சொல்லின் கதை மு வரதராசன்

சொல்லின் கதை மு வரதராசன்

சொல்லின் பிறப்பு

நாகரிகம் இல்லாத மிகப் பழங் காலத்தில் மனிதர்கள் வீடு கட்டத் தெரியாமல் குகைகளில் வாழ்ந்தார்களாம். அந்தப் பழஙகாலத்தைக் கற்காலம் என்று சொல்லுகிறோம். அந்தக் காலத்தில் மனிதர்கள்கையில் என்னென்ன கருவிகள் இருந்தன தெரியுமா? துப்பாக்கி, பீரங்கி, அணுக்குண்டு இவைகள் அப்போது இல்லை. வாள், வேல்,வில் முதலான கருவிகளும் இல்லை. அந்தக் காலத்தில் இருந்த கருவிகள் எல்லாம் கல்லால் செய்யப்பட்டவைகளே. கல்லால் செய்த அந்தக்கருவிகளும் மழ மழ என்று செய்யப்படவில்லை; கரடு முரடாக இருந்தன. அந்தக் காலத்து மனிதர்கள், வழியில் கிடைத்த கல்லை எடுத்து, இப்படியும் அப்படியும் உடைத்துத்தீட்டி ஒரு வகையாகத் தங்கள் தொழிலுக்குப் பயன் படுத்திக்கொண்டார்கள். கல்லால் செய்த அப்படிப்பட்ட கருவிகளை வைத்துக்கொண்டே அவர்கள் மிருகங்களைக் குத்திக் கொன்றார்கள்; அவைகளை அறுத்துத் தின்றார்கள். கல்லால் செய்த அந்தக்காலத்துக் கத்தியை ஒரு புறம் நினைவில் வைத்துக்கொண்டு, மற்றொரு புறம் நாம் இப்போது கையாளுகின்ற பளபளப்பான இரும்புக்கத்தியை எண்ணிப்பாருங்கள். அதற்கும் இதற்கும் எவ்வளவு வேறுபாடு? கற்காலத்துக் கருவிகள் படிப்படியாக மாறி, வளர்ந்து முன்னேறி இந்தக் காலத்துக் கருவிகள் ஏற்பட்டுள்ளன.

சொற்களின் கதையும் இதுதான்.நாகரிகம் இல்லாத காலத்து மக்கள் பேசிவந்த சொற்கள் திருத்தம் இல்லாமல், வடிவம் அமையாமல், இயற்கை ஒலிகளாக இருந்தன. ஆனால் இப்போது நாம் பேசும் சொற்கள் திருத்தமானவை,வடிவம் அமைந்தவை, நாகரிக வளர்ச்சியால் ஏற்பட்டவை. உதாரணமாக- மண், மரம் என்று சொல்கிறோம். இவைகள் எவ்வளவு சுருக்கமாக, திருத்தமாக இருக்கின்றன பாருங்கள். நாம் இப்போது சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் சிறு சிறு பேனாக்கத்திகளைப் போல் இவைகள். ஆனால் மிகப்பழங்காலத்தில் இதே சொற்கள் வெவ்வேறு வடிவமாக இருந்தன. கற்காலத்துக் கத்திகளைப்போல் கரடுமுரடாக, நல்ல வடிவம் அமையாமல் இருந்தன.

இதிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? சொற்கள் முதல்முதலில் தோன்றிய காலத்தில் திருத்தமான அமைப்புப் பெறாமலிருந்து, காலப்போக்கில் நாகரிகம் வளர வளர மாறி நன்றாக அமைந்துள்ளன. ஆங்கிலத்தில் ‘had’ என்று மூன்று எழுத்தில் ஒரு சொல் இருக்கிறது. அதே சொல் சில நூற்றாண்டுகளுக்குமுன் பதினோரெழுத்துகளைக் கொண்டதாக இருந்ததாம். ‘Habededeima’ என்று அந்தச் சொல்லுக்கு வடிவம் இருந்ததாம். தமிழிலும் அப்படித்தான் பழங்காலச் சொற்கள் வெவ்வேறு வகையாய் இருந்திருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் சொற்களை எப்படி ஏற்படுத்தினார்கள்? தங்கள் காதால் கேட்ட ஒலியையே திருப்பிச் சொன்னார்கள்; திருப்பிச் சொன்ன ஒலியே சொல் ஆயிற்று. மரத்தில் கருநிறமான பறவை ஒன்று ‘கா கா’ என்று கத்தியது. அதைப் பற்றிச் சொல்லும்போது, பழங்கால மனிதன் தானும் ‘கா கா’ என்று கத்தினான். நாளடைவில் காக்கா என்ற ஒலியே அந்தப் பறவைக்குப் பெயராயிற்று. இது பழங் காலத்தில் சொல் பிறந்த வரலாறு. ஆனால் இந்தக் காலத்திலும் குழந்தையினிடம் இப்படி ஒலியால் பெயர் வைக்கும் வழக்கம் இருக்கிறது. தெருவிலே நாய் குலைக்கிறது. குழந்தை பார்க்கிறான். உள்ளே ஓடிப்போய், அம்மாவிடம் ‘ளொள்,ளொள்’ என்று சொல்கிறான். அது அவன் பேசுகின்ற மொழி. அவனுடைய மொழியில் ‘ளொள்,ளொள்’ என்றால் நாய் என்று பொருள். இவ்வளவு ஏன்? இப்படி ஒலியைக் கேட்டுப் பெயர் வைக்கும் பழக்கம் வளர்ந்த பெரியவர்களிடமும் இருக்கிறது. ‘கிலு கிலு’ என்று ஒலியுண்டாக்கும் விளையாட்டுப் பொருளுக்குக் ‘கிலுகிலுப்பை’ என்றே பெயர் வைக்கிறார்கள். ‘கிண் கிண்’ என்று ஒலி செய்யும் கால் அணிக்குக் ‘கிண்கிணி’ என்றே சொல்லுகிறார்கள். ஒரு நாட்டில் உணவு என்பதைத் ‘தின் தின்” என்றே பெயர் சொல்கிறார்கள். சில உணவுப் பொருள்களைத் தின்னும்போது ‘தின் தின்’ என்ற ஒலி கேட்பதால் பொதுவாக உணவுக்கே ‘தின்தின் என்று பெயர் வைத்துவிட்டார்கள். அந்த நாட்டில் மட்டுமல்ல, நம் நாட்டிலும் அப்படிப் பெயர் அமைந்திருக்கும் போல் தோன்றுகிறது. நாமும் தின் என்றும் தீனி என்றும் சொல்கிறோம் அல்லவா?

காக்கை, கிலுகிலுப்பை, கிண்கிணி, தீனி இவற்றிற்கெல்லாம் இப்போது காரணம் தெரிகிறது. வேறு பல சொற்கள் பொருள் தெரியாதபடி அவ்வளவு மாறிவிட்டிருக்கின்றன. இப்போது குயில் என்று சொல்லுகிறோம். குயில் கூவும் ஒலிக்கும், குயில் என்ற பெயருக்கும் இப்போது பொருத்தம் தெரியவில்லை. ஆனால் யார் கண்டார்கள்? ‘கூஊஇல்’ என்பது போன்ற அதன் ஒலியே நாளடைவில் குயில் என்று சுருக்கமாகத் திருந்திய வடிவு பெற்றிருக்கலாம். இப்படிப் பல சொற்களுக்கு இன்று காரணம் தெரியாவிட்டாலும் அவைகளின் பிறப்பு இது போல்தான் இருந்திருக்க வேண்டும்.

அடுத்தபடியாக, வெறுப்பு, மகிழ்ச்சி, அச்சம் முதலான உணர்ச்சிகளால் சிலவகை ஒலிகளை மனிதன் உண்டாக்குகிறான். வெறுப்பு அடைந்தபோது ‘சே’ என்கிறான். மகிழ்ச்சியாக உள்ளபோது ‘ஓ ஓ’, ‘ஆ ஆ’ என்கிறான். பயப்படும்போது ‘ஆ’, ‘ஊ’, ‘ஐயோ’ என்கிறான். இப்படி உணர்ச்சியால் பிறக்கும் பல ஒலிகள் ஒவ்வொரு மொழியிலும் உள்ளன. இந்த ஒலிகள் மாறாமலும் சொற்களாக உள்ளன; மாறியும் சொற்களாக வாழ்கின்றன.

மூன்றாவது வகையாகப் பல சொற்கள் உள்ளன. அந்தச் சொற்கள் எப்படிப் பிறந்தன என்று தெளிவாக அறிய முடியவில்லை. மணிக்கு ஓசை இயற்கையாக அமைவதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு சொல் இயற்கையாகத் தோன்றியது என்று சிலர் கூறுவார்கள். அது பொருத்தமான காரணம் அல்ல. முதல்முதலில் கண்ட அடையாளம் பலரிடமும் பரவிவிடுவதுபோல், முதல்முதிலி ஏற்பட்ட ஒலி, அடையாளமாகப் பலரிடமும் பரவி, அப்படியே சொற்களாகிவிட்டன. குழந்தை வாயை மூடியிருந்து, திறந்து அழுகிறது. மூடிய வாய் திறந்து அழும்போது ‘மா’ என்ற ஒலி உண்டாகிறது. அந்த ஒலியே தாய்க்கு அடையாளமாகி ‘அம்மா’ என்ற சொல் ஏற்பட்டது. அடுத்தபடியாக, அதே முயற்சியில் காற்றை மூக்கின் வழியாக விடாமல், முழுதும் வாயின் வழியாகவே விட்டால், ‘பா’ என்ற ஒலி பிறக்கிறது. அதுவே ‘அப்பா’ என்ற சொல்லாகிவிட்டது. இப்படியே வெவ்வேறு காரணம் பற்றி வெவ்வேறு சொற்கள் பிறந்துவிட்டன. காரணங்கள் பல இன்று தெரியாமல் போய்விட்டன. ஆனால், இந்த வகையான சொற்கள் பிறந்த கதை மட்டும் இதுதான்.

