பிற கவிதைகள் பாரதிதாசன்

கவிதைகள் பாரதிதாசன்

தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்

திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும்
தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த – குருமூர்த்தி

சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில்
நேர்மான நாய்கன், நிதிமிக்க – ஊர்மதிக்கும்

நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து
சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம் – அன்னார்

அருளுவார்: “மெய்யன் புடையீரே, அப்பன்
திருவுள்ளம் நாமறியோம்! சிந்தை – உருகாதீர்!

அன்பே சிவமென் றறிந்தோன் அறியார்க்குத்
தின்புலால் யாகச் சிறுமைதனை – நன்றுரைத்தான்.

ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ!
தீதலால் வேறு தெரியாரோ! – சோதியான்

சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர்
உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர் – மெய்யன்பீர்,

பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை
ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்! – தீங்கு

வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார்
கடவுள் கருணை இதுவாம்! – வடவர்

அழிவாம் குறுநெறியா ரேனும் பழிக்குப்
பழிவாங் குதல்சைவப் பாங்குக் – கிழிவாம்.

வடநாட்டில் சைவம் வளர்ப்போம்; கொலையின்
நடமாட்டம் போகும்! நமனைக் – கெடமாட்டும்

தாளுடையான் தண்ணருளும் சார்ந்ததுகண்டோம்; நம்மை
ஆளுடையான் செம்மை அருள்வாழி! – கேளீர்

குமர குருபரன் ஞான குருவாய்
நமை யடைந்தான் நன்றிந்த நாள்!

வினைச்சொற்கள் தமிழ் இலக்கணம்
பெயர்கள் உருபேற்று முறை - தமிழ் இலக்கணம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன