காதல் சுவை – கல்யாணசுந்தரம் பகுதி 2

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இன்ப வேகம்

ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ? – என்னை
வாட்டிட ஆசை தானோ – பல
கோடி மலரழகை மூடி வைத்து மனதை
கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை)

பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ? – என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ? – புது
மங்கை எந்தன் மனதில்,பொங்கிவரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை)

ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? – பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது? – நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணவைத்
தனித்துப் பெறமுடியாது

பெண் : அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா?
அன்புக் கரங்கள் சேரும்போது
வம்பு வார்த்தைகள் ஏனோ?
இன்ப வேகம் தானோ..? (வாடிக்கை)

ஆண் : காந்தமோ இது கண்ணொளிதானோ?
காதல் நதியில் நீந்திடும் மீனோ?
கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ..?

Amazon Year end offer Mobiles

பெண் : பொறுமை இழந்திடலாமோ? – பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ? – நான்
கருங்கல்லுச் சிலையோ காதலெனக் கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ..?

ஆண் : சைக்கிளும் ஓட மண் மேலே – இரு
சக்கரம் சுழல்வது போலே – அணை
தாண்டிவரும் சுகமும்,தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே…

பெரும் சுகம்

குழு : வருஷத்திலே ஒரு நாளு தீபாவளி
மகிழ்ச்சிக்குரிய நாளு இந்த தீபாவளி
மனைவியும் கணவரும்
மக்களோடு யாவரும்
மங்களமாய்க் கொண்டாடும் தீபாவளி (வருஷத்திலே)

மனசுக்குள்ளிருக்கிற கவலைகளெல்லாம்
மறைந்திட வரும் நாளு!
வாடிக்கையாகப் பட்டினி கிடந்தோர்
வயிறு நெறையும் நாளு!
நெனைக்க முடியாத காட்சிகளெல்லாம்
நேரில் தெரியும் நாளு!
நீண்ட காலமாய் ஆண்டுகள் தோறும்
நிகழ்ந்திடும் பெரு நாளு (வருஷத்திலே)

ஆண் : கண்ணே கண்ணுக்குள் நாடகமாடிடும்
பெண்ணே இன்னமும் நாணமா?

பெண் : எண்ணம் கலந்த பின் என்னைப் பிரிந்ததும்
இன்பம் மறந்ததும் ஞாயமா?

ஆண் : உன்னைப் பிரிந்து நான்,உன்னால் மெலிந்திடும்
உண்மை மறந்ததும் ஏனம்மா?

பெண் : இன்னல் தொடர்ந்தகதை, எல்லாம் மறந்தினி
என்றும் பெரும் சுகம் காணலாம்

இருவரும் : பொன்னும் வைரமும்போலே இணைந்துள்ளோம்
பொங்கும் மகிழ்ச்சியில் ஆடலாம்

Amazon Year end offer Laptops

பையன் : அக்கா…..அக்கா…..
பட்டாசு வெடிக்கிற வேளையிலே…நீ
படுத்துத் தூங்குறே மூலையிலே
கட்டோடு வெடிக்கும்,கண்ணையும் பறிக்கும்
கம்முன்னு அடைக்கும் காதுக்குள்ளே;
தொட்டாலே போதும், கர்ருன்னும் சீறும்
சுட்டாலே நோகும் சொல்லாமலே வேகும்
எட்டாத ஊருக்கும் இதாலே பேரு
விட்டாலே ஜோரு வேடிக்கை பாரு! (வருஷத்திலே)

ஆசை மனம்!

பெண் : ஆசையினாலே மனம்

ஆண் : ஓஹோ….

பெண் : அஞ்சுது கெஞ்சுது தினம்

ஆண் : ஊஹூம்

பெண் : அன்பு மீறிப் போனதாலே
அபிநயம் புரியுது முகம்

ஆண் : ஐ…ஸீ….

பெண் : ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்புமீறிப் போனதாலே
அபிநயம் புரியுது முகம்!

பெண் : நாணம் கொண்டு ஓடும் கண்கள்
தாளம் போடுதே – அதைக்
காணும் தென்றல் காதில் வந்து
கானம் பாடுதே….
வேரில்லாத கொடிதனில்-

ஆண் : ஓஹோ…..ஹோ….

பெண் : வாலில்லாத ஒரு அணில்

ஆண் : ஆஹஹா….

பெண் : ஆளில்லாத நேரம் பார்த்து
தாவிப் பிடிக்குது கையில்

ஆண் : ஸாரி….

பெண் : மாலை என்ற நேரம் வந்து
ஆளை மீறுதே….இளம்
காளையொன்று காதல் என்று
கண்ணால் கூறுதே,
தேடிவந்த ஒரு துணை

ஆண் : ஓஹோ….ஹோ

பெண் : சிரிக்குது மயக்குது எனை

ஆண் : ஆஹஹா…

பெண் : மூடிமூடி வைத்த எண்ணம்
நாடுதே சுகம் தன்னை

ஆண் : ரியலி…. (ஆசையினாலே)

இன்பம் தேடுது

பெண் : துள்ளித் துள்ளி அலைகளெல்லாம்
என்ன சொல்லுது? – பல
துண்டு துண்டாய் எழுந்து – அது
எங்கே செல்லுது….? (துள்ளி)

ஆண் : கள்ள விழிப் பார்வைதனைக்
கண்டு கொள்ளுது – கோபங்
கன்னத்தில் கிள்ளிவிட்டுச்
சிரிக்கச் சொல்லுது! (கள்ள)

பெண் : தென் கடலின் ஓரத்திலே
ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்ன சின்ன நண்டு வந்து
என்ன பண்ணுது?

