நகைச்சுவை – கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
குட்டு வௌியாகும்

காப்பி ஒண்ணு எட்டணா,
கார்டு சைசு பத்தணா!
காணவெகு ஜோராயிருக்கும்
காமிராவைத் தட்டினா!

பிள்ளைக்குட்டி கூட நின்னு
பெரிதாகவும் எடுக்கலாம் (பிள்ளை)
பிரியம்போல காசு பணம்
சலிசாகவும் கொடுக்கலாம்

மல்லுக்கட்டி அழைக்கவில்லை,
மனமிருந்தால் வந்திடலாம்,
வயிறெரிந்த பேர்வழிங்க
வந்தவழி சென்றிடலாம்

தண்டவாளம் விட்டிறங்கி
தத்தளிக்கும் எஞ்சினைப்போல்
கொண்டவன் தனைமறந்து
திண்டாடும் மங்கையரின்
குட்டு வௌியாக்கிவிடும் ஸ்டில்லுங்க – கையில்
துட்டுயிருந்தா ஸ்டெடியா நில்லுங்க,
எந்தப் போஸில் வேணுமென்னாலும்
எடுத்துத் தரேனுங்க – ஆனா
எல்லோருக்கும் ஸ்டில்லை மட்டும்
காட்டிடாதீங்க
தனியா வந்தாலும்,
கூட்டமா வந்தாலும்,
சார்ஜ் ஒண்ணுதான் வாங்க – ஒரு
சான்ஸ் அடிச்சுப்பாக்க வாருங்க (காப்பி)

வீட்டுக்குள் வீரம்

கோபமா? – என்மேல்
கோபமா?
கோட்டுப் போட்ட சின்ன மச்சானே
கோபமா? – பனங்
காட்டுநரி சலசலப்புக்கு
அஞ்சுமா?
வீட்டுக்குள்ளே காட்டாதிங்க
வீரமே! – கர்ணம்
போட்டாலும் செல்லாது
அதிகாரமே – குட்டிக் கர்ணம்
போட்டாலும் செல்லாது
அதிகாரமே! (கோட்டு)

Amazon Year end offer Laptops

பந்தியில் முந்தும்
வீரரே! – வெற்றி
வீரரே! – வீராதி
வீரரே!
பந்தியில் முந்தும்
வீரரே! – நீங்க
படையிலே பிந்தும்
சூரரே!
பச்சோந்தி போல்மாறும்
பண்பாளரே!

ஏமாந்த ஆளிடம்
வாலாட்டும் தீரரே!
ஏனிந்த மௌனமோ
சொல்வீரே!
சாயாத ஜம்பம்
சாயாது! (கோட்டு)

நல்லபிள்ளை போலவே
தன்னந் தனியாகவே
கள்ளத்தனமாய் நாவல்
படிப்பாரே!
பள்ளிக்கூடம் சென்ற உடன்
தூங்குவாரே!
பகுத்தறிவைப் பறக்கவிட்டு
ஏங்குவாரே! (கோட்டு)

Amazon Year end offer Mobiles

கடல் ஆழமும் பெண் மனமும்

கையாலே கண்ணைக் கசக்கிவிட்டு
இரண்டு சொட்டுக் கண்ணீராலே
குற்றங்களைக் கரைத்துவிடக் கற்றவர்கள்
வையாமல் திட்டாமல் மர்மமாய்
உள்ளிருந்து செய்யாக் கொடுமையெல்லாம் செய்து
பெயர் பெற்ற பெண்களை,
நம்ப முடியாது நம்ப முடியாது; பெண்கள்
பிடிவாதம் தீர்க்க முடியாது
கடிகார முள்ளின் நடைபோல உள்ளம்
கணமோரிடம் செல்லும் புவிமீது,
கடலாழங்கண்ட பெரியோரும் பெண்கள்
மனத்தாழங்காண முடியாது (முடியாது)

