காதல் சுவை – கல்யாணசுந்தரம் பகுதி 1

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

காதல் சுவை – கல்யாணசுந்தரம் பகுதி 1

காதலின் இலக்கணம்

ஊரடங்கும் வேளையிலே
உள்ளம் கவரும் சோலையிலே-இவ
யாருக்காகத் காத்திருந்தா
ஏரிக்கரையிலே?-அதுதான்
எனக்கும் புரியலே! (ஊரடங்கும்)

ஆரணங்கின் மையலிலே
அந்தியிளம் வெய்யிலிலே
அங்கொருவர் வருவதுண்டு
அதையும் சொல்லிவிட முடியலே,
இங்கிருக்கும் இவமனசு
எங்கே இருக்குதோ தெரியலே? (ஊரடங்கும்)

உளறாதே பொன்னம்மா
உள்ளதைச் சொன்னா என்னம்மா?
கலங்காதே குப்பமா
நலுங்கு வைப்பது எப்பம்மா?
பழங்காலப் பைத்தியம் உங்கள்
இளங்காதல் ஏற்குமா? (ஊரடங்கும்)

காரணம் விளங்கியும் கதையேண்டி
காதலின் இலக்கணம் இதுதாண்டி
வீணர்கள் இட்ட சாதி வேலிதாண்டி
விந்தைகள் புரிவதும் அதுதாண்டி!
ஊரடங்கும் வேளையிலே
உள்ளம் கவரும் சோலையிலே-அவர்
வாரேனென்று வாக்களித்தார்;
வந்து சேரவே-அதனால்
மனமும் சரியில்லே (ஊரடங்கும்)

காதல் பலன்

பெண் : வாடாத சோலை
மலர் பூத்த வேளை
வளர் காதலாலே
மனம் பொங்குதே! (வாடாத)

ஆண் : தாமரைப் பூ மேலே
தாவிடும் மீன் போலே
காமினி நீயென்
கருத்தினில் பாய்ந்தாயே

பெண் : என் காதல் ராஜா,
எழில் மேவும் நேசா
மங்காத நிலவே இம்
மாநிலம்…நாணிடும்…
மாரனே…வாடாத

Amazon Year end offer Mobiles

ஆண் : குறும்பும் நியாயமே
அரும்பே மாரனே!
கரும்பே ஆசைக் காவியமே!…கரும்
மாந்தளிர் மேனி
வாய்த்த என் ராணி!

பெண் : புகழ்ந்தினிக் கவிபாட
போதாது நேரம்

ஆண் : புது மடமயிலே வா
போவோம் ஆற்றோரம்…

பெண் : வாழ்வெனும் ஓடம்
புதுப் பள்ளிக்கூடம்

ஆண் : மாண்புயர் பாடம் கூறுது
நேர்வழி சேருது…

பெண் : ஆற்றோரம் மேவும்
அடர்சோலை போல
படர் காதலாலே
பலன் காணுவோம்;
சுடர் வீசி வாழ்வில்
சுகம் காணுவோம் (ஆற்றோரம் மேவும்)

கடல் கடப்பேன்

உனக்காக எல்லாம் உனக்காக-இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக?-நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பதும் எதுக்காக?

கண்ணுக்குள்ளே வந்து
கலகம் செய்வதும் எதுக்காக?-மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன்
கருத்தைச் சொல்லிடு முடிவாக (உனக்)

பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா?-இல்லே
பயித்தியமாய்ப் பாடி யாடி நடிக்கணுமா?
துள்ளிவரும் காவேரியில் குளிக்கணுமா?-சொல்லு
சோறுதண்ணி வேறுஏதுமே இல்லாமெ
கெடக்கணுமா (உனக்)

இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்;
மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் இடி
மின்னல் மழைபுயலானாலும் துணிஞ்சு
இறங்கிடுவேன் (உனக்)

ஆசைக்குப் பேதமில்லை

கண்ணுக்கு நேரிலே, கலை என்ற தேரிலே
கைகொட்டி ஆடிவந்த காதலே.
இன்னும் சந்தேகமோ?
ஏனிந்த வேகமோ?

மின்னலின் தோழி எந்தன் மீதிலே
எண்ணங்கள் யாவும் அங்கே
எழிலன்னம் நானும் இங்கே
இனிவிட்டுப் போவதெங்கே?

இனிவிட்டுப் போவதெங்கே
முடிவைக் காணாமலே….
சொல்லக் கூடாததெல்லாம்
தோன்றும் இந்த நாழிகை

பல்லக்கு போன்ற மங்கை
பக்கம் வந்தால் வெட்கம் மீறாதோ?
ஆசைக்குப் பேதமில்லை
அதில் மட்டும் வேதமில்லை

அறிவுக்கே வேலையில்லை
குறிவைக்கும் போதிலே
கொஞ்சம் பெண் மோகம் வெல்லும்
நெஞ்சம் ஏது பாரிலே?

கொம்புத் தேனான என்னைக்
கொள்ளை கொண்டீர் வெள்ளையன்பாலே!

நாணம் எதற்கு

ஏதுக்கோ?…….
இருவிழி மருளும் நாணங்கள் ஏதுக்கோ? (ஏதுக்கோ)

என்ன நினைவோ? இளமைத் துணிவோ?
சின்ன வாயில் புன்னகை ஏதுக்கோ? ஏதுக்கோ?

புன்னைக் கொம்பிலே புரளும் பூங்கொடி
மண்ணில் சிந்திடும் வாச மலரும்,
விண்ணோடு குலவும் கண்ணாடி நிலவும்
வீணாகும் மௌனம் ஏதுக்கோ?
வீசும் வேல்பார்வை ஏதுக்கோ?….. (ஏதுக்கோ)

ஓடைத் தாமரை ஏடுபோல்-முக
சாடை காட்டிடும் தங்கக் கலசமே!
ஒய்யார நிலையே உண்டாக்கும் சிலையே
ஓயாத குறும்பும் ஏதுக்கோ?
உல்லாச மயக்கம் ஏதுக்கோ? (ஏதுக்கோ)

ஆசை வளருது

இல்லாத அதிசயமா
இருக்குதடி ரகசியமா
எதைநெனச்சி இவமனசு
இப்படி யாச்சுதோ? (எதை)

கண்ணுக்குள்ளே புகுந்திருந்த
காதலனைப் பிரிஞ்சிருந்தா
கவலைப்பட்டு மெலிவதுண்டு -அப்படியிருக்குமா?-இல்லை

முன்னும் பின்னும் பழக்க மின்றி
மொதன் மொதலாப் பாத்திருந்தா
என்னென்னமோ பண்ணிடுமாம்-இப்படியிருக்குமா?

சின்னஞ்சிறு பருவத்திலே
ரொம்ப ரொம்ப ஆழத்திலே
சிந்தனைகள்
செல்வதுண்டு-அதாயிருக்குமோ?-இல்லை

கன்னியரின் கனவினிலே
காணுகின்ற கடலுக்குள்ளே
எண்ணமீன்கள் மேய்வதுண்டு -இதாயிருக்குமோ?