கற்காலத்துக் கருவிகள் அவ்வளவு திருத்தமாக, கைக்கு அடக்கமாக அமையவில்லை என்று பார்த்தோம் அல்லவா? பழங்காலத்துச் சொற்களும் சுருக்கம் இல்லாமல், திருத்தம் இல்லாமல் நீண்ட பெரிய சொற்களாக இருந்திருக்கும். அடிக்கடி கையாண்ட கருவி கை பட்டுப் பட்டுத் தேய்ந்து தேய்ந்து அழகாக விளங்குவதுபோல், பழங்காலத்து நீண்ட பெரிய சொற்கள் பேச்சில் பழகிப் பழகிச் சுருங்கி அமைந்துவிட்டன. உதாரணமாகப் பாருங்கள். நான், நீ, நாம், நீர், யார், ஏன் முதலான சொற்கள் நம் பேச்சில் அடிக்கடி வருகின்றன அல்லவா? அடிக்கடி வருவதால்தான் இவைகள் சிறுசிறு சொற்களாக, ஓர் அசைச் சொற்களாக இருக்கின்றன. கரடி, கத்தரி, பருத்தி, அகழி முதலிய சொற்கள் அடிக்கடி பேச்சில் வழங்குவதில்லை. அதனால்தான் அவைகள் சுருக்கமாகவும் அமையவில்லை.

இப்படிப் பல சொற்கள் ஏற்பட்டுவிட்ட பிறகு, வேண்டியபோதெல்லாம் அவைகளிலிருந்து புதிய சொற்கள் உண்டாக்கிக்கொள்ள முடிந்தது. முதலில் சில கருவிகளைக் கண்டுபிடித்த பிறகு, அவைகளைக் கொண்டு வேறு வேறு கருவிகளைச் செய்து கொள்ளலாம் அல்லவா? அதுபோல், முன்னமே பழகியுள்ள சொற்களை மாற்றியும் சேர்த்தும் புதிய சொற்களை ஏற்படுத்திக்கொள்வது எளிமையாகும். விழு என்ற சொல் பழகிவிட்டபிறகு விழுதல், வீழ்ச்சி, விழுது, வீழ்து முதலான சொற்களை ஏற்படுத்திக்கொண்டார்கள். நட என்ற சொல்லிலிருந்து நடத்தல், நடப்பது, நடை, நடக்கை, நடத்தை, நடத்து, நடத்தல், நடப்பு முதலான சொற்கள் அமைந்ததும் இதுபோல்தான். ஆகவே, முதலில் நூறு சொற்களுக்குக் குறைவாக இருந்த நிலை மாறி மாறி, ஆயிரக்கணக்கான சொற்கள் ஏற்பட்டுவிட்டன. ஒரே சொல் சிறிது மாறி அமைந்து வேறு பொருள் உணர்த்தும் முறை இது. இரண்டு சிறு சொல் ஒன்றாகச் சேர்ந்து, புதிய பொருள் உணர்த்துவதும் உண்டு. மரம் வேறு. கால் வேறு. இரண்டும் சேர்ந்து ‘மரக்கால்’ என்றால் அது வேறு. புகை வேறு. இலை வேறு. இரண்டும் சேர்ந்து ‘புகையிலை’ என்றால் தனியான ஒரு பொருளை உணர்த்துகிறது. மரக்கால், புகையிலை போல எத்தனையோ சொற்கள் பிறந்து வழங்குகின்றன.