ஆண் : அது நில்லாத வேகத்திலே
அல்லும் பகல் மோகத்திலே
நீண்ட வளை தோண்டிக்கிட்டு
குடும்பம் பண்ணுது!

இருவர் : இத்தனையும் நம்மைப்போல
இன்பம் தேடுது – இதை
எண்ணும்போது நமது மனம்
எங்கோ போகுது!

பெண் : கண்டதும் மலரில் வண்டு
காதல் கொள்வதேன் – அது
வந்து வந்து மெய்மறந்து
மயங்கிப் போவதேன்?

ஆண் : கண்டவுடன் காதல் கொள்ளும்
காரணமும் ஏன்?
சிங்கார மலர்த் தேன் – நான்
கன்னிமலர் நாடியதும்
வண்டு போலத்தான்….

பெண் : பாக்குமரச் சோலையிலே
பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லாம்
என்ன பின்னுது?

ஆண் : அது வாழ்க்கைதனை உணர்ந்துகிட்டு
மனசும் மனசும் கலந்துக்கிட்டு
மூக்கினாலே கொத்திக் கொத்தி
கூடு பின்னுது!

பெண் : இத்தனையும் நம்மைப் போல
இன்பம் தேடுது – இதை
எண்ணும் போது நமது மனம்
எங்கோ போகுது!

பேசும் சிட்டு

பெண் : கன்னியூர் சாலையிலே – பொண்ணு
களைபறிக்கப் போகையிலே – அந்த
சின்னமச்சான் சிவத்தகண்ணு – அவ
பின்னாலே எதுக்கு வந்தான்?

ஆண் : எதுக்கு வந்தான்….?
சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒன்னாச்சி – புது
உல்லாசந்தான் கண்டாச்சு (சொல்)

பெண் : சும்மா கிடந்த முல்லைக் கொடி
துள்ளி எதுக்கு வாடுது?

ஆண் : அது
சுத்திப்படரக் கொம்பைத் தேடித்
துடிச்சி துடிச்சி வாடுது

பெண் : தூங்காம சிட்டு ரெண்டும்
தொடர்ந்து என்ன பேசுது?

ஆண் : அது
ஜோடியான மகிழ்ச்சியிலே
சொந்தக் கதையைப் பேசுது
சொதந்திரமான கூடுகட்டி
ஒரு மனமா வாழுது

பெண் : அந்த நிலையும், இந்த நிலையும்

இருவர் : சொந்த நிலையைக் கிளறுது

பெண் : பொல்லாத ஆடு ஒன்று
உள்ளே என்ன பாக்குது?

ஆண் : புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும்
பொருத்தமான்னு பாக்குது?

பெண் : பூங்குயிலும் யாருக்காக
ஏங்கிக் ஏங்கிக் கூவுது?

ஆண் : ஆண் குயிலைக் காணாமல்தான்
அவசரமாக் கூவுது
அன்பு மீறி மயக்கத்திலே
அங்குமிங்கும் பாயுது

பெண் : அந்த நிலையும்……

ஆண் : இந்த நிலையும்……

இருவர் : சொந்த நிலையைக் கிளறுது

கண்ணால் அடக்குவேன்

பெண் : அடக்கிடுவேன் – ஓய்
அடக்கிடுவேன் – ஓய்
அடங்காத காளையையும்
அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே – ஓய்….
சாட்டையிருக்கும் பின்னாலே

ஆண் : மிரட்டிடுவேன் – ஏய்
மிரட்டிடுவேன் – ஏய்
மிரளாத உருவத்தையும்
மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத்துள்ளாதே – ஏய்
வளைச்சிடுவேன் வாலாலே

பெண் : துணிஞ்சி நின்னாப் புரிஞ்சிடுமே

ஆண் : புரியல்லையே

பெண் : துணிஞ்சி நினாப் புரிஞ்சிடுமே – உன்
சுறுசுறுப்பும் துடிதுடிப்பும்
குறைந்து போகுமே

ஆண் : நெருங்கி வந்தா விளங்கிடுமே – உன்
விறுவிறுப்பும் பரபரப்பும்
விழுந்து போகுமே

பெண் : பிடிச்சேன்னா விடமாட்டேன் – நான்
புண்ணாக்கும் தவிடும் வச்சு
தண்ணியும் காட்டிடுவேன்

ஆண் : வெறிச்சேன்னா ஆபத்துத்தான் – நான்
மேயாத பயிரையெல்லாம்
மேஞ்சு காட்டிடுவேன்

மயிலோ குயிலோ!

ஆண் : ஆடைகட்டி வந்த நிலவோ – கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ – இவள்
ஆடைகட்டி வந்த நிலவோ – குளிர்
ஓடையிலே மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடுவிட்டு வந்த மயிலோ – நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ? (ஆடை)

பெண் : துள்ளித் துள்ளி ஆடுமின் பலோக மங்கை
சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை
எல்லையற்ற ஆசையிலே ஓடி வந்தாள்
தள்ளிவிட்டுப் போனபின்னும் தேடிவந்தாள்
கிளைதானிருந்தும் கனியே சுமந்து
தனியே கிடந்த கொடிதானே…
கண்ணாளனுடன் கலந்தானந்தமே – பெறக்
காவினில் ஆடும் கிளிதானே

ஆண் : ஓ….ஓ….
அந்தி வெயில் பெற்ற மகளோ – குலுங்கும்
அல்லிமலர் இனத்தவளோ – குன்றில்
உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மனம்
சிந்தி வரும் தென்றல் தானோ?-இன்பம்
தந்து மகிழ்கின்ற மானோ?

