பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் : அரசியல் அறம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரனார் தமது பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர்.

கெட்டதை விடுங்கள்

சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சுடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க

முன்னாலே வந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க

ஒண்ணுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலும் ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )

முடியிருந்தும் மொட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய்
விழுந்துகிடக்கப் போறீங்களா?

முறையைத் தெரிஞ்சு நடந்து
பழைய நினைப்பை மறந்து
உலகம் போற பாதையிலே
உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )

வாய்ச்சொல் வீரர்

மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா-எம்
மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்
வந்ததுவரட்டும் போடா-சில ( மனு )

உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா-ராஜா
ஒலகம் இதுதாண்டா
உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரிதாண்டா-இது
உல்லாச புரிதாண்டா… ( மனு )

வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறுபசிக்கிறவன் விடமாட்டான் ( வசதி )

வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான் (மனு)

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா-நான்
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா ( மனு )

ஒரு சிறுவன்: அங்கே நானும் வாரேண்டா…
வௌியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா-சிலர்
படிக்க மறந்தது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா…. ( மனு )

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறும் போடுறான்..
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுகிறான்-இவன்
சோறு போடுகிறான்-அவன்
கூறு போடுறான்.

சூதாட்டம்

சூதாடி மாந்தர்களின்
சுகவாழ்வும் ஒருநாளில்
பாதாளம் போகுமெனல்
பாரறிந்த உண்மையன்றோ?

சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகி
கள்ள வேலைகள் செய்த கதை-சிலர்
கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை ( சொல்ல )

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன்
அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே ( சொல்ல )

போரைத் தடுப்போம்

மனிதரை மனிதர்
சரிநிகர் சமமாய்
மதிப்பது நம் கடமை
வள்ளுவப் பெருமான்
சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை,

உழைப்பை மதித்து
பலனைக் கொடுத்து
உலகில்போரைத் தடுத்திடுவோம்,
அண்ணன் தம்பியாய்
அனைவரும் வாழ்ந்து
அருள்விளக் கேற்றிடுவோம்.

மனைவியே மந்திரி!

எல்லோரும் இந்நாட்டு மன்னரே-நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னரே
நல்லாரும் பொல்லாரும்
நல்வழி செல்லாரும்
உள்ளாரும் காசுபணம்
இல்லாமல் இருந்தோரும் (எல்லோரும்)

முன்னேற்ற மில்லாமல்
மூலையிலே கிடந்தவரும்
கண்ணிலே நீர்பெருகக்
கவலையிலே மிதந்தவரும்
தண்ணீரும் காற்றுமுண்டு
தள்ளாடி நடந்தவரும்
தலைவிதியே நம்பிநம்பி
சக்கைபோல் வாழ்ந்தவரும் (எல்லோரும்)
மன்னன்: ராசாதிராசன் வந்தேனே-நான் வந்தேனே
ராசாதிராசன் வந்தேனே
எங்கும்புகழொடு இன்பம்பெருகிட
பொங்கும் வளமோடு
புவிதனை ஆண்டிடும் மகாராசா
பக்கத்துச் சேரியிலே
குறிப்பிட்ட தேதியிலே
பள்ளிக்கூடம் தொறந்தாச்சா மந்திரி?
மந்திரி!மந்திரி!!
குழு: எங்கே? எங்கே? எங்கே?
மந்திரி: அவரவர் மனைவிகளே
அவர்களுக்கு மந்திரிகள்
அன்புகொண்டு குடியரசு புரிந்திடணும்
ஆவதெல்லாம் பொதுவாய்த்தான்
நடந்திடணும் ( அவரவர் )
மன்னன்: ஆகா! ஆகா!! சபாசு!!!
ஆண்டி மடத்திலுள்ள
அட்ரசை மாத்தியதில்
ஆஸ்பத்திரி தொறந்தாச்சா மந்திரி?
மந்திரி! மந்திரி!!
மந்திரி: இப்போ-
ஆரோக்கியம் கம்மியில்லே
யாருக்கும் பிணியில்லே
ஆஸ்பத்திரி தேவையில்லே மன்னரே
குழு: ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
மன்னன்: கட்டத் துணியும்-நம்ப
கடன்கேட்ட கோதுமையும்
கப்பலில் வந்தாச்சா மந்திரி?
மந்திரி: இனி-
எட்டாத சீமைகளை
எதிர்பார்க்கத் தேவையில்லே
இங்கேதும் பஞ்சமில்லை மன்னரே
குழு: ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
மன்னன்: பாயும் புலிபோன்ற
பட்டாள வீரர்கையில்
ஆயுதம் தந்தாச்சா மந்திரி?
மந்திரி! மந்திரி!!
மந்திரி: இப்போ-
ஆயுதம் தேவையில்லே
அடிதடி வம்புமில்லே
அமைதிதான் நிலவுது மன்னரே
குழு: எங்கும் அமைதிதான் நிலவுது மன்னரே
ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!