மன்னன் மேலே வெச்ச
ஆசை வளருது-மனசு
வண்டிச் சக்கரம் போலே
சும்மா சுழலுது

வேலையாய்ப் போனவரு
வெற்றியுடன் வருவாரு
மாலயிட்டு மணமுடித்து
வாழ்விலின்பம் தருவாரு

வாழைத் தோட்டம் போல தழைத்து
மங்கலமாய் வாழ்வாரு
மஞ்சுளா முகத்தினிலே
மஞ்சளாகத் திகழ்வாரு

வௌக்கி எடுத்த
வெங்கலத் தவலை-உனக்கு
என்னடி கவலை

அந்த ராசாமகன் ராசாவுக்கு
ராசாத்தியாய் ஆவதற்கு
நல்ல நாளும் வந்து இருக்கு ஆனாலும்
இந்த ராணிக்குத் தான்கொஞ்சம் கிறுக்கு (இல்லா)

விருந்துக்கு அழைக்குது

ஓ…….
சின்ன மாமா!-ரொம்ப நேரமா-உன்னைத்
தேடி மனசு வாடுறேன் குடிசையோரமா
பொன்னுச்சரம் போட்டுகிட்டு-
பூத்தமுகம் காட்டிக்கிட்டு
வண்ணக்கிளி வந்திருக்கேன் வாசப்பக்கமா
பொண்ணாளாம் என்னையே கண்ணாலம் பண்ணியே
எந்நாளும் வாழவே ஏந்தான் தயக்கமோ? (சின்ன)

ஆசை வீரா-மீசைக்காரா-பேசறீர் ஜோரா-மாறா
நேசம் மறந்தீரா?
வீசுங்காத்து விருந்துக் கழைக்குது
வித்தாரக்குருவி முத்தாரங்கேக்குது (சின்ன)

கண்ணாலே வெல்லும் மாது-நானே அது
சொன்னாலே விளங்காது
என்ன வேணும் ஏது வேணும்
என்னைப் பார்த்துக் கேளுங்காணும்
சொந்தக்காரி வேணுமா?
சூழ்ச்சிக்காரி வேணுமா? (சின்ன)

சக்திக்குமேல் ஆசை

ஓ கோ கோ மச்சான் நீங்களா?-இங்கே
உள்ளே நுழைய வந்தீங்களா?
கேக்காத கதையைக் கேட்டிங்களா?-அதை
கேட்டிருந்தும் கேள்விகளைப் போட்டீங்களா!

வண்ணமுக வெட்டழகி
வட்டவிழிக் கட்டழகி
சின்னஞ்சிறு பொட்டழகி தெரியுமா?-அவ
அன்னநடை மின்னலிடை
அத்தனையும் சேர்ந்து ஒரு
பொண்ணாவந்து பொறந்திருக்கா புரியுமா?
முத்தத்திலே மோடிகளிருக்கு
கட்டிப்போடும்-கையை
கட்டிப்போடும்-நித்தம்
ரத்தத்திலே நீஞ்சிற சாத்தான்
சத்தம் போடும்-மச்சான்
சத்தம் போடும்
சக்திக்கு மேல் ஆசையிருக்கு
தடவிப்பார்க்க மீசையிருக்கு
முத்திப்போன காதல் கிறுக்கு
முளிச்சுக்ிட்டே குருடாயிருக்கு
அவலை நினைச்சு உரலை உருட்டும்
அயித்தை மவனைப் பாருங்கடி

கவலை புடிச்சிக் கலங்குறாரு
காலைப் புடிச்சி வாருங்கடி
தவளை தத்துற நடை நடக்குற
சங்கதி என்ன கூறுங்கடி
கொவளை நிறைய தண்ணி வச்சு அதில்
இவரைப் புடிச்சி போடுங்கடி
குதிச்சு ஆடுங்கடி-வந்து
கூட்டமாப் பாடுங்கடி
மதிச்சு நடங்கடி-வடை
மாலையப் போடுங்கடி

Amazon Year end offer Laptops

போட்டிக்கு வந்தவரு
மாட்டிக் கிட்டாராம்
பொண்ணுக்குக் கிண்ணி வச்சு
கோட்டை விட்டாராம்
பூட்டிய வீட்டில்
புகுந்து கிட்டாராம்
பொட்டியைத் தேடி
ஆளை மிதிச்சாராம்

கத்தியைக் கண்டொருத்தர்
காதல் கொண்டாராம்
கையில் கொடுத்தவுடன்
கண்ணீர் விட்டாராம்
எத்தனை பேரோ
ஏமாந்துட்டாராம்
சத்திரவீரர் வித்தை
காட்டுராறாம் (போட்டி)

சந்தர்ப்பம் பாத்து ஒரு
சாமி வந்தாராம்
சக்தி நிறைஞ்சுதுண்ணு
சாம்பல் தந்தாராம்
மந்திரம் பண்ணி
மயக்கப் பார்த்தாராம்
மயங்காத கன்னி
விலங்கைப் பூட்டினாளாம் (போட்டிக்கு)

வாடி வாடி கட்டப்பொண்ணெ வாடி
வந்திருச்சு ஜோடி மந்திரத்தை மீறி
வாசலுக்கு முன்னாடி-ஹேய்
கருப்போ சிவப்போ மச்சான்
விரும்புறது பெண்தானடி
கசப்போ இனிப்போ மச்சான்
ஒம்மேலே ஒரு கண்தானடி
பாரு பாரு பக்கம் வந்து பாரு
ஊரு பேரு ஒனக்குச் சொல்லுவாரு
ஒண்ணுமில்லே தகராறு-ஹேய் (கருப்போ)

ஏது ஏது இது தெரியாது
இருக்குது – காது
எதுவும் கேட்காது
எடத்தை விட்டு நகராது – ஹேய் (கருப்போ)

வீரா-வீராதி வீரரான சூரா!
மாறாத மோகங் கொண்டீரா?
மாணோடுறவாட வந்தீரா?

ஏறாத மாமலையில் ஏறி வேங்கையோடு
போர் புரிந்து பெரும் பேறடைந்தோமென
ஊர் திரும்பி விடுவீரா……?
பாரினில் அதிகாரமுடைய
நாரியரிடம் உமது சக்தி
நீரினில் விழும் தீ!

வேருடன் எல்லா விதிகளும்
மாறிடும் ஒரு மங்கை சொல்லில்
அதை மறந்தீரோ?-இத்தனை கேட்டும்
அறிவிழந்தீரோ?

ஓரக் கடலில் ஈரமிருந்தும்
ஊன்றும் விதையதில் உயிர் பெறாது;
உணர்ந்து திரிந்து ஓடினாலே
உங்கள் உயிர் இனி உடலில் வாழும்
அதை மறந்தீரோ-இத்தனை கேட்டும்
அறிவிழந்தீரோ?

வண்டைத்தேடும் மலர்

சிங்காரப் பூங்காவில்
ஆடுவோமே
தேனூறும் தென்பாங்கு
பாடுவோமே!