பெண் : அன்பு மனம் கூடுவதில்
துன்பம் இல்லை

ஆண் : அஞ்சி அஞ்சி ஓடுவதில்
இன்பமில்லை

பெண் : வீணைமட்டு மிருந்தால்
நாதமில்லை

ஆண் : மீட்டும் விரல்கள் பிரிந்தால்
கானமில்லை

இருவரும்: இதயம் கனிந்து
எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்நேர மிதே
மனம் மீறிடுதே
வனமாளிகை யோரம் ஆடிடுவோம்
(துள்ளி)

வௌிவேசம்!

ஆம்பளைக் கூட்டம் – ஆடுற ஆட்டம்!
அத்தனையும் பார்த்தோம் கேட்டோம் – அதை
ஆரம்பிச்சாத் தெரியும் திண்டாட்டம் (ஆம்பளை)

அடங்கிக் கிடக்கிறதும் பணிஞ்சு நடக்கிறதும்
ஆக்கறதும் காக்கறதும் நாங்க – உண்
டாக்கறதும் காக்கறதும் நாங்க – அதை
அடிச்சுப் பறிக்கிறதும், அடுத்துக் கெடுக்கிறதும்
அட்டகாசம் பண்ணுறதும் நீங்க (ஆம்பளை)

ஆணுக்குப் பெண்கள் அடிமைகள் என்று
யாரோ எழுதி வைச்சாங்க – அன்று
யாரோ எழுதி வைச்சாங்க – அதை
அமுக்கிப் பிடிச்சுகிட்டு விடமாட்டேன்னு
ஆண்கள் ஒசந்து கிட்டாங்க – பெண்கள்
ஆமை போல ஒடுங்கிப் போனாங்க (ஆம்பளை)

மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமையுண்டு – இளம்
மங்கையை முடிப்பதுண்டு, மண்டை
வறண்டு – தன்
கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
கடைசியில் சாக மட்டும் உரிமையுண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு
(ஆம்பளை)

கற்பின் பலமென்றும் கண்ணகி குலமென்றும்
கச்சிதமா திட்டுவாங்க – அதை
அச்சடிச்சும் காட்டுவாங்க – சொன்ன
கருத்துக்கு மாறாகக் கற்பைக் களவாடக்
கன்னக் கோலைத் தீட்டுவாங்க – அவுங்கக்
கணக்கைப் புரட்டிப் பாருங்க….என்னங்க
(ஆம்பளை)

கேள்வியும் பதிலும்

காசி : சவால் சவாலென்று
சதிராடும் பொண்ணாளே – நெஞ்சில்
தன்மானத் துணிவிருந்தால்
தாண்டிவா, முன்னாலே!

ஹரி : அடி சக்கேன்னானாம்!
வாய்யா வா! பொண்ணு, ஆடட்டும்

மாலா: பார்த்தாலே கண்ணடிமை – என்
பக்கம் வந்தால் நெஞ்சடிமை – என்னைப்
போட்டியில் வென்றவர்கள் – இந்தப்
புவிதனிலே யாருமில்லை! – அய்யா!
சரியாத் தெரிஞ்சா சவால் விடு!
சரக்கு இல்லாட்டா சலாம் கொடு!

ஹரி : இந்தாய்யா! முதல்லே நீ போடு
கேள்வியை
பதிலை பிச்சுபிச்சு வைக்கிறோம்

காசி : காடும் வளமுடைய நாடும் – பல
காத தூரமும் கடந்து ஓடும்,
வளைந்து கலைந்து
பிரிந்து பின்னும் கூடும்,
நினைந்தபடி கண்ட பக்கம்
சுற்றிவரும் – அது என்ன?

ஹரி : இவ்வளவுதானா நாயி!

சிவன்: சும்மா இருடா,முந்திரிக்கொட்டை!

மாலா : மேட்டிலே நிற்காது
வேற்றுமை பார்க்காது
காட்டுப் பயிர்களைத்
காணாவிட்டால் வாழாது,
நாடெல்லாம் சுற்றி வரும்
நன்மைதரும் அதன்பேரு
நதியய்யா எந்தன் பதிலய்யா!

ஒருவன் : காட்டம்மா உன் கைவரிசையை

மாலா : ஆளைக்கண்டு மருண்டோடும்
மானுமில்லை – ரொம்ப
ஆழத்திலே நீந்திவரும்
மீனுமில்லை
அங்கெல்லாம் பாய்ந்துவிடும்
அம்புமில்லை
மலரில் அல்லும் பகலும் வட்டமிடும்
வண்டுமில்லை.

சிவன் : என்ன சாமி அது?

ஹரி : முழிக்கறியே இப்போ ஒத்துக்கிறியா?

காசி : தூர இருந்து கொண்டே
தொடாமல் திருடுவதும்,
சுற்றிவிட்ட பம்பரம் போல
சுழன்றுவிட்ட பம்பரம் போல
சுழன்று வட்டம் போடுவதும்,
வீரர்களும் மயங்க…மோக
வலை வீசுவதும்…காதல்
விளையாடுவதும் கண்களம்மா!

சிவன் : கண்கள்

ஹரி : கண்கள்….சொல்லிப்பிட்டாரே

காசி : ஏனம்மா!
நான் கேட்கும் கேள்விகளுக்கும்
பதில் சொல்?

ஹரி : ஓ!

காசி : பாம்புத் தலையில் தகதகதிமி
பார்த்தன் தேரில் ஜகண ஜண ஜண
பானை கடகட உரலும் தட தட
பார்வை திருதிரு, மேனி கருகரு
பொருளும் என்ன?…உன்
பதிலும் என்ன?

மாலா : பாம்புத்தலையில் நடனமாடி
பார்த்தன் தேரில் சங்கு முழக்கி,
பானை உடைய வெண்ணெய் திருடி
உரலிலே கட்டுண்டு கிடந்தவன்
கமலக் கண்ணன்!
கார்மேக வண்ணன்!

காசி : விபரமறியாத கன்னிப் பெண்ணுக்கு
வெட்கம் வருவது எப்போது?

குழு : அது எப்போது?

மாலா : விளையாட்டாய் அவள் திருமணம் பற்றி
உரிய தோழிகள் பேசும்போது

காசி : ஓயாமல் பேசும் மங்கையர் கூட
ஊமையாவது எப்போது?

குழு : எப்போது?

மாலா : காயாத வண்ணக் கமலக் கையை
காதலன் வந்து தொடும்போது

காசி : தகதகவெனக் கண்ணைப் பறிக்கும்
தண்ணீர் பட்ட உடனே கருக்கும்
சகல பேருக்கும் பொதுவாயிருக்கும்
சாதி வேற்றுமை தன்னை ஒழிக்கும்
சடசடவெனத் தாவி யணைக்கும்
சருகைப் பிடித்து உணவாகப் புசிக்கும்
அது என்ன?

சொல்லட்டுமா? நானே சொல்லட்டுமா?
தகதகவென கண்ணைப் பறிப்பதும்
தண்ணீர் பட்ட உடனே கருப்பதும்
சருகை விறகை உணவாகப் புசிப்பதும்
அனலம்மா…நீ
உணரம்மா!

வளைகாப்பு

பெண் : மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
மஞ்சள் நிற வளையல் இதுவாழ்வுதரும் வளையல்!
மங்கலப் பெண்குலம் போட்டு வைத்தே மகிழும்
குங்கும நிறத்தோடு குலுங்கும் திருவளையல்!
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
மங்காத பச்சைநிறம் விளங்கும் எழில்
வளையல் – தும்பை
மலர் போன்று இரு மனமும்
மாசின்றி வாழ்கவென
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்!

குழு : அக்காளுக்கு வளைகாப்பு – அத்தான்
முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு – ஆரைப்
பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தனத்தானே தான
தானானே தையத்தானே

பெண் : முத்துப்போலே பவழக்
கொத்து போலே – இன்னும்
மூணுமாசம் போனா மகன் பொறப்பான்!

1-பெண் : பட்டுப்போலே தங்கத்
தட்டுப்போலே – கரும்பு
கட்டுப்போலே கெடந்து கண்ணைப் பறிப்பான்!

பெண் : ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளைப்போலே
உக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான்! அவர்
கண்ணை முளிக்கிறாரு சும்மா கனைக்கறாரு
என்னான்னு கேளுங்கடி சங்கதியைத்தான்!

2-பெண் : அடி எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது
என்னென்னமோ பேசுறாங்க ரெண்டு பேரும்,
அதை வௌக்க முடியாது வெவரம் புரியாது
வேணாண்டி நமக்கது ரொம்ப தூரம்!

குழு : ஆ அடி ஆமாண்டி நமக்கது ரொம்ப தூரம்

பெண் : தாலாட்டுப்பாடி இவ தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு – அவன்
காலாட்டி கையாட்டித்
துள்ளுறதைப் பார்த்துப்புட்டா
கீழே விடமாட்டாரு ஆளு – மகனைக்
கீழே விடமாட்டாரு ஆளு! (அக்கா)

மங்கையின் மகிமை

வேல் வெல்லுமா – என்
விழி வெல்லுமா
வேல் வந்து விழி போலக்
கதை சொல்லுமா? (வேல்)

கதை சொல்லுமா – வாழும்
வகை சொல்லுமா
கடல்போல எழுந்தின்பக்
கரை துள்ளுமா? (வேல்)

கோழைக்கும் வீரத்தைக்
கொடுப்பவள் மங்கை
கொய்யாக் கனியாய்
இருப்பவள் மங்கை

வாழ்வினில் மோகத்தை
வளர்ப்பவள் மங்கை – ஆண்
மனதில் வீடுகட்டி
வசிப்பவள் மங்கை

மங்கைஎன் பார்வையில்
மலையரையும் – பகை
வாளும் ஈட்டியும்
என்ன செய்யும்? (வேல்)

கண்ணகி போல் நாளைக்
கழிக்கவும் தெரியும்
காதலை மாதவி போல்
ரசிக்கவும் தெரியும்

மன்னனைச் சகுந்தலைபோல்
மதிக்கவும் தெரியும்
மணிமேகலை போல
வெறுக்கவும் முடியும்! (வேல்)

இன்ப கீதம்

ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே
அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும்
அறியாத பாவையா? (அன்பு)

பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால்
அச்ச மாகுமா?
அன்பு மனம் கனிந்தும்
புரியாமல் போகுமா? (அஞ்சு)
மாலை வெயில் மயக்கத்திலே
மறந்திடலாமோ?
மனைவி என்று ஆகுமுன்னே
நெருங்கிடலாமோ?

ஆண் : உறவானது மனதில்
பணமானது நினைவில்
இதை மாற்றுவதார் மானே
வையக மீதில்? (உறவானது)
காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே (காத)

பெண் : நான்
கனவில் கண்ட காட்சியெல்லாம்
கண்ணில் கண்டேனே

ஆண் : இது காவியக் கனவு

பெண் : இல்லை காரியக் கனவு

இருவரும் : புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவு
அன்பு மனம் துணிந்து விட்டால்
அச்சம் தோணுமா
ஆவலை வௌியிட வெகு
நேரம் வேணுமா?
இருகுரல் கலந்து விட்டால்
இன்ப கீதமே
இன்னமுத வீணையும்
அறியாத நாதமே! (இருகுரல்)

ஒரு விழிப் பார்வை

பெண் : நெஞ்சில் குடியிருக்கும்
அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்துகொள்ள முடியுமா? – என்

ஆண் : கண்ணில் குடியிருக்கும்
காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? – என்
கருத்தைப் புரிந்துகொள்ள முடியுமா?

பெண் : என்றும் பேசாத தென்றல்
இன்றும் மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஆண் : ஓரவிழிப் பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாததுபோல் கேட்பதுமேனோ?

பெண் : மலர்க்கொடி தலையாட்ட
மரக்கிளையும் கைநீட்டக்
கிளையில் கொடி இணையும்படி ஆனதுமேனோ?

ஆண் : இயற்கையின் வளர்ச்சிமுறை
இளமை செய்யும் கிளர்ச்சி முறை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனா?

முற்றிய காதல்

ஆண் : பெண்ணில்லே நீ பெண்ணில்லே
காதல்நடிப்புத் தெரியாவிட்டால்
பெண்ணில்லே
ஆணில்லே நான் ஆணில்லே – அதைத்
கற்றுக்கொடுக்க முடியாவிட்டால்
ஆணில்லே

பெண் : காதல் – ஆஹாஹா! காதல்

ஆண் : ஆமாம் காதல்

பெண் : காதலோ காதல்
அது எங்கே கிடைக்கும், எப்படிக்
கிடைக்கும்?
இனிப்பா,புளிப்பா,கசப்பா, காதல்
கசப்பா? (அது)

ஆண் : ஆஹா!
ஒன்பது சுவையும் ஒண்ணாக் கலந்து
உண்பதுதான் மெய்க் காதல் – இந்த
உலகத்தைத் தூக்கி உருட்டி விளையாடும்
உறவுக்குப் பேர்தான் காதல்!

பெண் : கண்ணிரண்டும் மூடாமல்
காத்திருந்தேன் -இரவில்
காத்திருந்தேன்
கதவைத் திறந்து வைத்துப்
பார்த்திருந்தேன் – எதிர்
பார்த்தேன்

ஆண் : ஆஹா ஹோ காதல் வந்ததா?

பெண் : இல்லை பூனை வந்தது

ஆண் : என்னைப் பார் – கண்ணைப் பார்
ஏக்கம் கலந்தது பார் (என்னைப்)
இடுப்பை வளைத்து வெட்டிப்பார்
இதயம் சுடுதா தொட்டுப்பார்
பின்னே போ, முன்னே வா, பேசு, பாடு, ஆடு
நேசம் வை, நீ நேசம் வை
நெஞ்சுக்குள்ளே என்னை நிறுத்தி நேசம் வை

பெண் : நேசந்தான் உன் நேசந்தான்
நேசம் முத்திக் காதலானால் லாபந்தான்

அன்பு ஆசை

பெண் : போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
சேர்ந்து போட்டுக்கணும் – ஒலகம்
புதுசா மாறும்போது பழைய
மொறையை மாத்திக்கணும்

ஆண் : போட்டுக்கிட்டா – ஆமா
போட்டுக்கிட்டா – தாலி (போட்டுக்)

பெண் : போட்டுக்கிடும் முன்னே நல்லா
பொண்ணும் புள்ளையும் பாத்துக்கணும்,
புடிக்குதான்னு கேட்டுக்கணும்

ஆண் : புரிஞ்சுக்காம ஆரம்பிச்சா
ஆபத்திலே மாட்டிக்கணும் (போட்டுக்)

பெண் : கழுத்திலே தாலி கெடந்தா
காலிகூட மதிப்பான் – கொஞ்சம்
கண்ணியமா நடப்பான் – இந்த
கயிறு மட்டும் இல்லையின்னா
கழுைபோல இடிப்பான்

ஆண் : ஆம்புளைக்கும் தாலி கெடந்தா
அடுத்த பொண்ணு மதிப்பா – கொஞ்சம்
அடங்கி ஒடுங்கி நடப்பா – இந்த
அடையாளம் இல்லையின்னா
அசட்டுத்தனமா மொறைப்பா (போட்டுக்)
இதுலே மட்டும் போடுற முடிச்சே
இறுக்கிப் போட்டுக்கணும் – நல்லா
இழுத்துப் பாத்துக்கணும் – அது (இதுலே)

பெண் : எடையிலே பிரிஞ்சுக்காமே
முறுக்கிப் போட்டுக்கணும்

ஆண் : அதுலே ஒண்ணும் கொறைச்சலில்லே
அழுத்திப் போட்டிருக்கு – உண்மை
அன்பு ஆசை ரெண்டும் சேத்து
முறுக்கிப் போட்டிருக்கு – மூணு
முடிச்சாப் போட்டிருக்கு (போட்டுக்)

பெண் : பொறப்பு வளப்புச் சட்டம்

ஆண் : நாம – சேந்து போட்டுக்கணும்

பெண் : பொழப்பு இருப்பு நோட்டம்

ஆண் : அதையும் சேர்த்துப் போட்டுக்கணும்

பெண் : அட – வரவு செலவுத் திட்டம்

ஆண் : ஒண்ணா சேந்து போட்டுக்கணும்

பெண் : நம்ம வழக்கமான ஆட்டம்

ஆண் : ஹா…ஹா…ஹா… (போட்டுக்)

பெண் உறவு!