படிப்பும் உழைப்பும்!

படிப்பு தேவை-அதோடு
உழைப்பும் தேவை-முன்னேற
படிப்புத் தேவை அதோடு
உழைப்பும் தேவை!
உண்மை தெரியும்
உலகம் தெரியும்
படிப்பாலே-நம்
உடலும் வளரும்
தொழிலும் வளரும்
உழைப்பாலே-எதற்கும் ( படி )

பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்
பலப்பல உண்டு-மன
பக்குவம் கொண்டு
மக்கள் முன்னேறக்
காரணம் ரெண்டு-அதுதான் ( படி )

வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடுகட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிர் விவரம் கண்ட
சர் சி.வி.ராமனும் தொழிலாளி!-எதற்கும் ( படி )

ஜனத்தொகை மிகுந்தாலும்
பசித்துயர் மலிந்தாலும்
பணத்தொகை மிகுந்தோர்-மேலும்
பணம் சேர்க்க முயல்வதாலும்
உழைத்தால்தான் பற்றாக்குறையை
ஒழிக்க முடியும்-மக்கள்
ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமை
மோசமாக முடியும்-எதற்கும் ( படி )

ஏழைகளின் வேர்வை

ஆ…. விஷயம் ஒன்று சொல்லப் போறேன்
கேளடி கேளு-உண்மை
வௌியாகும் நேரம் வந்தது
கேளடி கேளு

ஓ…. நடந்தது எல்லாம் தேவையில்லை
தள்ளடி தள்ளு-இனி
நடக்கப் போற சங்கதியத்தான்
சொல்லடி சொல்லு

ஓ…. வறுமையில்லே வாட்டமில்லே
வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே ஆ….
வறுமையில்லே வாட்டமில்லே
வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே

ஆ…. கொடுமையெல்லாம் மாறி வருது
கேளடி கேளு
குடிசையத்தான்-இன்பம்
குடிசையத்தான் நாடி வருது
கேளடி கேளு ( விஷயம் )
நல்லவர் போல உலகம்மீது
நரியும் கழுகும் உலவும் போது

ஆ….
நல்லவர் போல உலகம்மீது
நரியும் கழுகும் உலவும்போது
நம்மை இன்பம் நாடிவருமா
சொல்லடி சொல்லு

நிம்மதியா-உலகம்
நிம்மதியாக வாழ விடுமா
சொல்லடி சொல்லு

நடந்தது எல்லாந் தேவையில்லை
தள்ளுடி தள்ளு-இனி
நடக்கப் போற சங்கதியைத்தான்
சொல்லடி சொல்லு

ஏமாத்தும் போர்வையிலே
ஏழைகளின் வேர்வையிலே
எக்காளம் போடுற கூட்டம்-நாட்டில்
எக்காளம் போடுற கூட்டம்-மக்கள்
எதிர்த்துகிட்டா எடுக்கணும் ஓட்டம்
( விஷயம் )

