமன்றோ!
எழையென் றெண்ணாதே’–எனவே
ஈன்றவள் சொன்னவுடன்
ஏழெட்டு வார்த்தைகள் ஏன்?–‘மாப்பிள்ளை
யார்?’ என்று கேட்டனள்பெண்.

‘அந்தக் கணக்கப்பிள்ளை’–எனவே
அன்னை விளக்கிவிட்டாள்.
குந்தி இருந்தமயில்–செவிகள்
குளிரக் கேட்டவுடன்
தொந்தோம் எனஎழுந்தே–தனது
தோகை விரித்தாடி
வந்த மகிழ்ச்சியினைக்–குறிக்க
வாயும் வராதிருந்தாள்.

அந்த மணவறையில்–உரைத்த
அந்த நொடியினிலே
அந்தக் கணக்கனுக்கும்–அவனின்
ஆசைமயில் தனக்கும்
கொந்தளிக்கும் மகிழ்ச்சி–நடுவில்
கொட்டு முழக்கிடையில்
வந்தவர் வாழ்த்துரையின்–நடுவில்
மணம் முடித்தார்கள்.

‘சிங்கக் குழந்தைகளை–இனிய
செந்தமிழ்த் தொண்டர்களைப்
பொங்கும் மகிழ்ச்சியிலே–அங்கமே
பூரிக்க ஈன்றிடுக.
திங்களும் செங்கதிரும்–எனவே
செழிக்க நல்லாயுள்’
இங்கெழும் என்வாழ்த்து–மொழிகள்
எய்துக அவ்விருவர்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17