கன்னிப்பொண்ணு
கலங்குது நின்னு
என்னமோ எண்ணி
சுழலுது கண்ணு

அன்னந்தனைக் கண்டொருத்தன்
ஆசைகொள்ளுறான்
கன்னம் வச்சுக் கொண்டுபோக
கனவு காணுறான்

என்னைக் கொண்டு செல்லும்
அந்தக் கள்ளன் யாரடி?
எங்களுக்கென்ன தெரியும்
சொன்னாத்தானடி

வண்ண மலரடி முகம்
வாடுவது ஏனடி?
வண்டு வரவில்லை என்ற
வருத்தந்தானடி (கன்னி)

கையும் கையுந்தான் மேளம்-இந்தக்
கணக்குக்குள் இருக்குது தாளம்;
சதங்கைகட்டி -தாளத்தை ஒட்டிக்
கும்மியுங்கொட்டிக்-கண்ணையும் வெட்டிப்
பலபல கலைகளை அபிநயங்காட்டிப்
பம்பரப் பெண்களின் நாட்டியப்போட்டி (கையும்)

ஒன்னத்தானே,ஒன்னத்தானே,
ஓ சின்ன மானே
ஊமையானதேனடி?
ஒண்ணுமில்லை போங்கடி
கன்னத்திலே ரோஜா நிறம்
காணுவதும் ஏனோ?
காலம் செய்யும் வேடிக்கைக்கு
காரணந்தான் நானோ?
காணாத காட்சியை எல்லாம்
கற்பனை பண்ணுதல் ஞாயமா?
காணாம எப்படியம்மா
கற்பனை வந்திடும் மாயமா?
ஒன்னத்தானே- ஒன்னத்தானே (சிங்கார)

இன்பம் காணலாம்

பெண்:

சின்னப்பெண்ணான போதிலே
அன்னையிடம் நான்ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா?-அம்மா
நீசொல் என்றேன்! (சின்ன)

வெண்ணிலா! நிலா!-என்
கண்ணல்லவா கலா!-உன்
எண்ணம்போல் வாழ்விலே!
இன்பம்தான் என்றாள்! (வெண்)

கன்னிஎன் ஆசைக்காதலே!
கண்டேன் மணாளன் நேரிலே!
என்னாசை காதல் இன்பம் உண்டோ?-தோழி
நீ சொல் என்றேன் (வெண்)

கண்ஜாடை பேசும் வெண்ணிலா!
கண்ணாளன் எங்கே சொல்நிலா!-என்
கண்கள்தேடும் உண்மைதனை
சொல்நிலவே என்றேன்!

ஆண்:

வெண்ணிலா! நிலா!-என்
கண்ணல்லவா கலா!-உன்
எண்ணம்போல் வாழ்விலே
இன்பம் காணலாம்!

மூடிவைத்த காதல்!

ஆண் : மஞ்சப்பூசி, பூ முடிச்சி
மங்கலக் குங்குமம் வச்சு
கொஞ்சும் கிளி போலவந்த அஞ்சலே-ஒன்ன
கோயிலுகட்டிக் கும்பிடப்போறேன்
நெஞ்சிலே!

பெண் : அக்கம்பக்கம் பார்க்காம,
அனுமதியும் கேக்காம
தெக்குச் சீமை ஆடுபோல கத்துறே-சும்மா
சொக்குப்பொடி போட்டு என்னைச் சுத்துறே

ஆண் : சங்கம் பழக் கொத்துபோல
பொங்குகடல் முத்துபோல
மங்கையே நீ சிரிச்ச-என்
மனதைத் தட்டிப் பறிச்சு
கண் கட்டி வித்தை காட்டிக்
கையைக் கட்டிப் போடுறே
கருப்பட்டிப் பேச்சுக்குள்ளே
காதலைவச்சு மூடுறே (மஞ்ச)

பெண் : சொல்லித்தான் தெரியணுமா?
சும்மா கம்மா கிளறணுமா?
கிறுக்குப்போல உளறணுமா?
உள்ளத்திலே கள்ளத்தனம்
கூடாதே மச்சான்;
கோமாளி வேஷங்கள் போடாதே-வெறுங்
கோணங்கி ஆட்டங்கள் ஆடாதே

ஆண்: நீ பொல்லாத பொம்புளே,

பெண் : என்னைப் புரிஞ்சிக்காத ஆண்பிள்ளே,

ஆண் : அட
எல்லாம் எனக்குத் தெரியும் பொண்ணே
எதுக்கு இப்படி நீ தயங்குற-ஒன்னை
ஏமாத்திட்டுப் போறாப்போல
ஏக்கம்புடிச்சி மயங்குற

பெண் : அடி ஆத்தே யாரும்
பர்த்துகிட்டாக்கா பொல்லாப்பு!

ஆண் : அட
அதுக்கெல்லாம் நீ அஞ்சாதே-என்
ஆத்தங்கரைத் தாழம்பூ! (மஞ்ச)

தடைபோடும் நாணம்

இன்ப முகம் ஒன்று
கண்டேன்-கண்டு
எதுவும் விளங்காமல்
நின்றேன்-அதை
இரவே உன்னிடம் சொல்ல
வந்தேன் (இன்ப)

தேடாமல் அலையாமல்
நேரிலே-சுகம்
ஓடோடி வந்தது
வாழ்விலே
மனம் ஆனந்தம்
பாடுவதேனோ-இது
ஆரம்ப ஜாடைகள்
தானோ-இன்று (இன்ப)

தோன்றாத நினைவெல்லாம்
தோன்றுதே-கண்கள்
தூங்காமல் ஆசையைத்
தூண்டுதே-அது
ஏனென்று கேட்கவும்
ஓடுதே-புது
நாணம் வந்தே தடை
போடுதே-பொங்கும் (இன்ப)

பெண் தெய்வம்

கற்பின் இலக்கணமே
களங்கமில்லாத திலகமே!
தீபமே பெண் தெய்வம்-உன்
கண்ணிலே நீர்பெருகக்
கவலையிலே மனம் உருகக்
கடும் பயணம் போவதெங்கே?
கடும் பயணம் போவதெங்கே?

பெரும் பாசமே இழந்து-மனம்
பாதியிலே ஒடிந்து
உனதாசைக் கலசமே நொறுங்கியதா? (பெரும்)

சொந்தமும் பந்தமும்
சுகங்களும் அன்பும்
சூழ்ந்து கொண்டே தினம் பாராட்டும்…. (சொந்த)

இன்பமென் றுனை நம்பவைத்துமே
இடையினில் ஏமாற்றும்-இதில்
எத்தனை மாறாட்டம்? (பெரும்)

காலத்தின் கைகளில்
வண்டியும் மாடும்
கண்ட திசையில்-அதன்
மனம்போல் ஓடும்… (கால)

எங்கு சேருமோ
என்ன ஆகுமோ
இங்கில்லையோ கவனம்-எதுவரை
உன் பயணம்? (பெரும்)

பேசும் விழிகள்

துடிக்கும் வாலிபமே
நொடிக்குள் போய்விடுமே
அதற்குள் காண்பதெல்லாம்
ஆனந்தமே!ஆனந்தமே!

வளையலின் நாதம்
வாளோடு சிநேகம்
வாழ்வின் உல்லாசம்
மாமணம் வீசும்!

எனதாசை போலே
நடந்தால் மண்மேலே
நாடாளும் ராஜா நீயே-அதனால்
காண்பதெல்லாம் ஆனந்தமே!

இனித்திடும் காலம்
இளமையில் ஜாலம்
மனத்தினில் புதுமையை
வளர்க்குது மேலும்

விழியாலே பேசும்
அழியா நேசம்
நிலம் மீதில் நீங்காததே!-அதனால்
காண்பதெல்லாம் ஆனந்தமே! ஆனந்தமே!

சிலைக்குள் தெய்வம்

பறித்த கண்ணைப் பதித்துவிட்டேன்
பத்தினியே நீ எந்தன் கணவன் கண்ணே
எடுத்த கையால் கொடுத்து விடு
ஏழைக்கு வாழ்வு கொடு!

இதயக் கோயில் அடுத்தவளே! அருள்மணியே!
அறங்காத்த தமிழ் மகளே! அம்மா உன்மேல்
ஆணையிட்டுக் கேட்கிறேன்
அன்பிருந்தால் பண்பிருந்தால் கண்கொடம்மா!

ஏழைக்கு உன் அருள் எட்டாத சிகரமோ?
இன்னமும் கண்கள் குருடோ?
இரு செவியும் மந்தமோ-நான்
அழுதகுரல் கொஞ்சமோ?
இதயமும் கல்லானதோ?
இரக்கம் பிறக்கவில்லையோ?

வாய் திறந்து சொல்லம்மா?-உன்
மகளின் கதையைக் கேளம்மா-துன்பம்
வரை கடந்து போனபின்பும் மௌனமா?-நீதி
முறை கடந்த நீயும் பெண்கள் தெய்வமா?

பெற்றுதா வென்று வேண்டும்
மதுரைத் திருநகரமதிர
சிகரத்தோடு குரலும் உயர
மறைகற்றவர் பதறப்
பொறி சிதறிய நாவெங்கே?
மகரக் கொடியும் கொற்றவன்
மணி பொன் முடியும் கட்டொடு
மண்ணில் வீழப்பொங்கிய மனமெங்கே? (வாய்திறந்து)

கண்ணிலுதிரும் மலரெடுத்து
கற்புநாரில் சரம்தொடுத்து
அன்னையே உன் காலடியில் சாற்றினேன்-தினம்
ஆலயத்தில் அன்பு விளக்கேற்றினேன்;
உன்னை நம்பிநம்பி என்றும் போற்றினேன்-இன்று
ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்;

செம்பும் கல்லும் தெய்வமென்று
நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ?
சிற்பிகள் செதுக்கி வைத்த
சித்திரச் சிலைகளுக்குள்
தேவி வந்திருப்பதுவும் பொய்தானோ?

தனிச் சிலம்பெடுத்து
ஊர்தழற்படச் சினத்தெரிந்த
சக்தியுண்டெனப் படைத்த கர்வமோ?
மனைச்சுகம் கெடுத்துகண்
மணிச் சுடர்தனைப் பறித்து
வாட வைத்தல் நீ வளர்த்த தர்மமோ?
அம்மா….அம்மா….அம்மா…..!

விருந்து!

மருந்து விக்கிற மாப்பிள்ளைக்கு
விருந்து வைக்கணும் வாருங்கடி
பறந்து பறந்து ஆடுங்கடி-நம்ப
பழைய பாட்டைப் பாடுங்கடி

மிரண்டு மிரண்டு முளிக்கிறாரு
விவரம் என்ன கேளுங்கடி
விஷயம் புரிஞ்சு போகும்-அவர்
பொட்டியைத் தொறந்து பாருங்கடி (மரு)

சூரணமா மாத்திரையா
வேரைப் புடுங்கி அரைச்சதா
பூரணமா குணந்தருமா
பொதிகை முனிவர் லேகியமா

என்னங்காணும் வைத்தியரே
இப்படிநின்னா நடக்கும்
சின்னப்பிள்ளை நடிக்கிறீங்க
சிரிப்பில்கூட சிக்கனமா? (மரு)

பொல்லாத மயக்கமுங்க
சொல்லாமல்தான் வருதுங்க
எல்லாமே கசக்குதுங்க
ஈரமலரும் சுடுதுங்க
என்னடி காசியம்மா
இவருக்கு அது புரியுமா?
சொல்லடியம்மா வியாதிகளை
வெல்ல இவரால் முடியுமா? (மரு)

அந்தப் புரத்திலே வைத்தியம் பார்த்து
அனுபவம் இருக்கா இல்லையா?-அவள்
தங்கக் கரத்திலே நாடி பார்க்கவும்
தைரிய மிருக்கா சொல்லையா?

இன்பக் குளத்திலே ஏக மலராக
இருப்பவள் எங்கள் எஜமானி-தினம்
இளமை குலுங்க வரும் எழில்ராணி-அவள்
அன்பு மனதிலே என்ன இருக்குதோ
அறிந்து கொண்டால் நீர் பெரும் ஞானி

யாருக்கும் விளங்காதவள் பாவி…ஓய்ஓய்ஓய்ஓய்
கொஞ்சுவா கெஞ்சுவா அஞ்சினா மிஞ்சுவா
மிஞ்சினா அஞ்சுவா கெஞ்சுவா கொஞ்சுவா
தெரியுமா?

ஆண் : சரியம்மா
பெண் : மருந்து…பாடுங்கடி!

கண்ணும் கண்ணும் பேசுது

கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு (கண்ணோட)

பொன்னான பொண்ணு தனியா நின்ன
பொல்லாத காலம் கடந்தாச்சு
கண்ணாளனோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறாந்தாச்சு (கண்ணோட)

சின்னஞ் சிறிசிலே அஞ்சு வயசிலே
நெஞ்சிலே கொண்ட அன்பு-இளம்
பிஞ்சிலே கொண்ட அன்பு-இப்போ
என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
பாராமலே வந்த வம்பு…எதிர்
பாராமலே வந்த வம்பு (கண்ணோட)

கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கு வந்த அன்பு….அதில்
என்னைக்கும் இல்லே வம்பு…அது
என்னையும் உன்னையும் கேக்காமே
இணைக்கப் போவுதே வம்பு…ஆஹா
வேண்டாமே இந்த வம்பு (கண்ணோட)
எங்கே
என் இன்பம் எங்கே? என் இதயம் எங்கே?
பகைவர் நடுங்கும் நடை எங்கே?-என்
பக்கம் இருந்த பலம் எங்கே? (எங்கே)

வீரமாமுகம் தெரியுதே-அது
வெற்றிப் புன்னகை புரியுதே
விந்தைப் பார்வையில் மேனி உருகுதே
மேலும் மேலும் என் ஆசை பெருகுதே
காதல் வளருதே! வாழ்வு மலருதே!

பார்த்து ரசிப்பேன்!

ஆண் : பக்கத்தில் இருப்பே-நான்
பாத்துப் பாத்து ரசிப்பேன்
வெக்கத்திலே முழிப்பே-நான்
விஷயம் தெரிஞ்சு சிரிப்பேன் (பக்கத்திலே)

செக்கச் சிவந்திருக்கும்
சிங்காரக் கன்னத்திலே
செல்லமாக் கிள்ளிடுவேன்-நான்
உள்ளதெல்லாம் சொல்லிடுவேன்
(பக்கத்திலே)

பக்குவம் தவறாத
பரவக் கொண்டை மீன் போல
பளிச்சிண்ணு துள்ளிடுவே
பாஞ்சி மனசை அள்ளிடுவே (பக்கத்திலே)

காவேரி ஓரத்திலே
கால் பதுங்கும் ஈரத்திலே
காலையிலே நான் நடப்பேன்
கலப்பை கொண்டுகிட்டு,
கட்டழகி நீ வருவே
விதையைக் கொண்டுகிட்டு-நெல்லு
விதையைக் கொண்டுகிட்டு (பக்கத்திலே)

வாய்க்கா வெட்டின களைப்பிலே-நான்
வந்து குந்துவேன் வரப்பிலே-புது
மஞ்சள் நிறத்திலே, கொஞ்சும் முகத்திலே
நெஞ்சைப் பறித்திடும் வஞ்சிக் கொடிநீ
கஞ்சிக் கொண்டு வருவே-இன்பம்
கலையத்திலே தருவே (பக்கத்திலே)

பெண் : அப்புறம்?

ஆண் : ஒரு வீர மகனைப் பெத்திடுவே…!

பெண் : ஆளைப் பாருங்க!…

ஆண் : நீ தாலாட்டத் தெரியாமே
தவிச்சிடுவே-நான்
தந்தானத்தாம் தாளம் போட்டுப் பாடுவேன்

பெண் : எங்கே பாடுங்க…?

ஆண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
அப்பா அம்மா சொன்னதைக் கேளு
அறிவு வந்ததும் சிந்திச்சுப்பாரு
அலட்சியமா இருந்திடாதே சின்னத் தம்பி
அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி-நாட்டில்
அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி

பெண் : அப்புறம்…?

ஆண் : நீ
பக்கத்திலே இருப்பே-நான்
பாத்துப் பாத்து ரசிப்பேன்

கலையான நிலை

பெண் : கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலைகாண வா…நீ வா வா
கலையான நிலைகாண வா
ஆண் : கலையத்திலே கஞ்சி கொண்டு
கரையிலே வரும் பெண்ணைக் கண்டு-அங்கே
கலப்பை தனை மறந்து உழவன்
கலங்குகின்றானே!- நின்று
மயங்குகின்றானே!
பெண் : அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் – ஒரு
நொடிக்குள் அவனை இழுக்குதே….(கழனி)
ஆடிவரும் நதியோரம்,
ஆணும் பெண்ணும் வெகுநேரம்
அழுக்கு நீங்கத் துணி துவைக்கும்
வேகத்தினாலே – அவர்கள் நேசத்தினாலே
ஆண் : ஆசைகளைத் தூண்டிவிடும்
அணைகளையும் தாண்டிவிடும்
அரிய பெரிய ரகசியத்தை
அறிந்திடலாமே – நாம்
அறிந்திடலாமே!
பெண் : எந்தன் மயிலே…மழை முகிலே
ஆண் : இளங்குயிலே…அதன் குரலே
இருவரும் : எழில் குலுங்கும்
உலகை உணர்ந்திடுவோம்

மாறும் மனம்

பெண் : ஆண்கள் மனமே அப்படிதான் – அது
அடிக்கடி மாறும் இப்படித்தான் (ஆண்)
திருமணமாகிடும் முன்னே ஒன்றும்
தெரியாதவர்போல் இருப்பாங்க
திருமணமாகி மனைவியைக் கண்டால்,
வெடுக்கின்னு முறைப்பாங்க

ஆண் : ஹா! ஹா!

பெண் : ஆண்கள் மனமே அப்படித்தான் – அது
அடிக்கடி மாறும் இப்படித்தான்

ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் – அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான் – இந்த (பெண்)
மணமாகு முன்னே வாயும் பேசாமல்
மதிப்பு மரியாதை தருவாங்க – திரு
மணமானபின்னே வரிந்துகட்டிக் கொண்டு
குஸ்திக்கும் வருவாங்க

பெண் : ஓஹோ ஹோ ஹோ!

ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் – அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்

பெண் : அன்பு கனிந்திட கைகளை நீட்டி
அருகினில் வாருங்க

ஆண் : ஓஹோ!

பெண் : இன்ப வாழ்வில் சில நாட்களானபின்
எட்டியும் போவாங்க (ஆண்)

ஆண் : போட்டா போட்டியில் பெண்களுக்குள்ளே
பொறாமை யடைவாங்க

பெண் : ஆமா!

ஆண் : போனா போகுதுன்னு ஆண்கள் இருந்தால்
பொறுமையைக் குடைவாங்க (பெண்)
பெண் : மானே தேனே என்பதெல்லாம் – ஒரு
மாதம் சென்றதும் மாறிடுதே

ஆண் : வணக்கமும் பயமும் பக்திகளும் – ஒரு
வாரம் சென்றதும் ஓடிடுதே

பெண் : ஹா…ஹா…ஹா…
ஆமைகளென்ற பெண்களை எண்ணி
ஆட்டம் போடுவாங்க
அதுவும் போதாமல் சமயம் பார்த்தே
அடிக்கவும் துணிவாங்க! (ஆண்)

ஆண் : இந்தப்
பெண்கள் குணமே அப்படித்தான் – அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்

பூமாலை போட்டவன்

ஆண் : எழுந்தென்னுடன் வாராய்…சொக்கம்மா
எழுந்தென்னுடன் வாராய்!

பெண் : எங்கு என்னை அழைக்கிறாய்
என் மம்முத ராஜா?

ஆண் : என்னோட நீ வர
ஏனடி தாமதம்?

பெண் : ஏனென்று கேக்காதே
கால்ரெண்டும் நோகுது

ஆண் : நோகாமல் சுகமெல்லாம்
தானாகப் பிறக்குமா!

பெண் : போகாத ஊரெல்லாம்
போனாத்தான் பொறக்குமா?

ஆண் : (வசனம்) பெண்ணே,என் பொறுமையை
சோதிக்காதே; ஆத்திரம் வந்தால் உன்னை
என்ன செய்வேன் தெரியுமா?

பெண் : (வசனம்) என்ன செஞ்சிடுவே…ஹூக்கும்

ஆண் : கத்தியை உருவிக் குத்திடுவேன் – உன்னை
கண்டதுண்டாக வெட்டிடுவேன்

பெண் : நிறுத்தய்யா… நிறுத்தய்யா
நேரங்கெட்ட நேரத்திலே
ஊரை விட்டு ஓடுவது எதுக்கய்யா?

ஆண் : வாண்ணா வந்திடடி…..
மரியாதை யில்லாதவளே
ஏண்ணு கேக்காதே
எதிர்த்துப் பேசாதே
எட்டி விரட்டிடுவேன் – உன்னை
விட்டுப் பிரிந்திடுவேன்

பெண் : நீயே சகாயமென நினையாமல்…நாதா
வாயால் மோசமே போனேன்-
மதியாமல் பேதை
மாயம் எதுவும் இல்லை
வருத்தம் கொள்ளாதே என்னை
மன்னித்தருள வேண்டும்
வந்தனம் செய்தேன் ஸ்வாமி!