பிள்ளைப் பூச்சியை மடியில் கட்டிக் கொண்டு
புராணம் கேட்டவன் தன்னிலையும்,
அல்லும் பகலும் நம்மைப் பொம்மைபோல்
ஆட்டி வைக்கும் பெண்ணை
அடைந்தவன் கதையும் ஒன்றாகுமே – அதனால்
(முடியாது)

வஞ்சகம் மூணவுன்சு,வம்புத்தனம் ஏழு அவுன்சு
வறட்டுக் கவுரவமும் அரட்டைகளும் பத்தவுன்சு
எஞ்சியுள்ள தங்கம்,வைரம்,புஷ்பம் தளுக்கும்
குலுக்கும் மயக்கும் இனிப்பும் கசப்பும்
எண்ணாயிரம் அவுன்சு கலந்ததொரு பெண்ணடா!
அதை நம்பிக் கெட்டவர்கள் பல பேர்களடா!
அந்த ஸ்டோரி ரொம்ப நீட்டமடா!
அதை ஆராய்ந்து சொல்பவன் பாடு
பெரும் திண்டாட்டமடா! – அதனால் (முடியாது)

வேலையற்ற மச்சான்

கோழியெல்லாம் கூவையிலே
குறட்டை விட்டார் – வாய்
கொப்பளிக்கும் முன்னே கொஞ்சம் காப்பியையும்
குடித்துவிட்டார்
குளிக்காமல் சாப்பிட்டு
ஏப்பம் விட்டார் – தன்னைக்
குழந்தைப் போல்
எண்ணிவிட்டார் – எங்க
சின்ன மச்சான் – இப்போ
பட்டம்விடப் புறப்பட்டு
விட்டாரய்யா – பட்டம்
விட்டாரய்யா

எட்டாத உயரத்திலே
விட்டாரய்யா – பட்டம்
விட்டாரய்யா – பறக்க
விட்டாரய்யா

 

வெட்டவௌி வானத்திலே
விட்டாரய்யா
வட்டமிடும் பறவைபோலே
விட்டாரய்யா – பட்டம்
விட்டாரய்யா

ஆராரோ பட்டம் விட்டு
பேராசை வட்டமிட்டு
ஆடி ஓடி போனதைப் போலே
விட்டாரய்யா – அணை
கட்டாத ஏரி தண்ணி
கடலொடு போனதுபோல
கற்றதெல்லாம் காற்றோடு
விட்டாரய்யா (விட்டா)

டா பட்டம் டீ பட்டம்
ஜமீன் பட்டம் சாமி பட்டம்
ஜாதி பட்டம்! பஹதூர் பட்டம்
லேடி பட்டம்! கேடி பட்டம்
வாலறுந்து நூலறுந்து
போன இடம் தெரியலை – இந்த
வேலையத்த மச்சான் வெறும்
காகிதப் பட்டம் கட்டி
விட்டாரய்யா – ஓட
விட்டாரய்யா

வெளுத்துக் கட்றாண்டி

நந்தவனத்திலோர் ஆண்டி….அவன்
வந்த இடத்தில் மங்கையை வேண்டி
(நந்தவனத்தில்)

வார்த்தையைக் கொடுத்துப்புட்டாண்டி…இவன்
வம்பாக மாட்டிக்கிட்டு தொங்கப் போறாண்டி
(நந்தவனத்தில்)

காஷாயம் கட்டிக்கிட்டாண்டி….கொஞ்சம்
காதல் கதையிலும் ஒட்டிக்கிட்டாண்டி (காஷாயம்)

வேஷத்தை மாத்திக்கிட்டாண்டி…..இப்போ
வேறொரு ஆளாகி வெளுத்துக் கட்றாண்டி
(நந்தவனத்தில்)

காக்காய் பிடித்து!

இருவர் : காயமேயிது மெய்யடா! – இதில்
கண்ணும் கருத்தையும் வையடா!

ஒருவன் : நோயும் நொடியும் வராமல் காத்து
நுட்பமாக உய்யடா! (காயமே)

மற்றொருவன்: ஆயுள் காலம் மனிதர்களுக்கு
அமைப்பிலே யொரு நூறடா
அரையும் குறையாய்ப் போவதவனவன்
அறிவும் செயலும் ஆமடா!

ஒருவன் : மாயமெனும் குயவன் செய்த
மண்ணுபாண்டம் தானடா – இது
மத்தியில் உடையாதபடி நீ
மருந்து மாயம் தின்னடா (காயமே)

மற்றொருவன்: வாயக்கெடுத்தது பசியடா

ஒருவன் : அந்தப் பசியை கொடுத்தது குடலடா!

மற்றொருவன்: இந்தக் குடலைச் சுத்தம் செய்திடாவிடில்
உடலுக்கே சுகம் ஏதடா?

ஒருவன் : சாயம் மாறி ரத்தம் வெளுத்தால்
சக்தி கெட்டுப் போமடா!

மற்றொருவன்: சக்தி கெட்ட மக்களுக்கு
தரணி வாழ்வும் ஏதடா? (காயமே)

ஒருவண் : கன்னப்புத்து,கண்டமாலை – மஞ்சக்
காமாலைகளுக்கெல்லாம் மருந்துண்டு

மற்றொருவன்: காசுமாலைபோடாமே கழுத்துச் சுளுக்குதுன்னு
கண்ணீர்விடும் பொண்ணுக்கு மருந்துண்டோ?

ஒருவன் : இல்லே

மற்றொருவன்: இருக்கு

ஒருவன் : அப்ப சொல்லு?

மற்றொருவன்: மூசைத் தங்கத்தை கம்பி நீட்டி சூடுகாட்டி
முதுகிலே ரெண்டு வாங்கினா! குணங்கிடைக்கும்

ஒருவன் : ஜீவ சிந்தாமணி மருந்து

மற்றொருவன்: சித்த வைத்திய மருந்து

இருவர் : மருந்தோ மருந்து

இருவர் : நாட்டு வைத்தியர்,காட்டு மூலிகை
மருந்தோ மருந்து – நம்ம
நாட்டு வைத்தியக் காட்டு மூலிகை
மருந்தோ மருந்து – உடல்
நன்மை காணவே
உண்மையோடு – பலர்
உண்டது – கை கண்டது (நாட்டு)

ஒருவன் : ஏட்டு மூலமாய்ப் பதினெண்சித்தர்
பாட்டாய்த் திருவாய் மலர்ந்தது (ஏட்டு)

மற்றொருவன் : சிரேஷ்டமான
இம்மருந்துகள் – ஒவ்வொருவீட்டிலும்
இருப்பது நல்லது

இருவர் : நாட்டு வைத்தியர் காட்டு மூலிகை
மருந்தோ மருந்து,

ஒருவன் : கரப்பான் சொறிபடை சிரங்குகளுக்குக்
களிம்புகள் தருவோம் தடவிக்கலாம் (கரப்)

மற்றொருவன் : காமசுரத்தால் கவலைப்படுவோர்
கலியாண குளிகை சாப்பிடலாம் (காம)

ஒருவன் : கஷ்டப்படாமல் சுகமாய் வாழ
காயகல்பம் உண்டிடலாம் (கஷ்ட)

மற்றொருவன் : அது கைவசமில்லை தற்கால சாந்திக்கு
காக்காய்பிடித்து புசிக்கலாம் (நாட்டு)

பாட்டுப்பாடும்
தொண்டைகளெல்லாம்
பாறைபோல கட்டிக்கிட்டா
காட்டுக்குயில் சூப்புப் போட்டுச்
சாப்பிடச் சொல்லுங்க!

ஆட்டம் வராக் கால்களுக்கு
மயில்காலுத் தைலம் போட்டு
அரைமண்டலம் அழுத்தியழுத்தத்
தேய்க்கச் சொல்லுங்க!

பொறுக்காத பல்லுவலிக்கு
சுருக்கத்திலே மருந்திருக்கு
போக்கிரிகிட்டே வாயைக்குடுத்துப்
பார்க்கச் சொல்லுங்கோ!

கருப்பான தலைமுடியும்
வெளுக்காமே இருப்பதற்குக்
காக்காவை உயிரோடு
முழுங்கச் சொல்லுங்கோ! – அண்டங்
காக்காவை உயிரோடு
முழுங்கச் சொல்லுங்கோ!
மருந்தோ மருந்து மருந்தோ மருந்து
மருந்தோ மருந்து (நாட்டு)

கலை!

1 வது ஆள் : ஒன்…..அண்ட் டூ…..அண்ட் த்ரீ….அண்ட் ஃபோர்

2 வது ஆள் : தை தை தை தை….தை…தை…தை

1 வது ஆள் : ராக் ராக் ராக் ராக அண்ட்ரோல்
ராக ராக் ராக் அண்ட்ரோல்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட்ரோல் (ராக் ராக்)
இங்கிலீஷ் டேன்ஸ் ஒன் அண்ட் டூ அண்ட்
இண்டியன் டேன்ஸ்
தை..தை..தை
சைனா டேன்ஸ் சிங் சாங் சிங் சாங்
பர்மா டான்ஸ் டிங் டாங் டிங் டாங்
லேடி டான்ஸ் ஜோடி டான்ஸ்
பாடி பியூட்டிகள் பப்ளிசிட்டிகள்
பாடி ஆடிடும் டான்ஸ்!

2 வது ஆள் : ஆடினார் அன்றே ஆடினார்
தில்லை அம்பலத்தே நின்று
அரகரனாம் திரு நடன சபேசன்
ஆடினார் அன்றே!
அண்டம் குலுங்கிடத் தொண்டர் நடுங்கிட
நந்தி மத்தளம் எங்கும் முழங்கிட
அரங்கினில் ஆடினார் (அன்றே)

1 வது ஆள் : ஸார்…ஸார்…ஸார்… டோண்டு ஒரி ஸார்
பார்..பார்..பார்..வேலைகளைப் பார்
பாய்..பாய்..பாய்..படேபடே பாய்
ரார்..டீடி..ரார்டி..டா
கொம்பிலே பழம்பழுத்துத்
தொங்குறதும் கலை!
லவ்வுலே மனம் மயங்கி
பொங்குறதும் கலை!
வீதியிலே கர்ணம் போட்டு
ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்…
கலை..கலை..கலை!

2 வது ஆள் : கோபியர் கூடவே காவினி லாடிடும்
குறும்புக்காரன் கோபாலன் நந்தபாலன்
குழலோசை கேட்காத குறை செய்த காது
குறைந்தென்ன வளர்ந்தென்ன
ஒன்றுக்கும் உதவாது!
ஆடினார் அன்றே

நாடகம் பார்க்க

பெண் : சீவி முடிச்சிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டுத்
தேரோட்டம் பார்க்கப் போறேன்
வாறியா? – மச்சான்
தேரோட்டம் பாக்கப் போறேன் வாறியா?

ஆண் : ஆடுதுறை தங்கமணி
அல்லிவேஷம் போடுறாளாம்
நாடகம் பார்க்கப் போறேன் வாறியா? – பொண்ணே
நாளைக்குத் திரும்பிடலாம் ஜாலியா

பெண் : கோபுரமாம் கும்பங்களாம்
கொடிகட்டிப் பறக்கிற கம்பங்களாம்

ஆண் : ஊஹூம்

பெண் : கூட்டங்களாம் நாட்டங்களாம் – மேளம்
கொட்டிக்கிட்டு ஆடுற ஆட்டங்களாம் – மச்சான்
சித்திரைத் திருநாளு மருதையிலே – நம்ம
சுத்திச் சுத்தி பாத்திடலாம் குருதையிலே!

ஆண் : ஓஹோ!
பத்துக்குரல் முத்துக் கண்ணு பாடுறாளாம்!
பவளக்கொடி வேஷத்திலே ஆடுறாளாம்!
சீனுகளாம் ஜிமிக்கிகளாம் – நீ
சிரிக்கிற மாதிரியா வௌிச்சங்களாம் – பொண்ணே
ஓசியிலே நாடகம் திருச்சியிலே – நம்ப
ஒண்ணாக் கிளம்பிடலாம் வா மயிலே!
வா மயிலே! வா மயிலே!

சூடேற்றும் பார்வை!

ண் : சலோ டில்லி கமான் லிலி – இனி

பெண் : வாட்

ஆண் : இந்தியாவின் ராஜதானி – இனி
என்றும் என் இதயராணி லில்லி!
இன்பலோகசிங்காரி நெம்பர் ஒண்ணு லேடி – நீ
பந்துபோல எகிறிப்பாயும் வல்லி! – உன்
அன்பு வார்த்தைதான் எனக்கு மியூசிக்கு – உன்
அழகுமுகம் செய்வதெல்லாம் மேஜிக்கு (உன்)

பெண் : உன்பார்வை பாடிக்கு
வெரிஹீட்டு – தெரிஞ்சுக்கோ
மீறிப்போனா எரிஞ்சுபோகும் புஷ்கோட்டு
இங்கிலாண்டுக்கு ராஜதானி லண்டன் – என்
இதயத்துக்கு உன் அன்பு எம்டன்!
எதுக்கு இப்படி ஆடுறே என்ன நெனச்சு வாடுறே
நெருங்கிவந்தா ரெண்டு மனசும் தனாதன்!
கண்களுக்கு இமயமலை வெரி ஹைட்டு – மெய்க்
காதலுக்கு நீயும் நானும் சரிவெய்ட்டு!

ஆண் : அப்படியே வாழ்ந்திடலாம் ஆல்ரைட்டு – நீ
அன்புமீறிச் சொன்னசொல்லு ஹைலைட்டு – அவர்
இந்தியாவின் ராஜதானி டில்லி – இனி
என்றும் என் இதயராணி லில்லி!

பெண் : யூ சில்லி!

ஆண் : இன்பலோகசிங்காரி நெம்பர் ஒண்ணு லேடி – நீ
பந்துபோல எகிறிப்பாயும் வல்லி!
ஹெல்புக்காக வந்த லில்லி ஒய்பு – இனி
பல்பு அண்டு சுச்சு நம்ப லைப்பு! (ஹெல்பு)

பெண் : சிங்கார ரிங்கு நான்,ரங்கூனு வைரம் நீ – நம்
ஜோடி உலகில் புது டைப்பு!

இருவர் : ஆ! காஷ்மீருக்கு ராஜதானி ஸரீ நகர்ர்ர் – நம்
காதல்வாழ்வின் ராஜதானி அன்புநகர்ர்ர்ர்
கலகலவென சிரித்துநாம் மனசுபோல நடக்கலாம்
கலந்தேபின்னே வளரும் ஹேப்பி பார் எவர்ர்ர்ர்!

குடும்பத்தோடு பயணம்

சின்னக் குட்டி நாத்துனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!

குளிரடிக்கிற குழந்தைமேலே
துணியப் போட்டு போத்துனா
குவாகுவானு கத்துனதாலே
முதுகில ரெண்டு சாத்துனா
கிலுகிலுப்பயக் கையில் கொடுத்து
அழுதப்பிள்ளையத் தேத்துனா (சின்னக்குட்டி)

பன்னப்பட்டி கிராமத்திலே
பழைய சோறு தின்னுக்கிட்டா
பங்காளி வீட்டுச் சிங்காரத்தோட
பழைய கதையும் பேசிக்கிட்டா (சின்னக்குட்டி)

கன்னுக்குட்டிய மல்லுக்கட்டியே
கயித்தைப் போட்டுப் புடிச்சுக்கிட்டு
மண்ணுக் கட்டியால் மாங்கா அடிச்சு
வாயில் போட்டுக் கடிச்சுக்கிட்டா (சின்னக்குட்டி)

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

உலகின் உயர்ந்த மருந்து
கீரை வகைகளின் மருத்துவ குணங்கள்