பெயர்கள் உருபேற்று முறை – தமிழ் இலக்கணம்

வேற்றுமை உருபு பெயர்கள் உருபேற்று முறை

ஐ முதலிய உருபேற்குமிடத்து, யான், கான் என்னுந் தன்மையொருமைப் பெயர்கள், என் எனவும், யாம், நாம், யாங்கள், நாங்கள் என்னுந் தன்மைப் பன்மை பெயர்கள், எம், நம், எங்கள், நங்கள் எனவும், விகாரப்பட்வரும்.

உதாரணம்.

என்னை, எம்மை, நம்மை, எங்களை, நங்களை, மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக.

நீ என்னும் முன்னிலை யொருமைப் பெயா, நின் உன் எனவும், நீர் முதலிய முன்னிலைப் பண்மைப் பெயர்கள், நும், உம், எனவும், நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர், நுங்கள், உங்கள் எனவும், விகாரப்பட்டு வரும்.

உதாரணம்.

நின்னை, உன்னை, நும்மை, நுங்களை, உங்களை மற்றையுருபுகளோடும்.
தான், தாம், தாங்கள், என்னும் படர்க்கைப் பெயர்கள், தன், தம், தங்கள் என விகாரப்பட்டு வரும்.

உதாரணம்.

தன்மை, தம்மை, தங்களை மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக.
இவைகளுள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு குவ்வுருபு புணருமிடத்து, நடுவே அகாரச்சாரியை தொன்றும். இச்சாரியை அகரத்தின் முன்னும், தனிக்குற்றெற்று இரட்டாவாம்.

உதாரணம்.

தனக்கு, தனது, தனாது. தன

1) உயிரையும் மெய்யையும், குற்றியுலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச்சொற்கள், இன்னுருபொழிந்த உருபுகளை ஏற்குமிடத்துப் பெரும்பாலும் இன்சாரியை பெறும்.

உதாரணம்.

கிளியினை பொன்னினை நாகினை
கிளியினால் பொன்னினால் நாகினால்
கிளியிற்கு பொன்னிற்கு நாகிற்கு
கிளியினது பொன்னினது நாகினது

இப்பெயர்கள், குவ்வுருபேற்குமிடத்துக் கிளியினுக்கு, நாகினுக்கு, என இன்சாரியையோடு உகாரச்சாரியையும், பெறுமெனவுங் கொள்க. மற்றைவைகளும் இப்படியே வரும்.

ஆ, மா, கோ என்னும் இம் மூன்று பெயர்களும், உருபேற்குமிடத்து, இன்சாரியையேயன்றி, னகரச்சாரியையும் பெறும். குவ்விருபிற்கு னகரச்சாரியையோடு உகரச்சாரியையும், னகரச்சாரியையின்றி உகரச் சாரியையும் வரும்.

உதாரணம்.

ஆவினை ஆனை
ஆவினால் ஆனால்
ஆவிற்கு ஆனுக்கு, ஆவுக்கு
ஆவின் ஆனின்
ஆவினது ஆனது
ஆவின்கண் ஆன்கண்
மா, கோ, என்பவற்றோடும் இப்படியே யொட்டுக. இங்கே மா – விலங்கு, கோ – அரசன்.

அது, இது, உது என்னுஞ் சுட்டுப் பெயர்களும், எது, ஏது, யாது என்னும் வினாப் பெயர்களும், உருபேற்கு மிடத்து, அன்சாரியையும், சிறுபான்மை இன்சாரியையும் பெறும்.

உதாரணம்.

அதனை, அதனால், அதினால்
இதனை, இதனால், இதினால்
எதனை, எதனால், எதினால்
மற்றவைகளும் இப்படியே
இவை சிறுபான்மை, அதை, இதை, எதை எனச் சாரியை பெறாதும் வரும்.