ஆண் : பத்தினி ரத்தினமே
பறந்துவந்த சீதனமே – என்
உத்தரவு போல உத்தமி – நீயொரு
உதவிதான் செய்யவேண்டும்

பெண் : (வசனம்) என்ன உதவி செய்யணும்
அப்படியே ஆகட்டும் ஸ்வாமி
பூமாலை போட்டுப்போன
மாமா வருவதற்குள்
காமலை வந்ததய்யா வைத்தியரே
மாமியார் வைத்துப்போன
சாமானை வித்துத்தரேன்
மருந்தேதும் போடுமய்யா வைத்தியரே

ஆண் : கண்ணையிழந்தவளே
கட்டழகுப் பெண்மயிலே – இந்தக்
கைகண்ட மருந்தை – என்
கை கொண்டு பூசினால்
கண்கண்ட குணம் பெறலாம்

பெண் : களிம்போ களிம்பு களிம்போ களிம்பு
காயத்திலே பெருங்காய மிருந்தாலும்
மாயமாய் மறைக்கும் களிம்பு
வெள்ளைக் களிம்பு,கருங்களிம்பு,
வீரக்களிம்பு
சொல்ல முடியாத நோய்களுக்கும் – ஒரு
சூரணமிருக்கு வாங்கிடுங்கோ – அதை
பல்லில் படாமலே
உள்ளுக்குப் போடணும்
பாஷாணம் சேர்ந்தது பார்த்துக்குங்கோ
(களிம்போ)

தாலி கட்டும் வீரன்

தோழிகள் : மானைத்தேடி மச்சான்
வரப்போறான் – ஓ
வரப்போறான்
தாளத்தோட தாலி
கட்டப்போறான் – ஏ
காட்டப்போறான் (மானை)

தலைவி : தாலிகட்டும் வீரனவன்
யாரு? – ஏ
எந்த ஊரு?
மாலை கட்டவேணும்
கொஞ்சம் கூறு – ஏ
என்னபேரு? (மானை)

தோழி : போதும் போதும் கேலி சும்மா போடி-ஏ
பொடிவச்சுப் பேசும் வம்புக்காரி
சின்னஞ்சிறு அன்னம் – நீ
எண்ணும் பல எண்ணம்!

தலைவி : முன்னும் பின்னுமாக வந்த பின்னும்

1.தோழி : பிறகு என்ன பண்ணும்….
2.தோழி : உறவு வந்த பின்னும்….. (மானை)

தலைவி : அழகிலே நடையிலே
சுகமெல்லாம் நிறைந்து விடுமோ?

தோழி : ஆசை பொங்கும் தோற்றம்
அமுதூட்டும் பழத்தோட்டம்!

தலைவி : என்னென்னமோ சொல்லி
என் மனசைக் கிள்ளி
இங்குமங்கும் ஓடவைக்கும் கள்ளி

1.தோழி : பருவம் வந்து துள்ளி

2.தோழி : உருகுறாளே வல்லி…. (மானை)

சேவை

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அனேக நன்மையே – உண்மையே
தேடுகின்ற தந்தை தாயை நேரிலே – கண்டு
சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று
அருமையான பருவம் கொண்டு
அன்புமீறி ஆடிப்பாட காணலாம் – பலர்
ஜோடியாக மாறினாலும் மாறலாம் – சிலர்
தாடிக்கார ஞானிபோலும் வாழலாம்
நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே
பல….விந்தையான வார்த்தை வீழும் காதிலே
விட்டுப்போனபோது அழுதவள்ளி
புதுமையான நிலையில் – அல்லி
பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் – தொட்டுத்

தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் – கண்ணில்
சேற்றை வாரி வீசினாலும் வீசலாம் (வீடு)

பகைக்குரல் மாறுதே!

வம்பு மொழி மாறி மாறி
அன்பு மொழியானதே
இன்பவழி நாடும் விழி
என்னை மீறுதே (வம்புமொழி)

மடை தாண்டும் மீனைப்போல
மனம் தாண்டி ஓடுதே….ஆ….
மழை கண்ட பயிர்போல
மகிழ்ச்சி கொண்டாடுதே…
இளந்தென்றல் வீசுதே
என்னென்னமோ பேசுதே
என்மேல் மணம் தன்னைப் பூசிடுதே…ஆ…ஆ
அன்புக்கடல் ஓரத்திலே
ஆசை அலை மோதுதே
இன்பத்திலும் இன்பம்வந்து என்னைமீறுதே (வம்புமொழி)

வீம்பு செய்த பேதமெல்லாம்
கூன்விழுந்து போகுதே
பாம்பிருந்த காட்டில் இன்று
மான் புகுந்து ஆடுதே
பகைக்குரல் மாறுதே!
பண்புக்குரல் பாடுதே! – புதுப்
பாடங்கள் கூறிடுதே!…ஆ…ஆ
மூடிவைத்த உண்மையெல்லாம்
நேரில் வௌியானதே!
நீதியிடம் நேர்மைவந்து நேசமானதே!

நல்ல துணைவன்

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் – இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்;
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் – துயர்
இருளை மறைப்பதும் கீதம் (துள்ளாத)

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்,
உறவு கொண்டால் இணைந்திடும் – அதில்
உண்மை இன்பம் விளைந்திடும் (துள்ளாத)

பெண் முகம் கண்ணாடி

முகத்தில் முகம் பார்க்கலாம் – விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்! (முக)

வகுத்த கருங்குழலை மழைமுகி லெனச் சொன்னால்
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் – என்முன்
வளைந்து இளந்தென்றலில் மிதந்து வரும் – கைகளில்
வளையல் இன்னிசை கேட்கலாம் – மானே உன் (முக)

இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் – அன்பே
அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் – காதல்
அகத்தினிலே அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் – இன்பம்
இளமை பொங்கும் அங்கம் சிந்தும் அழகில்
தங்கம் மங்கும் நிலையில் நின்று
தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலெனச் சோலைதனில்
பொழுதெல்லாம் மகிழலாம்;
கலையெலாம் பழகலாம் – சதங்கையது
குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும்
குறும்பு படர்ந்திடும்

எண்ணக் கனவுகள்!

உன்னைக் நினைக்கையில் கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி! (உன்னை)

பொன்னை உருக்கிய வார்ப்படமே – அன்பு
பொங்கிடும் காதல் தேன்குடமே!
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே
சந்தனக் காட்டுப் புதுமலரே! (உன்னை)

வட்டக் கருவிழி மங்கையே- ஒளி
கொட்டும் நிலவுக்குத் தங்கையே!
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் – மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே – இன்பக்
காவியத் தேனள்ளி ஊட்டுதே! (உன்னை)

பருவம்

சுகம் வருவது பாஸ்ட்டு – நம்ம
சும்மாயிருந்திட்டா வேஸ்ட்டு
மனம்தனில் நினைத்துபார்
உணர்ந்து நடந்துபார் (சுகம்)

பொலிவைத் தருவது பருவம் – முகப்
பொலிவைத் தருவது பருவம் – அது
போனால் மாறிடும் உருவம் – அது
போனால் மாறிடும் உருவம்
அழகைத் தருவது காலம் – உடல்
அழகைத் தருவது காலம் – அதில்
அடைந்த வரைக்கும் லாபம் (சுகம்)

முகமும் முகமும் சந்திக்கும்போது
முதலில் வருவது தயக்கம்,
மோகம் வளர்ந்து சிந்திக்கும்போது
மூளைக்குத் தருவது மயக்கம்
முழுதும் தெரிந்து இதயம் கலந்து
முடிவில் வருவது இணக்கம் – அதற்
கிடையில் வருவது பிணக்கம் (சுகம்)

கதை சொல்லும் தீபாவளி!

உன்னைக்கண்டு நான்வாட,
என்னைக்கண்டு நீவாட
கண்ணீரும் கதைசொல்லும் தீபாவளி
ஊரெங்கும் மணக்கும்
ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா….காணாத தூரமடா

நெஞ்சமும் கனலாகி
நீராகும் போது
நிம்மதி என்வாழ்வில்
இனி ஏது?
கொஞ்சிடும் மொழிகேட்டு
மகிழ்ந்தவளெங்கே?
குலத்தின் விளக்காய்த்
திகழ்ந்தவளெங்கே?
கண்ணுக்குள் நடந்த
காட்சிகளெல்லாம்
கனவாகிப் போனதடா…கனவாகிப் போனதடா…

ஆசைக்கு அணைபோட்ட
அறிவான நங்கை
அன்புக்குப் பொருள் சொன்ன
அருள் மங்கை!
பாசத்தின் சுமையோடு
பறந்து சென்றாளே
பழகும் உனையும்
மறந்து சென்றாளே
கண்டதும் நினைவில்
கொண்டதும் முடிவில்
கதையாகிப் போனதடா….கதையாகிப் போனதடா…..

பொல்லாத காதல்

கன்னித் தீவின்
அழகு ராணி நான்
கண்ணைக் கவரும்
வண்ணமேனி தான்
என்னைக் கொண்டால்
இன்பம் காணலாமே- (கன்னித்தீவு)

உல்லாசமான
நேரம் வந்து
பொல்லாத காதல்
போதை தந்து
உன்னோடு பேசும்
மோகம் கொண்டு
உள்ளம் வாடுதே (உல்லாசமான)

பெண்ணென்ற கோயில்

நானாடும் நாடகம்
ரகசியந்தான் – போடும்
நடையெல்லாம் நடனந்தான்
சிங்காரந்தான் – இதை
ரசிக்காத ஆளிருந்தால்
அதிசயந்தான்! (ஐயா)

என்னைக் கண்டாலே ஆனந்த லோகம் – உங்கள்
கண் முன்னே தான்வந்து மோதும் – ரெண்டு
கண்ணாலே யோகந்தான் முன்னாலே மோகந்தான்
பெண்ணாலே தானின்ப வாழ்வே! (ஐயா)

ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில்
அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில் – கண்டு
ஆடாத ஆளில்லை பேசாத வாயில்லை
பாடாத ஏடில்லை பாரில்!

மாறாத ஆசை

மாந்தோப்பு வீட்டுக்காரி
மானோடும் நாட்டுக்காரி
ஏமச்சான் – வா மச்சான்
ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன் (மாந்தோப்பு)

பொல்லாத அத்தை மவன்
புலியோட சண்டை போட்டான்
இல்லாத ஆசைகாட்டி
எம்மேலே கண்ணே போட்டான்

வில்லை எடுத்து மச்சான்
வேட்டைக்கு பயணம் வச்சான்
சொல்லாமே ஒடி வந்தேன் – என்
ஷோக்கு மச்சான்
ஏ மச்சான் – வா மச்சான்
ஒன்னைத்தான் தேடி மனம் வாடி வந்தேன் (மாந்தோப்பு)

காதலர் நிலை

பார் முழுதுமே நமது பேர் புகழுமே – நம்
பேரழகில் இதயம் மகிழுமே!
காவினில் விளையாடும்
காதலர் நிலையாவும்
காணப் பெரு மோகந் தரும் ஆனந்தமே
சேல் விழியாலே – இனி
தேன்மொழியாலே – நமது
யாழ் ஒலியாலே – விளையும் பேரின்பமே!
(பார் முழுதுமே)

கண் மலர்

அன்பு அரும்பாகி
ஆசை மலராகி
இன்பம் கனியாகி
எதிர்பார்க்கும் வேளையிலே
பண்பே என்வாழ்வில்
பங்குகொண்ட மாமணியே – உங்கள்
செம்பவழ வாய்திறந்து தேவையென்றால்
என்ன அது? அத்தான்?

தேன் வேண்டுமா? – இல்லை
நான் வேண்டுமா?
தேடிவந்த யோகமே
தென்றலே என் இன்பமே! (தேன்)

நாணம் உண்டு வீரம் உண்டு
நல்ல குறள் பாடம் உண்டு
கானம் பாடும் ஞானம் உண்டு
அது வேண்டுமா?-இல்லை
காதல் முத்தம் உண்டு
அது வேண்டுமா? (தேன்)

காதில் வந்து பேசிடவா?
கண் மலரை வீசிடவா?
கைகலந்த சந்தனம் உண்டு
மெய்மறந்து பூசிடவா…?
காதல் ரோஜா தந்து
ஆனந்தம் கொண்டு ஆடிடவா…?
ஊம்….(தேன்)

நடக்கும் மின்னல்!

கண்கள் ரெண்டும் வண்டு நிறம்
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்!
கலையே வடிவாய் வருவாள்
அவளங்கம் தங்க நிறம்! (கண்)

விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி
மண்ணில் நடந்து வந்ததுபோல்,
வண்ண மலர் மாலை கொண்டு
வாழ்வினிலே ஆசை கொண்டு,
வந்திடுவாள் நாணம் கொண்டு
மணமகளும் நானே யென்று
வாலிபரை அழகில் வென்று
வாட்டிடுவாள் சபையில் நின்று (கண்)

மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
மேகத்தோடு சிநேகம் – குறி
யாகப் பாய்ந்திடும் நாணப் பார்வைகள்
வீரன் கணையிலும் வேகம்

நளினநடை அன்னம் போலே
நௌியும் இடை மின்னல் போலே
ஆடை கொடி பின்னல் போலே
அன்பு மொழி கன்னல் போலே
நெஞ்சினிலே நேசத்தாலே
நீந்திடுவேன் மீனைப் போலே!
அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசை உள்ளம் சங்கு நிறம்
அழகே…வடிவாய் வரும்
மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்

அழகு விருந்தெனை அடைய நினைத்திடும்
ஆண்மகனும் எவரோ….?
அறிவு மிகுந்தொரு உறவு கலந்திடும்
அளவு தெரிந்தவரோ?

பகைவரிடம் பல்லைக்காட்டித்
தளபதியாய் வந்தவர் வேண்டாம்
பாவையரை அருகில் வைத்து
பார்த்து ருசி கண்டவர் வேண்டாம்

கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திட
கண்கள் விரைந்திடுதே;
இளமை குலுங்கிடும் இவரை மணந்திட
இதயம் விரும்பிடுதே (அங்கம்)

ஒன்றுபட்ட கணவனுக்கு

ஒன்றுபட்ட கணவனுக்கு
தொண்டு செய்து வாழ்வதற்கு
உரிமை கிடைத்திடுமா சொல்? – வண்ணக்
கிளியே – அன்பின்
பெருமை நிலைத்திடுமா சொல்?

கன்று நட்டு நீரிரைத்து
கண் விழித்து காத்திருந்து
பிஞ்சுவிட்டுக் கனியாகும் போதிலே – கிளையில்
துண்டுபட்டால் என்ன பலன் வாழ்விலே? (ஒன்று)

காதல் தோல்வி

காதலிலே தோல்வியுற்றான்
காளையொருவன்
கடந்தபின்னே அமைதி
எங்கு பெறுவான்? – காலம்
கடந்த பின்னே அமைதி
எங்கு பெறுவான்?