பெண் : மங்கையரின்றித் தனியாக
வந்தவர் கிடையாது
பெண்கள் : தந்ததும் பெண்ணையா
கொண்டதும் பெண்ணையா
சந்தேகம் என்னையா?
சம்மதம் என்ற மொழி கேட்டாலே
பெண் : சஞ்சலம் தீர்ந்துவிடும் கூட்டாலே
பெண்கள் : சந்திப்பு ஓயாது
பெண் : சிந்திக்கத் தோணாது
பெண்கள் : சந்தோஷம் நாடாத ஆளேதய்யா
பெண் : சிந்தனைக் காரரோ, யோகியோ
செய்வதேதும் அறியாத ஞானியோ?
காதல் உறவினில்
பெண்கள் : பேதமில்லை
பெண் : பாசம் இணைந்தபின்
பெண்கள் : பாவமில்லை
பெண் : சந்திப்பு ஓயாது
பெண்கள் : சிந்திக்கத் தோணாது
பெண் : சந்தோஷம் நாடாத ஆளேதய்யா
(மங்கையரின்றி)

மணமகள்

மணமகளாக வரும்
மங்கை எவளோ – என்
மருமகளாயிருக்கத்
தகுந்தவளோ? (மணமகளாக)

குணமகளாய் விளங்கும் குலமகளோ – இனிய
குரலும் மொழியும் கொண்ட கலைமகளோ (மணமக)
மஞ்சள் குங்குமம் அணியும்
வழக்கமுண்டோ? – நல்ல
மனைவிக்குத் தேவையுள்ள
அடக்கமுண்டோ? – நெஞ்சில்
இரக்கம் உண்டோ?
நேர்மை யுண்டோ? – அவள்
நேசனுக்கதிக யோசனைபுகலும் நிலைக்கு நடக்கும்
இணக்கம் உடையவளோ? (மணமகளாக)

பொறுக்கி எடுத்த
முத்துக் கருத்தைக்
தொகுத்து வைத்த
திருக்குறள் முப்பாலும் படிப்பவளோ…ஆ…கனல்
தெறிக்கக் கொதித்து மணிச்
சிலம்பையுடைத்து நீதி
தெரிவித்த கண்ணகியைத் துதிப்பவளோ….ஆ
அன்புக்கணை தொடுத்துத்
துன்பத்தினை விரட்டும்
ஆற்றல் மிகுந்தவளோ….இசை

பொறுப்புள்ள பெண்

நான் வந்து சேர்ந்த இடம்
நல்லயிடந்தான் – இதை
நம்பவைக்கும் பொறுப்பு
அன்பிடந்தான் (நான்)

ஏனென்று தோன்றவில்லை
எதிர்பார்த்து வந்ததில்லை
இல்லாத அதிசயந்தான்
இது ஒரு ரகசியந்தான் (நான்)
அருமையுடன் வளர்த்து
அறிவுள்ள பெண்ணாக
ஆக்கித்தரும் பொறுப்பு அன்னையிடந்தான் – குலப்
பெருமைதனைக் காத்து
பெற்றவர் மனம் நாடும்
பேரைப் பெறும் பொறுப்பு பெண்ணினிடந்தான்
(நான்)
எனக்கும் புரியாமல்
அவர்க்கும் புரியாமல்
இடையில் துணிவுவந்த விந்தையாலே
எப்படியாகுமென்றும்
எங்குபோய் நிற்குமென்றும்
எண்ணவும் முடியவில்லை சிந்தையாலே – இன்று
(நான்)

நன்றி கூறும் தென்றல்

பெண் : உள்ளங்கள் ஒன்றாகித்
துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே
சொர்க்கம் வாழ்விலே (உள்ளங்கள்)
ஆண் : எல்லை மீறும் அன்பே
செல்வம் ஆகுமே
இளமை நேசமே
மண்மேல் சுகமே! (எல்லை)
பெண் : சிந்தும் செந்தேனும்
சொல்லில் ஊறுமே
தென்றல் வீசியே
நன்றி கூறுமே
இருவரும் : உள்ளங்கள்
பெண் : கொஞ்சும் சோலைக்குருவி
சொந்தம் பேசுமே
குறைவில்லாமே
எல்லாம் தருமே (கொஞ்சும்)
ஆண் : பொங்கும் நீரோடை
சந்தம் பாடவே
கண்கள் ஆடுமே
காதல் நாடகம்!
இருவரும் : உள்ளங்கள்

பிரிக்க முடியுமா

பெண் : என்னைப் பார்த்த கண்ணு வேற
பெண்ணைப் பார்க்குமா?
எண்ணம் கலந்த பின்னே இனி
சொன்னாலும் கேட்குமா? (என்னைப்)
பின்னிக் கிடக்கும் முல்லைக் கொடியைப்
பிரிக்க முடியுமா – அன்பை
பிரிக்க முடியுமா?
கண்ணும் கண்ணும் கட்டின கூட்டை
கலைக்க முடியுமா?
பனியை நம்பி வெதை வெதைச்சா
பலன் விளையாது
பருவமழை நானி ருந்தால்
பழுது வராது – அத்தான்
வழியில் பார்த்து சிரிச்ச தெல்லாம்
மனைவி யாகுமா?
மலையைப் போல் வளர்ந்த காதல்
மறந்து போகுமா? – சொன்ன
வார்த்தை மாறுமா? (என்னைப்)
ஆண் : உன்னை நினைக்க நினைக்கக் கண்கள் மலருது
காணும் நினைவுமீறி உள்ளம் மயங்குது;
உன்னைப் பார்த்த கண்ணு வேற
பெண்ணைப் பார்க்குமா?
உள்ளம் கலந்த பின்னே – இனி
கொஞ்சினாலும் கேட்குமா? (உன்னைப்)