பகை நீங்கும்

துணிந்தால் துன்பமில்லை
சோர்ந்துவிட்டால் இன்பமில்லை! (துணிந்தால்)

இனிமை கலந்துவரும் பாட்டிலே-மனம்
எதையும் மறந்துவிடும் கேட்டாலே! (துணிந்தால்)

கசக்கும் வாழ்விலே,கவலைவரும் போதிலே
இனிக்கும் குரலெழுப்ப,பறவையுண்டு பாரிலே!
துடிக்கும் இதயங்களே தாளம்-காற்றில்
மிதக்கும் ஓசையெல்லாம் கானம் (துணிந்தால்)

ஆராரோவென்று அன்னை பாடக் கண்டு
அமைதியிலே குழந்தை தூங்குவதுமுண்டு
வாடிடும் முல்லை ரீங்கார வண்டு
வருவது கண்டு மனம் பொங்கும் மதுசிந்தும்
பகைமை நீங்கிவிடும் பாட்டாலே-பெரும்
பசியும் தீர்ந்துவிடும் கேட்டாலே! (துணிந்தால்)

கரையேறும் பாதை

தாயில்லை தந்தையில்லை
தக்க துணை யாருமில்லை
ஒய்வில்லாக் கவலையாலே
ஒரு வழியும் தோன்றவில்லை
இலை இல்லை மலரும் இல்லை
கனி இல்லை காயும் இல்லை
தலையில்லா உருவம்போலே
வாழ்வும் ஆனதே ( இலையில்லை )
விதியே உன்வேலையோ
இதுதான் உன் ஆசையோ
கதியில்லா ஏழை எங்கள்
காலம் மாறுமோ? ( விதியே )
நிலவில்லா வானம்போலே
நீரில்லா ஆறுபோலே
சிலையில்லா கோயில்போலே
வீடும் ஆனதே ( நிலவில்லா )
ஒருநாளில் ஓயுமா
இருநாளில் தீருமோ
பலநாளும் துன்பமானால்
உள்ளம் தாங்குமோ?
கரையேறும் பாதை காணோம்
கண்ணீரில் ஓடமானோம்
முடிவில்லா வேதனை ஒன்றே
கண்ட லாபமோ? ( இலையில்லை )

நாடு கெட்டுப் போகுது

பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
கேடுகெட்ட கும்பலாலே-நீங்க
கேடுகெட்ட கும்பலாலே…. ( பாடு )

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்….சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்…. ( பாடு )
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே…

ஒன்றுபட்ட வாழ்வு

ஆண்: கதிராடும் கழனியில்
சதிராடும் பெண்மணி
கலைமேவும் அழகாலே
கவர்ந்தாள் கண்மணி
முதிராத செடியே
முல்லை மலர்க் கொடியே

பெண்: அன்பே என் ஆருயிரே
ஆணழகே என்னுடன்
தென்பாங்கு பண்பாடும்
தீராத இன்பமே!

ஆண்: ஏரோட்டும் விவசாயி
எருதுகளை ஏரியிலே

பெண்: நீராட்டும் அழகைப்பாரு கண்ணாலே!

ஆண்: பாராட்ட வேண்டியவள்
பானைதனைத் தலையில் வைத்து
பக்குவமா வாரா பாரு பின்னாலே!

பெண்: தேனாறு பாயுது
செங்கதிர் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது

ஆண்: மானே இந்நாட்டிலே
வகையான மாறுதல்
வந்தாலன்றி ஏது சீருகள்?

இருவரும்: உழவனும் ஓயாத
உழைப்பும்போல் நாமே
ஒன்றுபட்ட வாழ்க்கையில்
என்று மிருப்போம்

திருக்குறள் துறவறவியல்
தமிழக கற்கால மனிதன் வாழ்விடம்