அன்புமயில் ஆடலுக்கு
மேடையமைத்தான்
துன்பமெனும் நாடகத்தைக்
கண்டு ரசித்தான் (அன்பு)

இன்பத்தினை விதிக்கு
இரை கொடுத்தான்
இருந்தும் இல்லாத
உருவெடுத்தான்

அன்பு விதை

காதலிலே தோல்வியுற்றாள்
கன்னியொருத்தி
கலங்குகின்றாள் அவனை
நெஞ்சில் நிறுத்தி

ஆசையிலே பாத்திகட்டி
அன்பை விதைத்தாள்
அல்லும்பகல் காத்திருந்து
பயிர்வளர்த்தாள் (ஆசை)

பாசத்திலே பலனைப்
பறிகொடுத்தாள்
கனிந்தும் கனியாத
உருவெடுத்தாள் (காதலிலே)

இல்லறம்

ஆனந்தம் இன்று ஆரம்பம் – மனம்
அன்பில் பிணைந்தால் – பின்
அதுவே பேரின்பம் (ஆனந்தம்)

ஆடும் கடலும் பொன்னி
ஆறும் கலந்தது போல்
கூடும் இவர்களிரு
பேரும் தேடும் உயர் (ஆனந்தம்)

மீனுடன் மானும் மங்கை
விழிகளிலே துள்ளுதே
விந்தை மிகும் மௌனம்
வீரத்தை வெல்லுதே
தேனைச் சுமந்த மலர்
மாலைச் சுமந்த அவள்
நாணிக் குனிந்த முகம்
நல்ல பண்பைச் சொல்லுதே! (ஆனந்தம்)

நல்ல குடும்பம் ஒரு
பல்கலைக் கழகம் என்று
தெள்ளு தமிழ்க் கவிஞன்
தௌிவுரை சொன்ன துண்டு;
இல்லறம் ஏற்பவர்கள்
இதனை மனதில் கொண்டு
இன்பமுடன் நடந்தால்
வாழ்வுக்கு மிக நன்று (ஆனந்தம்)

புது அழகு

பெண் : புது அழகை ரசிக்கவரும்
மனசுக் கெல்லாம் பெரும்
ஆசை பொங்கும் நேரம் – இதில்
ஆணும் பொண்ணும்
கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக் கென்ன பஞ்சமா?
(ஆணும் பெண்ணும்)

காலையில் மலர்ந்த மலர்
மாலையிலே உலர்ந்து விடும்
மனிதர் வாலிபமும் அப்படியே
வந்தது போல் சென்றுவிடும் – இதை
இன்பமென்பார் சிலநாளிலே – கொடும்
துன்பமென்பார் பலநாளில் – ஓ
இன்பமில்லை துன்பமில்லை
இயற்கையென்பார் ஒரு நாளில்
ஆண் : வாழ்க்கையிலே பாதியை நாம்
தூக்கதிலே கழிக்கலாமா! – ஆ!
வந்தபோது கோட்டைவிட்டு
போனபின் விழிக்கலாமா?
பெண் : பல கவலை ஒழிந்திட இதயம் மகிழ்ந்திடக்
கலையை விரும்பிட வேணுமே
அமுத விருந்ததில் தோணுமே
பெண்கள் உறவு கலந்திடுமே!
ஆண் : கனிந்திடுமே
பெண் : உறவு கலந்திடுமே
வளர்ந்திடுமே கனிந்திடுமே!

காதலை ஏற்கும் நிலவு!

ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும்
பருவ மென்ற காவியம்!
பார்க்க பார்க்க வளருமே
காதலின்ப ஓவியம்! (படிக்க)
பெண் : ஆ…ஆ…காதல் இன்ப ஓவியம்
ஆண் : அடுக்கடுக்காய் எண்ணம் வரும்
கண்கள் மட்டும் பேசும்
பெண் : ஆ..ஆ..பேசும்
ஆண் : அன்பு மனம் பொங்கி விட்டால்
அங்கமெல்லாம் பேசும்! (படிக்க)
தடுத்தவர்கள் வென்றதில்லை
சரித்திரமே சொல்லும் – காதல்
அடுத்தவர்கள் அறியாமல்
ரகசியமாய்ச் செல்லும்! (படிக்க)
பெண் : கள்ளமில்லாக் காதலரை
வெண்ணிலவும் ஏற்கும்!
காட்டில் வாழும் பறவைகளும்
கானம்பாடி வாழ்த்தும்!
பெண் : ஆ…ஆ… கானம்பாடி வாழ்த்தும்!
ஆண் : தொல்லை தரும் மனித குலம்
சொல்லிச் சொல்லித் தூற்றும்;
தூய்மையான உள்ளங்கைச்
சூழ்ந்து நின்று வாட்டும்! (படிக்க)

தடையில்லை!

ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடுதம்மா,
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் பெருங்கதையம்மா!
கதையம்மா! கதையம்மா!
காதல் என்றொரு கதையம்மா! (காலம்)
பெண்: காலம் என்றொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடி வர,
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் ஒரு கதை தானோ?
கதை தானோ? கதை தானோ?
காதல் என்பது கதை தானோ? (காலம்)
ஆண் : கனியாகிக் காயானால் கதைதானே – மானே
காயான வாழ்வு கொண்டேன்
என் செய்வேன் நானே
பெண் : பொருந்தாத நேசம் இல்லை
பொய் ஏதும் இல்லை
இருந்தாலும் இன்பமில்லை!
ஏன் இன்பம் இல்லை!
ஆண் : உருளும் கருவிழி மருளும் பைங்கிளி
உறவினில் ஒன்றும் குறைவில்லை
உண்மையில் அடி பெண்மயிலே – உன்
உரிமையில் என்றும் தடையில்லை (காலம்)

இல்லற ஓடம்

பெண் : இன்று நமதுள்ளமே – பொங்கும்
புது வெள்ளமே
இல்லற ஓடமிதே – இனி இன்பம்
ஏந்திச் செல்லுமே!

ஆண் : மங்கையர் குலமணியே
மஞ்சள் முகந்தனிலே
மகிழ்ச்சிகள் துள்ளுமே
வந்தென்னை அள்ளுமே!

பெண் : நேற்று நம்மைக் கண்ட நிலா
நெஞ்சுருகிச் சென்ற நிலா
வாழ்த்துகள் சொல்லுமே
மனந்தனைக் கிள்ளுமே!

ஆண் : வள்ளுவன் வழியினிலே – இனி
வாழ்க்கை ரதம் செல்லுமே

பெண் : கண்களில் ஊறும் நீரும் – இனி
நம் நிலைகாண நாணும் – சுகம்
கவிதை பாடிவரும்

கதை கட்டுவார்

ஆண் : நீயாடினால் ஊராடிடும்
நானாடினால் யாராடுவார்?
நீயாடினால் ஊராடிடும்
நானாடினால் யாராடுவார்?
மேல்நாடும் கீழ்நாடும் பார்த்தேன்
ஆண்பாடப் பெண்பாடக் கேட்டேன்
ஆனாலுன் போலெங்கும் காணேன்
(நீயாடினால்)

பெண் : சீமான்கள் கொண்டாடும் மேடை
செண்டாலே காற்றெல்லாம் வாடை
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை
கண் காட்டினால் கை தட்டுவார்
கை காட்டினால் கதை கட்டுவார்

ஆண் : கண்ட தெல்லாம் உண்மை
காத்திருக்கு நன்மை
காரியத்தில் கொஞ்சம் – கவனம்
வையம்மா – கருணை
வையம்மா

பெண் : காரணம் இல்லாமலே
கானமயிலாடுமா?
கருத்தொண்ணும் புரியாமல் – அன்ன
நடை போடுமா? – அன்ன
நடை போடுமா?

ஆண் : நீ பாடினால் நானோடுவேன்
நானாடினால் ஊராடிடும்
நீயாடினால் ஊராடிடும்
நானாடினால் யாராடுவார்?

நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

காதல் சுவை - கல்யாணசுந்தரம் பகுதி 2
திருக்குறள் குடியியல்