ஒற்றுமை கலைந்தால்…

கனியிருக்கு விருந்து வைக்க
காடிருக்குக் கூடுகட்ட
கலந்துபேச நானிருக்கேன் வாங்க – சும்மா
காத்திருக்க நேரமில்லே வந்திடுங்க
ஓ…ஓ…ஓ… (கனியிருக்கு)

சின்னஞ்சிறு சிட்டுகளே
சிங்காரப் பறவைகளே!
தெம்மாங்குக் குயில்களே
சிவந்த மூக்குக் கிளிகளே!
தேனெடுக்கும் வண்டுகளே ஓடிவாங்க – நான்
சேதியொண்ணு சொல்லப்போறேன் சீக்கிரம் வந்திடுங்க
ஓ…ஓ…ஓ… (கனியிருக்கு)

ஓங்கிவரும் மூங்கில் மரம்
ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு,
ஒழுங்காக் குருத்துவிட்டு
கெளை கெளையா வெடிச்சிருக்கு,
ஒட்டாமெ ஒதுங்கிநின்னா ஒயர முடியுமா? – எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?
ஓ…ஓ…ஓ… (கனியிருக்கு)

எண்ணத்தில் பொருத்தம்

மொகத்தைப் பார்த்து
முறைக்காதீங்க – சும்மா
மொகத்தைப் பார்த்து
முறைக்காதீங்க – பல்லை
மூடிக்கிட்டுச் சிரிக்காதீங்க (மொகத்)

பொண்ணிருக்கும் வீட்டுக்குள்ளே
புகுந்திருக்கும் மாப்பிளே,
போட்டியிலே ஜெயிச்ச நீங்க
புதுமையான ஆம்பளே!

என்னத்தான் புடிச்சிருக்கா
இல்லையான்னு மனசுலே
இருக்கும் ரகசியத்தை
இழுத்துப்போடுங்க வௌியிலே (மொகத்)

முன்னும் பின்னும் பழக்கம் வேணுங்க
இங்கே வர்ரதுன்னா
முறையிலேதும் நெருக்கம் வேணுங்க – எண்ணத்தில்
பொருத்தம் வேணுங்க

அது இல்லேன்னா இரண்டு பக்கமும்
இன்பம் ஏதுங்க?
அன்னம்போல நடக்குமுங்க
ஆளைக்கண்டா பறக்குமுங்க
என்னமோன்னு நினைக்காதீங்க – நான்
சொல்லிப்புட்டேன்… (மொகத்)

வழி தேடும் காதல்

என்றும் இல்லாமல்
ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ?

எண்ணங்கள் பண்பாடுது
கண்களும் எங்கோ வழிதேடுது – எது
வேண்டியோ வாடுது ஆடுது

மனம் என்னோடும் நில்லாமல்
முன்னால் ஓடுது – என்
வீசும் தென்றல் காதோடு
பேசிடும் பாஷை நானறியனே

வெறும் போதையோ
ஆசையோ மாயமோ – இது
விளங்காமல் வரும்
காதல் விந்தைதானோ – என்

துணை தேடுதே!

நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ?
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ?
அணையை மீறும் ஆசை வெள்ளம்
அறிவை மீறுதே
அதையும் மீறி பருவகாலம்
துணையைத் தேடுதே!….(நினை)

சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
அவரில்லாமல் நானுமில்லை
அன்பு சாட்சியே!
உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத்தேனேன்று
கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று……(நினை)

அன்பு வளருமா?

பெண் : ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய்….மாமா….மாமா…
வம்புபண்ணி சண்டைக்கு நின்னா
அன்பு வளருமா? – அது
வளர்ந்தாலும் நீ நினைக்கிற
இன்பம் மலருமா? (ஆசை)
ஆண் : நீ திரும்பிப் பார்க்கும்போது மனசு
திருட்டுப் போகுது – கண்ணே
திருட்டுப் போகுது
சம்மதத்தைச் சொல்லப் போறியா? – இல்லே
என்னைச்
சமயம் பார்த்துக் கொல்லப் போறியா?
பெண் : ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது
காதல் எப்படி மொளைக்கும்? – ஒங்
கனவு எப்படிப் பலிக்கும்?
கையைத் தொடாதே
கையைத் தொடாதே – மானம்
காற்றிலே பறக்கும்
மாமோய்….மாமா…மாமா….
ஆண் : கணக்கு மீறி காடு இருக்குது
அடுக்கு மாடி வீடு இருக்குது
அதுக்கு மேலே பணம் இருக்குது
மானே உனக்கு!
அத்தனையும் பாதுகாக்கும்
கவலை எனக்கு – நீ
கல்யாண தேதி வைக்கிறியா? – இல்லே
இப்போ
காவிக்கடைக்கு ஆள் அனுப்பறியா?
கண்ணே….கண்ணே….கண்ணே….
பெண் : என்னய்யா நீயும் ஒரு ஆம்பளையா?
சும்மா இளிக்கிறியே
சொன்னதெல்லாம் விளங்கலியா?
உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா?
வந்தாலும் ஒட்டாது
கசந்துபோகும் வேப்பிலையா?
மாமோய்…மாமா….மாமா….(ஆசை)

வளையல் போடும் சண்டை

ஆண் : கலைமங்கை உருவம் கண்டு
காதல்கொண்டு
தணியாத மனைத உள்ளம் எங்கே உண்டு
கண்ணே (கலை)
கமல மலரை வென்று
திகழும் முகத்தில் ரெண்டு
கருவண்டு விளையாடும்
காட்சி வேறெதில் உண்டு (கலை)

பெண் : எழில் சிந்தும் இளமைகொண்டு நேரில்
நின்று
அலைமோதும் இன்பம் வேறெதிலே உண்டு
வளம் பொங்கும் உருவம் கண்டு போதை
கொண்டு
மயங்காத மங்கையுள்ளம்
எங்கேயுண்டு – அன்பே
வளம் பொங்கும் உருவம் கண்டு….

