வேடிக்கைக் கதைகள் – பாரதியார்

பாரதியார்
ஆனைக்கால் உதை

ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதி கொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்தத் தெருவின் வழியாகச் சில பிள்ளைகள் அடிக்கடி போவதுண்டு போகும் போதெல்லாம் அவர்களுக்கு அந்தப் பழங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டுபோக வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. கிட்டப் போனால் ஆனைக்கால்காரன் தனது பிரமாண்டமான காலைக் காட்டிப் ”பயல்களே, கூடையிலே கை வைத்தால் உதைப்பேன். ஜாக்கிரதை!” என்பான்.

”சாதாரணக் காலால் அடித்தால் கூட எவ்வளவோ நோகிறதே, இந்த ஆனைக்காலால் அடி பட்டால் நாம் செத்தே போவோம்” என்று பயந்து பிள்ளைகள் ஓடி விடுவார்கள்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்காரன் பராக்காக இருக்கும் சமயம் பார்த்து, ஒரு பையன் மெல்லப் போய்க் கூடையிலிருந்து ஒரு பழத்தைக் கையிலெடுத்தான். இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரிய காலை சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடி அடித்தான். பஞ்சுத் தலையணையால் அடித்ததுபோலே அடி மெத்தென்று விழுந்தது. பையன் கலகலவென்று சிரித்துத் தெரு முனையிலே இருந்த தனது நண்பர்களைக் கூவி, ”அடே, எல்லோரும் வாருங்களடா! வெறும் சதை; எலும்பில்லை” என்றான் மனிதர்களெல்லாரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிறார்கள். ”வெறுஞ் சதை”யாக இருக்கும் கஷ்டங்களைத் தூரத்திலிருந்து ”எலும்புள்ள” கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதிப் படுவதை நாம் பார்த்ததில்லையா? நாம் அங்ஙனம் அவதிப்பட்டதில்லையா?

Amazon: Mobiles and Tablets at Best Price

கவிராயனும் கொல்லனும்

ஐரோப்பாவிலே மஹா கீர்த்தி பெற்ற கவியொருவர் ஒரு கொல்லன் பட்டறை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பாட்டுச் சத்தம் கேட்டது கவிராயர் உற்றுக் கேட்டார். உள்ளே கொல்லன் பாடிக்கொண்டிருந்தான். அந்தப் பாட்டு அந்தக் கவிராயராலே எழுதப்பட்டது. அதை அவன் பல வார்த்தைகளைச் சிதைத்தும் மாற்றியும் சந்தந் தவறியும் மனம்போன படிக்கெல்லாம் பாடிக்கொண்டிருந்தான். கவிராயருக்கு மஹா கோபம் வந்துவிட்டது. உடனே உள்ளே போய்க் கொல்லனுடைய பட்டறையிலிருந்து சாமான்களையும் கருவிகளையும் தாறுமாறாக மாற்றி வைத்துக் குழப்ப முண்டாக்கத் தொடங்கினார்.

கொல்லன் கோபத்துடன்: ‘நீ யாரடா, பயித்தியம் கொண்டவன், என்னுடைய ஸாமான்களை யெல்லாம் கலைத்து வேலையைக் கெடுக்கிறாய்?” என்றான்.

”உனக்கென்ன?” என்று கேட்டார் கவிராயர்.

”எனக்கென்னவா! என்னுடைய சொத்து, தம்பீ என்னுடைய ஜீவனம்!” என்றான் கொல்லன்.

அதற்குக் கவிராயர்: அது போலவே தான், என்னுடைய பாட்டும். நீ சில நிமிஷங்களுக்கு முன்பு பாடிக்கொண்டிருந்த பாட்டை உண்டாக்கிய கவிராயன் நானே; என்னுடைய பாட்டை நீ தாறுமாறாகக் கலைத்தாய் எனக்கு அதுதான் ஜீவனம். இனி மேல் நீ சரியாகப் படித்துக் கொள்ளாமல் ஒருவனுடைய பாட்டைக் கொலை செய்யாதே’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்

சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள், ”உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும் வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?” என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன்: ‘உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தனது புருஷன் முகத்தைப் பார்ப்பதில்லையென்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?” என்றான்.

Amazon: Year end deals Laptop

சாஸ்திரியார் மகன்

ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால், அதைப் பார்த்து அழுது கொண்டு நின்றான். அதைக் கண்ட ஒரு சிப்பாய்:- ”குழந்தாய், ஏன் அழுகிறாய்?” என்று கேட்டான்.

பையன:- ”வண்டி ஒடிஞ்சு போச்சு”.

சிப்பாய்:- ”இதற்காக அழாதே. வீட்டிற்குப் போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார்.”

பையன்:- ”எங்கப்பா சாஸ்திரியார், அவராலே வண்டியை நேர்ப்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவார். வேறே ஒரு இழவுந் தெரியாது” என்று விம்மி விம்மியழுதான். சிப்பாய் சிரித்துக்கொண்டே போய்விட்டான்.

ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம்

வேதபுரி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியாரும் ஒரு செட்டியாரும் சினேகமாக இருந்தார்கள். வாத்தியார், செட்டியாரிடம் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார். செட்டியாருக்கு ஒரு நாள் காலிலே முள் தைத்துப் பிரமாதமாக வீங்கியிருந்தது.

”செட்டியாரே, கால் ஏன் வீங்கியிருக்கிறது?” என்று வாத்தியார் கேட்டார்.

”எல்லாத்துக்கும் காரணம் கையிலே பணமில்லாததுதான்” என்று செட்டியார் சொன்னார்.

சில தினங்களுக்குப் பின் வாத்தியாருக்கு பலமான ஜலதோஷம் பிடித்திருக்கிறது. செட்டியார் வந்தார். ஏன், ஐயரே, ஜலதோஷம் பலமாக இருக்கிறதே” என்று கேட்டார்.

”கையிலே பணமில்லை. அதுதான் சகலத்துக்குக் காரணம்” என்று வாத்தியார் சொன்னார். செட்டியார் புன்சிரிப்புடன் போய்விட்டார்.

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

கிளிக் கதை - பாரதியார்
சிறுகதை - பாரதியார்