அவை, இவை, உவை, எவை, காரியவை, நெடியவை முதலிய ஐகார வீற்றிணைப் பன்மைப் பெயர்கள், உரு பேற்குமிடத்து, ஈற்றைகாரங் கெட்டு, அற்றுச்சாரியை பெறும். நான்குருபும் ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற்றுச்சாரியை மேல் இன்சாரியையும் பெறும்.

உதாரணம்.

அவற்றை எவற்றை கரியவற்றை
அவற்றால் எவற்றால் கரியவற்றால்
அவற்றிற்கு எவற்றிற்கு கரியவற்றிற்கு
அவற்றின் எவற்றின் கரியவற்றின்
அவற்றது எவற்றது கரியவற்றது
அவற்றின்கண் எவற்றின்கண் கரியவற்றின்கண்

பல, சில, சிறிய, பெரிய, அரிய முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரும், உருபேற்று மிடத்து, அற்றுச்சாரியை பெறும். நான்கனுருபும், ஏழனுருபும், ஏற்குமிடத்து, அற்றுச் சாரியைமேல் இன் சாரியையும் பெறும்.

உதாரணம்.

பலவற்றை சிறியவற்றை யாவற்றை
பலவற்றால் சிறியவற்றால் யாவற்றால்
பலவற்றிற்கு சிறியவற்றிற்கு யாவற்றிற்கு
பலவற்றின் சிறியவற்றின் யாவற்றின்
பலவற்றது சிறியவற்றது யாவற்றது
பலவற்றின்கண் சிறியவற்றின்கண் யாவற்றின்;கண்

மகரவீற்றுப் பெயர்ச்சொற்கள், உருபேற்குமிடத்து, அத்துச்சாரியை பெறும்; பெறுமிடத்து, ஈற்று மகரமுஞ் சாரியை முதல் அகரமுங் கெடும். சில விடத்து அவ்வத்துச் சாரியையின் மேல் இன் சாரியையும் பெறும்.

உதாரணம்.

மரத்தை மரத்தினை
மரத்தால் மரத்தினால்
மரத்துக்கு மரத்திற்கு
மரத்தின் . . . .
மரத்தது மரத்தினது
மரத்துக்கண் மரத்தின்கண்

எல்லாமென்னும் பெயர், அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து, ஈற்று மகரங்கெட்டு, அற்றுச்சாரியையும், உருபின் மேல் முற்றும்மையும் பெறும்; உயர்திணைப் பொருளில் உருபேற்றுமிடத்து, நம்மூச்சாரியையும், உருபின்மேல் முற்றும்மையும் பெறும்.

உதாரணம்.

எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
எல்லாநம்மையும் எல்லாநம்மாலும்
எல்லாநம்மையும் என்பது உயர்திணைத் தன்மைப் பன்மை.

உருபேற்குமிடத்து, எல்லாரென்பது, தம்முச்சாரியையும், எல்லீரென்பது நும்முச்சாரியையும் பெற்று உருபின் மேல் முற்றும்மையும் பெறும்.

உதாரணம்.

எல்லார் தம்மையும் எல்லீர் நும்மையும்
எல்லார் தம்மாலும் எல்லீர் நும்மாலும்
எல்லாரையும், எல்லாராலும், எ-ம். எல்லீரையும், எல்லீராலும், எ-ம். சாரியை பெறாதும் வரும்.

இவ்வாறு உருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட்புணர்ச்சிக் கண்ணும், வரும்.

உதாரணம்.

என்கை, எங்கை, எங்கள் கை, நங்கை, நங்கள் கை, நின்கை, உன்கை, நுங்கை, நுங்கள் கை, உன்கை, உங்கை, உங்கள் கை, தன்கை, தங்கை, தங்கள் கை, எ-ம். கிளியின் கால், கொக்கின் கண், ஆவின் கொம்பு, பலவற்றுக்கோடு, மரத்துக்கிளை, எல்லாவற்றுக்கோடும். எ-ம். வரும்.

பிற கவிதைகள் பாரதிதாசன்
தமிழ் இலக்கணம் - ஆகுபெயர்