ஆண் : கைவளையல் போடும் சண்டை- எங்கும்
கன்னலிசை பாடும் தண்டை – சுழலும்
மை விழியில் மேவும் கெண்டை – வந்து
மெய்யுருகப் பாயும் ஒன்றை

பெண் : உள்ளம் இரண்டும் கனிந்து
ஒன்றையொன்று கலந்தால்
கொள்ளை கொள்ளும் இந்த
வெள்ளம் போறாதோ
துள்ளிவந்து ஆண்களை
துணைதேடும்போது
தூரநின்றே ஆட என்றும் வெண்கொடியே நீ

ஆண் : எண்ணச் சோலையில் நின்று
இருகரமும் இணைந்து படர்ந்து மகிழ
எழில்வளர சுகம்விளைய மனம் மலரும்
படர்ந்து நிரைந்து குலுங்க
துணையென்னும் உறவினில் துணிந்திடும்
நினைவினில்
சுவைதரும் சுபதின நிலைபெறவே
ஒருபுறமாட சிறுமயிலாட குளிரும்
முகமே அருகினில் நெருங்க
புதுநிறமே பெரும் தளிர்விரல் தரும்குறி
அபிநயங்கள் விளங்க

பெண் : அலைகடல்மேல் நிலவெனவே அனுதினமே
தழுவி இனிய மலர் குலுங்க

ஆண் : பனிமலரிதழ் அமுதினை அருந்த

பெண் : பல கதைகளும் கவிதையும் முழங்க

ஆண் : சுகம் வழங்க

பெண் : மதி மயங்க

இருவரும் : விரைந்து தனைமறந்து அணைகடந்து
வரும்
கலைபொங்கும் உருவம் கண்டு
காதல்கொண்டு தணியாத மனிதவுள்ளம்
எங்கேவுண்டு
கலைபொங்கும் உருவம் கண்டு காதல்
கொண்டு..

அழகு வந்தது

பெண் : ஆட்டம் பொறந்தது உன்னாலே – அதில்
அழகு வந்தது என்னாலே
காட்சி நிறைஞ்சது பொன்னாலே – அந்தக்
கலை வளர்ந்ததும் என்னாலே
சத்தம் பொறந்தது தன்னாலே – அது
சங்கீதமானது என்னாலே
ஜாடை பொறந்தது கண்ணாலே – அது
மேடைக்கு வந்தது என்னாலே
ஆட்டம் ஐயா ஆட்டம்….(ஆட்டம்)
நடை பொறந்தது தன்னாலே – அது
நடனமானது என்னாலே
நாடகம் சினிமா நளினம் கிளினம்
எல்லாம் இதுக்குப் பின்னாலே
ஆட்டம் ஐயா ஆட்டம் (ஆட்டம்)
புதுபுதுஸா கலரைக் காட்டி
பூ மலர்ந்ததும் பந்தலிலே
மதிப்பும் மகுகும் மணமும் அதுக்கு
மலிஞ்சிருக்குது கூந்தலிலே
பளபளக்கிற பட்டுப் புடவைகள்
ஒளிஞ்சிருக்குது கடையிலே – இப்ப
மினுமினுக்கிற ஜரிகையோட
சலசலக்குது இடையிலே
ஆட்டம் ஐயா ஆட்டம் (ஆட்டம்)

பருவம் வாடுது

லால லால லால
பருவம் வாடுது இங்கே – உன்
பார்வை எங்கே
பாசம் தேடுது அங்கே – உன்
பார்வை எங்கே
கண் சுழலும் காதல் தொடரும்போது
ஜோடியில்லாத மாடு நீ ஓடுவதேனோ
வீணோ (பரு)
பாடங்கள் சேர்ந்து மூளையிலே
நாடகமாடும் வேளையிலே
காதலை நாடிட நேரமில்லை
சுகம் காணும் வழியில்லை
உன் யோசனையும் என் வேதனையும்
பெரும் சோதனைதான் போடீ
கல்வியும் வந்து காதலும் வந்தால்
கருத்தில் இடமேது
உருவம் வாடுது இங்கே – என்
உள்ளம் அங்கே
இளமை மீறுது இங்கே – என்
இன்பம் அங்கே
வாலிபம் வரும் போதினிலே
வாழ்விலே வரும் மோகம் – அதை
மறந்தால் பறந்தே போகும் – நீ
உணர்ந்தால் ஆனந்த மாகும்
அன்பு மிகுந்து ஆசை வளர்ந்து
அழகு குலுங்கும் வயதிலே
அமைதியுமில்லை மனதிலே – உன்
போதனையும் – என் காதலும் – ஒரு
தேதியில் வௌியாகும்
நான் துணிந்திடும்போது
தொல்லைகள் ஏது சுகந்தான் புவிமீது
உருவம் வாடுது இங்கே – என்
உள்ளம் அங்கே
இளமை மீறுது இங்கே – என்
இன்பம் அங்கே
உருவம் வாடுது இங்கே

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திருக்குறள் களவியல்
காதல் சுவை - கல்யாணசுந்தரம் பகுதி 1