மரக்கால் புகையிலை முதலிய சொற்கள் இப்போது இரண்டு சிறு சொற்கள் சேர்ந்து அமைந்தவை என்பது தெரியுமாறு இருக்கின்றன. இவைகள் எல்லாம் பிற்காலத்தில் தோன்றிய சொற்கள். அப்படியே எழுதி வைத்துவிட்டார்கள். அதனால் சொல்லின் உருவம் சிதையாமல் வழங்குகின்றன. ஆனால் பழங்காலத்தில் வழங்கிய எத்தனையோ சொற்கள் உருவம்சிதைந்து மாறிவிட்டன. அணில், கனல், வாழை, தென்னை முதலிய சொற்கள் பல அப்படிச் சிதைந்து அமைந்த சொற்களே.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால், மனிதன் பேசத்தொடங்கிய காலத்தில் சொற்கள் பல இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். இன்ரு, சென்னை நகரத்தில் உள்ள மாடமாளிகைகளையும், கட்டிட நெருக்கத்தையும் பார்த்துவிட்டு, மனிதன் முதன்முதலில் பிறந்தபோதே பல கட்டிடங்களோடு பிறந்தான் என்று சொல்ல முடியுமா? அதுபோல் மனிதன் பேசத் தொடங்கிய காலத்தில் சொற்கள் இயற்கையாக அமைந்திருந்தன என்றும் சொல்ல முடியாது. ஆனால் மனிதன் வாழத் தொடங்கிய பழங்காலத்தில், இயற்கையாக இருந்த மலைக்குகைகளைப் பயன்படுத்திக்கொண்டான் அல்லவா? அதுபோல் மனிதன் முதல்முதலில் பேசத் தொடங்கிய காலத்தில், அவனுக்கு இயற்கையாக் இருந்த குரலில் ஒலியைப் பயன்படுத்திக்கொண்டான். குடிசை போடக் கற்றுக்கொண்டு, பிறகு மண்சுவர் வைக்கக் கற்று, அதன்பிறகு ஓடு வேயக் கற்றுக்கொண்டு, அதன்பிறகு மச்சுவீடு கட்டவும், மாளிகை கட்டவும் கற்றுக்கொண்டான் அல்லவா? இவ்வாறு கற்று வளர்வதற்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகவில்லையா? அதுபோலத்தான், இயற்கையான ஒலியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட மனிதன், எத்தனையோ படிகளைக் கடந்து வளர்ந்து வளர்ந்து, இன்று உள்ள இலக்கியம் வளர்ந்த மொழியைப் பேசக் கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ காலம் பிடித்திருக்கும். இவ்வாறு எத்தனையோ தலைமுறைகளாகச் சொற்கள் ஏற்பட்டு ஏற்பட்டு, மேன்மேலும் பெருகிக்கொண்டே வருகின்றன. இன்றும் புதிய சொற்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இதை ஒட்டி இன்னொன்றும் சொல்ல வேண்டும். இந்தக் காலத்துக் கட்டிடத்தைப் பார்த்தால், இது தூண் என்றும், இது கழி என்றும், இது சுவர் என்றும், இது சன்னல் என்றும்,இது கதவு என்றும், இது படி என்றும் பிரித்தறிய முடியும். ஆனால், மிகப் பழங்கால வீடாகிய குகையைப் பார்த்தால், இந்தப் பாகுபாடு ஒன்றும் சொல்லமுடியாது. அதற்கு அடுத்த நாகரிகப் படியில் உள்ள எளிய குடிசையைப் பார்த்தாலும் இத்தனைப் பாகுபாடுகள் சொல்ல முடியாது. அதையும் பல வகையாய்ப் பிரித்தறிய முடியாது அல்லவா? இந்த உண்மையையே சொற்களின் வரலாற்றிலும் காணலாம். இன்று, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் என்று சொற்களைப் பிரிக்கிறோம். அவைகளையும் வெவ்வேறு வகையாய்ப் பாகுபடுத்துகிறோம். மிகப் பழங்காலத்தில் இப்படிப்பட்ட பாகுபாடு இருக்கவில்லை. மலைக்குகை, பிரிவுகள் இல்லாத வீடாக இருந்த நிலை போலவே, பழங்காலத்து இயற்கையான குரல்ஒலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாக்கியமாக இருந்தன. அந்த வாக்கியமே பெயர், அதுவே வினை என்று சொல்லக்கூடியவாறு இருந்தன. அதனால்தான் காய்முதலான சொற்கள் இப்போது இரண்டிற்கும் பொதுவாக உள்ளன. காய்கள் என்னும்போது பெயராகவும், காய்க்கும் என்னும்போது வினையாகவும் வழஙகுகின்றது. மலர்,அடி, பிடி,எண் முதலான பல சொற்கள் அப்படிப்பட்டவை. ஒருகாலத்தில் இவை ஒவ்வொன்றும் ஒரு வாக்கியமாக இருந்த காரணத்தாலதான் இவைகள் பொருளின் பெயராகவும் வழங்குகின்றன; தொழிலையும் உணர்த்துகின்றன. குகையில் சுவருக்கும் கூரைக்கும் வேறுபாடு தெரிகிறதா? இல்லை. அதுபோல்தான் இநதச் சொற்கள் வாக்கியமாக இருந்த பழஙகாலத்திலும், எந்தப்பாகுபாடும் வேறுபாடும் இல்லாத நிலைமை இருந்தது.

முற்று வினை படர்க்கை வினைமுற்று
முற்று வினை படர்க்கை வினைமுற்று